சிவபெருமானின் ருத்ர அம்சமாகத் தோன்றிய சொரூபமே காலபைரவர் ஆவார். அந்தகாசுரன் என்ற அசுரனை வதம் செய்வதற்காக சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து அவதரித்தவர் காலபைரவர். பைரவர் எட்டு வடிவங்களில் அருள் செய்கிறார். இவரை அஷ்ட பைரவர்கள் என அழைக்கிறோம். பைரவர் பொதுவாக நான்கு திருக்கரங்களுடன் காணப்படுவார். சில இடங்களில் அரிதாக 14 மற்றும் 32 திருக்கரங்களுடன் காட்சி தருவார். அனைத்து சிவன் கோயிலின் வடகிழக்குப் பகுதியில் காலபைரவர் சன்னிதி நிச்சயம் அமைந்திருக்கும். நின்ற திருக்கோலத்தில் நிர்வாணமாகக் காட்சி தரும் இவர், நாகத்தை பூணூலாகவும் பிறையை தலையிலும் அணிந்து காட்சி தருவார்.
சிவாலயங்களில் காவல் தெய்வமாக விளங்குபவர் காலபைரவர். பைரவர் என்ற சொல்லுக்கு பயத்தைப் போக்குபவர் என்று பொருள். மனதார நினைத்து வழிபடுபவர்களுக்கு உடனடியாக அருளை தரக்கூடியவர் காலபைரவர். காலத்தின் கடவுள் என்று சொல்லப்படுவதால் ஒருவரின் தலைவிதியையே மாற்றும் சக்தி காலபைரவருக்கு உண்டு. நவக்கிரகங்களையும் நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்த வல்லவர் என்பதால் இவரை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள், நவக்கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மீண்டு வர முடியும். இவர் சனீஸ்வர பகவானின் குரு எனவும் அழைக்கப்படுகிறார். சனீஸ்வர பகவானுக்கு குரு என்பதால் காலபைரவரை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் இன்னல்களில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.
கால பைரவர் சிவபெருமானின் உக்கிரமான வடிவம் என்று கூறப்படுகிறது மற்றும் கால பைரவ ஜெயந்தி நாளில் அவருடைய வழிபாடு அனைத்து சிவாலயங்களிலும் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கால பைரவர் அவதரித்த நாளே கால பைரவ ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, காலபைரவர் ஜெயந்தி நவம்பர் 22, வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும். சிவ பக்தர்கள் இந்த நாளை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
கால பைரவ வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றி நாம் நாரத புராணத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். கால பைரவ ஜெயந்தியை அனுசரிப்பவர்கள் காலையில் அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் எழுது நன்னீராடி தூய ஆடை உடுதித்க் கொள்ள வேண்டும். அதன் பிறகு பைரவர் ஜெயந்தி விரதம் இருப்பதற்கான சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். முன்னோர்களை நினைவு கூர்ந்து அவர்களையும் வழிபட வேண்டும். காலை அல்லது மாலையில் அருகில் இருக்கும் சிவாலயத்தில் கால பைரவர் சன்னிதி சென்று வழிபட வேண்டும். அவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. அர்ச்சகர்கள் மூலம் அரச்சனை தூப தீப ஆராதனைகளை செய்து மலர் சாற்றி வழிபட வேண்டும். அன்று முடிந்தவர்கள் விரதம் இருக்கலாம். முடியாதவர்கள் தங்கள் சக்திகேற்றவாறு விரதம் இருக்கலாம். மேலும் அன்றைய தினம் பைரவரின் வாகனமான கருப்பு நாய்க்கு உணவு அளிப்பது நல்லது. கால பைரவ ஜெயந்தி அன்று நாய்களை போஷிப்பதும் அவைகளுக்கு உணவு அளிப்பதன் மூலம் பாவங்கள் அகன்று காலத்தின் கடவுளாம் பைரவரின் அருள் கிட்டும்.
இந்நாளில் கால பைரவரை வழிபட்டால் அனைத்து நோய்களும், உடல் உபாதைகளும் நீங்கும். நவக்ரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். வேலை வாய்ப்புகள் கிட்டும். பொருளாதார மேன்மை ஏற்படும்.
ஓம் கால காலாய வித்மஹே!
காலஹஸ்தாய தீமஹி
தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத்
September 19, 2025
September 17, 2025
September 15, 2025