இன்றைய தினம் 2-12-2024 கார்த்திகை மாதம் மூன்றாவது சோமவாரம். கார்த்திகை மாதம் என்றாலே தீபங்கள் ஜொலிக்கும். எங்கும் தீப ஒளி பரவி இருக்கும் இந்நாட்களில் இறை அருளும் நிரம்பி இருக்கும். கார்த்திகை மாதம் முருகப் பெருமானுக்கு உகந்த மாதம் என்றாலும் சிவனுக்கும் இது உரிய மாதம் ஆகும் அதுவும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். கார்த்திகை சோம வாரத்தில் சிவ வழிபாடு செய்வதன் மூலம் வாழ்வில் தீவினைகள் நீங்கி இன்பம் பெருகும். மோட்சத்திற்கான வழி கிட்டும். இந்த கார்த்திகை சோம வாரம் மிகவும் விசேஷம் வாய்ந்த நாள் ஆகும். காரணம் இன்று மூன்றாம் பிறையும் இணைந்து வருகிறது. சோமன் என்றால் சந்திரன். பிறையைத் தனது தலையில் சூடி சோமேஸ்வரனாக காட்சி தரும் சிவனை இன்று வழிபட சகல பாவங்களும் தீரும். இன்று சந்திர வழிபாடும் சாலச் சிறந்தது.
சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது. அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம். இந்த விரதத்தைப் போன்று வேறு எந்த விரதத்திலும் சிவபெருமான் திருப்தி அடைய மாட்டார் என்பது ஐதீகம். சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப் பிடிக்கலாம்.கார்த்திகை சோம வாரமான இன்று அனைத்து சிவன் கோவில்களிலும் அர்ச்சனை அபிஷேகம் நடக்கும். சில கோவில்களில் சிவனுக்கு சங்காபிஷேகம் நடை பெறும். இதுமிகவும் விசேஷமான ஒன்றாகும். இன்றைய தினம் சிவ வழிபாடு மேற்கொள்வது மட்டும் இன்றி சிவனுக்கு உரிய அபிஷேகப் பொருட்களை வாங்கி அளிக்கலாம். சிவன் கோவில்களில் நடை பெறும் சந்காபிஷேகத்தில் கலந்து கொண்டு அதற்கும் தேவையான பொருட்களை நீங்கள் அளிக்கலாம்.
சோமவார விரதம் ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டியதாகும். என்றாலும், கார்த்திகை மாதத்துச் சோமவாரங்கள் (திங்கள் கிழமைகள்) தனிச் சிறப்பு பெறுகின்றன.சோமவாரம் என்பது வார நாட்களில் திங்கட்கிழமையைக் குறிப்பது. ஒரு முறை சாபத்தின் காரணமாக சந்திரன் தேய்ந்து போனான். அந்த சாபம் நீங்க, சிவபெருமானை நினைத்து தவம் இருந்தான், சந்திரன். அதன் பயனாக அவன் சாபம் நீங்கப்பெற்றான். மேலும் நவக்கிரகங்களில் ஒருவராகும் வாய்ப்பையும் பெற்றான். அவன் பெயரில் உருவானதே சோமவார விரதமாகும். இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு துன்பங்கள், பாவங்கள் விலகுவதுடன், நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.
சந்திரன் கடைபிடித்து மேன்மை பெற்ற விரதம் ஆதலால் கார்த்திகை மாதம் திங்கட்கிழமைகளில் இவ்விரதத்தை கடைபிடிப்பார்கள். இந்த விரதம் பாவங்களை நீக்கும். நோய்களைப் போக்கும்.
இன்றைய தினம் காலையில் எழுந்து நீராடி பூஜை அறையை தூய்மை செய்து விளக்கு ஏற்றி சிவனை வழிபட வேண்டும். சிவன் படம் இருந்தாலும் சரி அல்லது லிங்கம் இருந்தாலும் சரி அதற்கு வில்வ இலை சாற்றி வழிபட வேண்டும். இரண்டும் இல்லாவிட்டாலும் இரண்டு தீபங்கள் ஏற்றி சிவனை மனதார நினைத்து வழிபடலாம். இன்றைய தினம் விரதம் இருக்கலாம். அருகில் இருக்கும் சிவன் கோவில் சென்று அபிஷேகத்திற்கு உரிய பொருட்களை வாங்கி அளித்து அதில் பங்கு கொள்ள வேண்டும். இரவில் மூன்றாம் பிறையைதரிசனம் செய்து உங்கள் விரதத்தி முடித்துக் கொள்ளலாம்.
இவ்வாறு வழிபாடு செய்வதன் மூலம் நீங்கள் வேலையில் முன்னேற்றம் காணலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பதவி உயர்வு கிட்டும். உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற சிவனின் அருள் கிட்டும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025