கேரளாவில் பந்தள மகாராஜா தனக்கு குழந்தையில்லையே என்று வருத்தமுடன் வாழ்ந்து வந்தார். அந்த சமயத்தில் மகிஷி என்ற அரக்கி இருந்தாள் அவள் தனக்கு சிவன் மற்றும் விஷ்ணுவிற்கு பிறக்கும் குழந்தையால் மட்டுமே மரணம் ஏற்பட வேண்டும் என்று பிரம்மனிடம் வரம் வாங்கி இருந்தாள். எனவே தனக்கு மரணம் இல்லை என்ற எண்ணத்தில் ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள். அவர்களுக்கு உதவ சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர்தான் ஐயப்பன். விஷ்ணு மோகினியாக மாற, சிவனுக்கும் மோகினிக்கும் (விஷ்ணுவுக்கும்)ஐயப்பன் பிறந்தார். இறைவன் தனது லீலையை நடத்த குழந்தையை ஒரு மரத்தடியில் விட்டு விட்டனர். அப்பொழுது பந்தள ராஜா அந்த வழியே வந்தார். வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் குழந்தையின் அழுகுரல் கேட்டான். எங்கு குழந்தை அழுகிறது என பதைபதைத்து தேடி மரத்தடியில் ஜொலிக்கும் தேஜசுடன் குழந்தை ஐயப்பனைக் கண்டான். குழந்தையில்லா குறை தீர்க்கவே இந்த குழந்தை இங்கு இருக்கிறதா என மகிழ்ந்து அந்தகுழந்தையை அரண்மனை கொண்டு சென்றான். அரசனும் அரசியும் கழுத்தில் மணியுடன் பிறந்ததால், குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயரிட்டு அன்போடு பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர். இந்நிலையில் மகாராணிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரசனும் அரசியும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. மணிகண்டன் வந்த நேரம் நமக்கும்குழந்தை பிறந்தது என ஆனந்தம் அடைந்தனர். ஆனால் எங்குமே நல் மனதைக் கெடுக்கும் புல்லுருவிகள் இருக்குமல்லவா? ஐயப்பன் உங்களுக்கு பிறந்த மகன் அல்ல. ஆனால் அவனையே தலைப்பிள்ளை போல் சீராட்டி வளர்க்கிறீர்கள். அதனால் அடுத்த மன்னனாக அவன் வரவே வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு பிறந்த குழந்தையிருக்க வேறுயாரோ எப்படி அரசனாவது என அரசியின் மனதில் நஞ்சைக் கலந்தனர் சிலர். எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பது போல தீயபோதனைகளால் அரசியும் மனம் மாறினாள். தான் வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யுரைத்தாள். அரசவை வைத்தியரை புலிப்பால் குடித்தால் மட்டுமே தன் வயிற்று வலி தீரும் என கூற வைத்தாள். ஐயப்பன் அறிய மாட்டானா உண்மையை. தாய்க்கு புலிப்பால் கொண்டு வர காடு நோக்கி புறப்பட்டான். வழியில் அரக்கி மகிஷி ஐயப்பனைத் தடுததாள்.வில்லெடுத்தான் வில்லாளி வீரன். வதம் செய்தான் மகிஷியை. அவன் அவதார மகிமை பூர்த்தி பெற்றது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இந்திரனே புலியாக மாற, மற்ற தேவர்கள் புலியாக புடை சூழ புலிமேல் ஏறி நாடு சென்றான் ஐயப்பன். புலிமேல் வந்த மணிகண்டனைக் கண்டு பதறிப் போனாள் அரசி. தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு புலிகளை திருப்பி அனுப்புமாறு வேண்டினாள்.ஐயப்பனும் அவ்வாறே செய்து அருளினார். மேலும் தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்குவருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக் கோலத்தில் அமர்ந்தார் அருள்தரும் ஐயப்பன். இன்றும் நாம் ஐயப்பனை அங்கு அந்த தவக் கோலத்தில் காணலாம்.
