Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
எதிர்மறை ஆற்றல் நீக்கும் தை செவ்வாய் கிழமை துர்க்கை வழிபாடு
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

எதிர்மறை ஆற்றல் நீக்கும் தை செவ்வாய் கிழமை துர்க்கை வழிபாடு

Posted DateJanuary 16, 2025

ஆடி மாதம் அம்மன் மாதம் என்பது போல தை மாதமும் அம்மன் வழிபாடு செய்ய உகந்த மாதம் ஆகும். அதிலும் குறிப்பாக தை  செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை  அம்மனை வழிபட வேண்டும். துர்கை அம்மனை தொடர்ந்து வழிபட எதிரிகள் தொல்லைகள் நீங்கும். கண் திருஷ்டி விலகும். தீய சக்திகள் அண்டாது. குறிப்பாக ஜாதகத்தில் காணப்படும் ராகு தோஷம் நீங்கும். இந்தப் பூஜையை நாம் எவ்வாறு செய்வது என்று இந்தப் பதிவில் காணலாம் வாருங்கள்.

தீய சக்திகளை வேரறுக்கும்  துர்கை

துர்கை அம்மனுக்கு  ஆலயத்தில் ராகு கால பூஜை விமரிசையாக நடைபெறும். ஆலயம் சென்று துர்கை அம்மனுக்கு விளக்கேற்றி அர்ச்சனை செய்து அவளை வழிபடுவதன் மூலம் பல நன்மைகளை வாழ்வில் பெற முடியும். துர்கை அம்மன் அசுரரை வதம் செய்தவள். அவளை நாம் பூஜித்தால் அவள் கெட்டதை  நமக்கு காட்டிக் கொடுப்பாள். நமக்கு எதிராக செயல்படுபர்கள் யார் யார் என்று நாம் சில சமயங்களில் அறியாமல் இருக்கலாம். நமக்கு எதிர்மறையாக செயல்படுபவர்களை  நாம் உணர வைப்பாள்.

குத்து விளக்கு

கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் ராகு கால பூஜை செய்யலாம். பொதுவாக நாம் துர்கை படத்தை வீட்டில் வைத்துக் கொள்வதில்லை. எனவே துர்கை திருவுருவப் படம் இல்லை என்று கவலைப் படாதீர்கள். தை மாதம் செவ்வாய்க் கிழமை அன்று காலை எழுந்து குளித்து முடித்து சுத்தமான ஆடை அணிந்து கொள்ளுங்கள். வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ளுங்கள். பூஜை அறையையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.  குத்து விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். ஐந்து முகத்திலும் திரி போட்டு குத்து விளக்கை ஏற்றிக் கொள்ளுங்கள். அதனையே துர்கை அம்மனாக பாவித்துக் கொள்ளுங்கள். குத்து விளக்கிற்கு மஞ்சள், குங்குமம் அட்சதை மற்றும் மலர்கள் சாற்றி பூஜை செய்ய வேண்டும். துர்கை அம்மனுக்கு உரிய பாடல்களைப் பாடலாம். துர்கை அம்மன் 108 போற்றி மந்திரத்தை பாராயணம் செய்யலாம். இந்த பூஜையை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளலாம். குறிப்பாக ராகு காலத்தில் இந்த பூஜையை செய்யலாம்.

திருஷ்டி தோஷம் நீக்கும் துர்கை அம்மன் பரிகாரம்.

பூஜை ஆரம்பிக்கும் முன் ஒரு பித்தளை பாத்திரம் அல்லது டம்ளர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு, 1 கைப்பிடி அளவு கல் உப்பு போட்டு விடுங்கள். செவ்வரளி பூ இருந்தால் இரண்டு அந்த தண்ணீரில் போட்டு, அம்மன் முன்பாக வைத்துவிட்டு மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி, சூனியம், கெட்ட சக்தி, செய்வினை, எதிர்மறை ஆற்றல் அனைத்தும் வீட்டிலிருந்து வெளியேற வேண்டும். வீட்டில் தெய்வசக்தி நிலைத்திருக்க வேண்டும் என்று, மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பூஜை முடிந்த  பிறகு இந்த தீர்த்தத்தை நிலை வாசல் படியில் இருந்து, வீட்டிற்குள் தெளித்துக் கொண்டே வரவேண்டும். வீட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் தெளிக்க வேண்டும். பூஜை அறையிலும் தெளிக்க வேண்டும். வெளியிலிருந்து உள் பக்கமாக தெளித்து வாருங்கள். “ஓம் துர்கா தேவியே நமஹ  ! ஓம் துர்கா தேவியே நமஹ !” என்று சொல்லிக் கொண்டு தீர்த்தத்தை தெளித்து விட்டு, மீதம் இருக்கும் தண்ணீரை வீட்டை சுற்றி தெளிக்கலாம்.

இவ்வாறு தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்து வர துர்கை அன்னையின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும். பிறருடைய திருஷ்டி உங்களை தாக்காது. உங்கள் வீட்டில்  இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் விலகும்.