பொதுவாக தீபம் என்பது இருளை நீக்கக் கூடியது. தீபம் ஏற்றுவதன் மூலம் நமது புறத்தே இருக்கும் இருள் நீங்குவது மட்டும் அன்றி நமது அகத்தில் இருக்கும் இருளும் நீங்குகிறது. அறியாமை என்னும் இருளில் இருந்து நாம் விடுபடுவதால் நமது சிந்தனை தெளிவாகிறது. நமது எண்ணங்கள் செயலாகிறது. அந்த செயல் வெற்றி பெற எந்த வகை தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்தப் பதிவில் காணலாம்.
தீபம் இருளை நீக்கக் கூடியது. விநாயகர் தடைகளை நீக்குபவர். விநாயகருக்கு தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் நமது எண்ணங்கள் யாவும் நிறைவேறும். காரிய சித்தி கிட்டும். விநாயகருக்கு உகந்த திதி சதுர்த்தி ஆகும். அதிலும் தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்தி திதி சங்கடஹர சதுர்த்தி ஆகும். “சங்கட” என்றால் துன்பம் “ஹர” என்றால் நீங்குதல். துன்பங்களை நீக்கி இன்பம் அளிக்கும் திதியான சங்கடஹர சதுர்த்தியில் எவ்வாறு தீபம் ஏற்றி வழிபடலாம் என்று பார்க்கலாமா?
எளிமையான வழிபாட்டிற்கு ஏராளமான பலன்களை அளிப்பவர் விநாயகர். அவரை மஞ்சளில் பிடித்தும் வழிபடலாம். களிமண்ணில் பிடித்தும் வழிபடலாம். சதுர்த்தி தினம் அன்று காலையில் எழுந்து குளித்து முடித்து தூய ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். பூஜை அறையில் விநாயகர் திருவுருவப் படம் அல்லது விக்கிரகம் வைத்துக் கொள்ளுங்கள். விநாயகருக்கு பிடித்தமான பூ எருக்கம் பூ ஆகும். எனவே அன்றைய தினம் எருக்க மாலை கிடைத்தால் வாங்கி வியாயகருக்கு சாற்றுங்கள். அருகம்புல் சாற்ற மறந்து விடாதீர்கள்.
ஒரு நல்ல எருக்க இலை ஒன்றை பறித்துக் கொள்ளுங்கள். அது பழுதில்லாமல் இருக்க வேண்டும். அதனை நன்றாக மஞ்சள் கலந்த நீரால் சுத்தம் செய்து கொள்ளுங்கள். இரண்டு அகல் விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பசும் நெய்யை ஊற்றி திரி போட்டுக் கொள்ளுங்கள். உங்கள் வேண்டுதலை மனதாரக் கூறி அந்த இரண்டு தீபங்களையும் ஏற்றுங்கள். தீபம் விநாயகரைப் பார்த்த வண்ணம் இருக்க வேண்டும்.
விநாயகர் காயத்ரி, விநாயகர் மூல மந்திரம், விநாயகர் போற்றி, விநாயகர் அகவல் அல்லது விநாயகருக்கு உரிய பாடல்களைப் பாடி விநாயகருக்கு நைவேத்தியம் செய்து தூப தீப ஆராதனை காட்டி உங்கள் பிரார்த்தனையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
இந்த தீபத்தை ஒவ்வொரு மாதமும் ஏற்றலாம். அதிலும் குறிப்பாக விநாயகப் பெருமானுக்கு உகந்த திதியான சதுர்த்தி அன்று ஏற்றுவது மிகவும் சிறப்பு. வளர்பிறை சதுர்த்தியாக இருந்தாலும் ஏற்றலாம், தேய்பிறை சதுர்த்தியாக இருந்தாலும் ஏற்றலாம்.
இப்படி நீங்கள் தொடர்ந்து தீபம் ஏற்றி வர உங்கள் முயற்சிகளில் ஏற்படும் தடைகள் யாவும் நீங்கி உங்கள் செயல்கள் வெற்றி பெறும். நீங்கள் நினைத்ததை நினைத்த வண்ணம் அடையலாம். உங்கள் காரியங்கள் யாவற்றிலும் சித்தி கிட்டும்.
September 11, 2025
September 10, 2025
September 10, 2025