சபரிமலை செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் ஒரு குருநாதர் மூலம் மாலை அணிந்து கொள்வார்கள். அதிக தடவை சென்று வந்தவர்கள் வீட்டிலேயே கூட மாலை அணிவார்கள். ஐயப்ப பக்தர்கள் இயன்றவரை கார்த்திகைத் திங்கள் முதல் நாள் மாலை அணிந்து கொள்வது சாலச்சிறந்தது. அன்று நாள், கிழமை பார்க்க வேண்டியதில்லை. அதற்குப் பின் மாலை அணிபவர்கள் கார்த்திகை 19-ந் தேதிக்குள் ஏதாவதொரு நல்ல நாளில் மாலை அணியலாம். எப்படியும் சன்னிதானத்திற்குச் செல்லும் தினத்திற்கு முன்னதாக குறைந்தது ஒரு மண்டலம் விரதம் இருக்கும் படி பார்த்து அதற்குள் மாலை அணிந்து கொள்ளவேண்டும்.ஒரு பக்தன் எப்பொழுது மாலை இடுகின்றானோ அன்றிலிருந்து விரதம் ஆரம்பமாகின்றது. அவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் விரதம் இருப்பார்கள். இந்த நாற்பத்தி எட்டு நாட்களும் அவர்கள் எளிய வாழ்க்கை வாழ்வார்கள். அது மட்டும் அன்றி ஆன்மீக ஈடுபாட்டுடன் இருப்பார்கள். இரண்டு வேளை குளிப்பது, கோவிலுக்கு செல்வது, ஒரு வேளை உணவு உண்டு விரதம் இருப்பது, காலில் செருப்பு இல்லாமல் நடப்பது, நீலம் அல்லது கருப்பு நிற ஆடைகள் அணிதல் போன்ற விதி முறைகளை கடை பிடிப்பார்கள். மலைப்பயணம் செய்து சுவாமியை தரிசிக்கவேண்டும் என்ற தன் ஆவலை வெளிப்படுத்துவதற்காகவே மாலை அணியப்படுகிறது. இதனை மாலையிடல் என்பர். பெரும்பாலும் ஐயப்ப பக்தர்கள் துளசிமாலை அணிவது வழக்கம். அதில் ஐயப்ப உருவம் பொறித்த ‘லாக்கெட்’ கோக்கப்பட்டிருக்கும். மாலை அணிந்துவிட்டால், பக்தர்கள் உலகியல் இன்பங்களிலிருந்து விடுபட்டு எளிய வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும்.புகை பிடித்தல், மதுவருந்துதல் போன்ற தீய பழக்கங்களைக் கட்டாயமாக விட்டுவிடவேண்டும். பக்தர்கள் இல்லற இன்பங்களிலிருந்தும் விடுபட்டிருக்கவேண்டும். சபரி மலை சென்று தரிசனம் செய்து வீடு திரும்பிய பிறகு மாலையைக் கழற்றலாம்.
சபரி மலைக்கு ஐயப்ப தரிசனம் காண செல்லும் பக்தர்கள் ஒரு மண்டலம் விரதம் இருப்பார்கள். ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள் ஆகும். 41 நாட்கள். விரதமும் சென்று வர 7 நாட்கள் என்னும் கணக்கில் விரதம் இருப்பார்கள். விரதக் காலத்தில் பக்தர்கள் எளிய வாழ்க்கை நடத்துவர். மாலை அணிந்துவிட்டால் விரதம் தொடங்கிவிட்டதாகப் பொருள். பெரும்பாலும் சனிக்கிழமை அல்லது சுவாமி ஐயப்பனின் பிறந்த நட்சத்திரமான உத்திர நன்னாளில் மாலை அணிவது சிறப்பு. விரதம் கடை பிடிக்கும் ஒவ்வொருவரும் விரத சமயங்களில் ஒழுக்கமான ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும். இந்த விரதம் சுயக் கட்டுப்பாட்டை வளர்க்கும் விரதம் ஆகும். விரத நாட்களில் கறுப்பு ஆடை அணிவது வழக்கம். உலகியல் இன்பங்களிலிருந்து விடுபட்டிருக்கும் நிலையையே கறுப்பு நிறம் குறிப்பிடுகிறது. இக் கால அளவில் முடி வெட்டுவது, க்ஷவரம் செய்வது, நகம் வெட்டுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
சபரி மலை செல்லும் பக்தர்கள் தங்கள் வழி பயணத்திற்கு தேவையான பொருட்கள் மற்றும் பூசைப் பொருட்களை எடுத்துச் செல்வது வழக்கம். அவ்வாறு தேவைப்படும் பொருட்களை துணிப் பைக்குள் நிரப்பி கட்டுவதே இரு முடிக் கட்டு எனப்படும். இந்த நிகழ்வானது குருசுவாமியின் முன்னிலையில் நடைபெறும். ஆரம்ப பூஜைகளுக்குப் பின் தேங்காயில் பசு நெய் நிறைக்கப்படுகிறது. முன்னதாக சகிரி நீக்கி தேங்காய் சுத்தமாக்கப்படுகிறது; தேங்காய் நீர் ஒரு சிறு துளை வழியாக வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு செய்வது, உள்ளத்திலிருந்து உலகியல் இன்பங்களை வெளியேற்றி, ஆன்மீகச் சிந்தனைகளை நிறைப்பதன் குறியீடாகக் கருதப்படுகின்றது. இவ்வாறாக ஐயப்பனுக்காக நெய் நிறைக்கப்படும் தேங்காய் ‘நெய்த்தேங்காய்’ என அறியப்படுகின்றது. இரண்டு பகுதிகளுள்ள இருமுடிக்கட்டின் முன் பகுதியில் நெய்த்தேங்காவும், ஐயப்பனுக்கும் பிற தேவர்களுக்குமான வழிபாட்டுப் பொருட்களும் நிறைக்கப்படுகின்றன. பின்னர் நூலால் பத்திரமாகக் கட்டிவைப்பர். இருமுடிக்கெட்டின் இப்பகுதி ஆன்மீக சக்தி வாய்ந்ததாகும். கோயில் வளாகத்தில் ஆங்காங்கே உடைக்கவேண்டிய தேங்காய்கள் கட்டின் அடுத்த பகுதியில் நிறைக்கப்படுகின்றன. தலையில் இருமுடிக்கெட்டுடன் செல்கின்ற பக்தர்கள் மட்டுமே புனிதமான பதினெட்டு படிகள் ஏறி சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். இருமுடிக்கெட்டு இல்லாதவர்கள் வேறு வழியாகச் சென்று ஐயப்பனை தரிசிக்கலம்.
பேட்டை துள்ளல் ஒரு சடங்காகும். சுவாமி ஐயப்பன், மஹிஷி என்னும் துர்தேவதையை கொன்று வெற்றிகொண்டதன் நினைவாக பேட்டைதுள்ளல் ஆட்டம் ஆடப்படுகின்றது. ஆண்டுதோறுமுள்ள சபரிமலை புனிதப் பயணக்காலம் ஆரம்பித்ததன் அறிகுறியாகவும் இது நடத்தப்படுகிறது. இந்த கோவிலுக்கு செல்ல பெரும் பாதை மற்றும் சிறு பாதை இரண்டும் உள்ளது.
பேட்டை துள்ளல் முடித்து பம்பை நதியில் நீராடி பதினெட்டு படி ஏறிச் சென்று ஐயப்பனை தரிசிப்பார்கள. இந்நதியில் முங்கி எழுந்தால் எல்லா தீமைகளும் நீங்கப்பெற்று புனிதமாகலாம் என்பது நம்பிக்கை. இந்த நதியின் கரையில் தான் பந்தள மகாராஜா ஐயப்பனை கண்டு எடுத்தார் என்பதால் இந்த இடம் புனிதமானதாக கருதப்படுகிறது. பம்பையிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் சன்னிதானம் உள்ளது.
பொதுவாக குருசுவாமியாக இருக்கும் அணித்தலைவர், குளத்தில் குளித்துவிட்டு, நெய் நிரப்பிய தேங்காய்களை உடைத்து, அந்த நெய்யை ஒரு ஜாடியில் சேகரித்து கோவிலுக்கு கொடுப்பார். சடங்கு முடிந்ததும், பூசாரி நெய்யின் ஒரு பகுதியை பக்தருக்குத் திரும்பக் கொடுப்பார். தெய்வீக பிரசாதமாக கோவிலில் இருந்து கிடைக்கும் நெய்யை மீண்டும் கொண்டு வருகிறார்கள். நெய் என்பது மனித ஆன்மாவின் பிரதிநிதித்துவம், பக்தர்கள் அதை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகத்தில் சமர்ப்பிக்கும்போது, ஆன்மா பரமாத்மாவுடன் ஒன்றிணைகிறது. நெய் என்பது ஜீவாத்மா, ஐயப்பன் பரமாத்மா. ஐயப்பனுக்கு காணிக்கையாக சுற்றத் தார்களும், மற்றவர்களும் கொடுத்தனுப்பும் காணிக் கையை சன்னிதானத்தில் செலுத்தி, அவர்களுக்கு ஐயப்பன் திருவருள் கிடைக்க வேண்டிக் கொள்ள வேண்டும்.
யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் ஐயப்பனின் திருவருள் பிரசாதக் கட்டினை தலையில் ஏந்தியபடி, வாயிற்படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டிற்குள் நுழைய வேண்டும். வழிபாட்டு அறையில் கற்பூர ஆர்த்தியோடு கட்டினை அவிழ்த்து பூஜை செய்து பிரசாதங்களை எல்லோருக்கும் வழங்க வேண்டும். யாத்திரை இனிதே நிறைவேறியதும் குருநாதர் மூலம் மாலையைக் கழற்றி ஐயப்பன் திருவுருவப்படத்திற்கு அணிவித்து விட்டு விரதம் பூர்த்தி செய்து கொள்ளவேண்டும்
September 19, 2025
September 17, 2025
September 15, 2025