நவராத்திரி – நவ என்றால் ஒன்பது ராத்திரி என்றால் இரவுகள். நவராத்திரி என்பது அம்பிகையை போற்றி வணங்குவதற்கான நாட்கள் ஆகும்.
நவராத்திரி ஒன்பது நாட்களிலும் ஒவ்வொரு அம்பிகையை ஒவ்வொரு விதமான மந்திரங்கள் சொல்லி பூஜிக்க வேண்டும். முதல் மூன்று நாட்கள் துர்காவிற்கும் அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மி தேவிக்கும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரிய நாட்கள் ஆகும்.
அம்பிகை வழிபாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பது போலவே இந்த நவராத்திரியில் கொலு பொம்மைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. உலக உயிர்கள் இந்த பிரபஞ்சத்தில் தோன்றக் காரணமாக இருக்கும் அம்பிகையை போற்றும் வண்ணம் ஒன்பது படி அமைத்து ஒவ்வொரு படியிலும் ஓரறிவு ஜீவன் முதல் பரமாத்மா வரையிலான பொம்மைகளை அடுக்கி நடுவில் கலசம் வைத்து வழிபாடு செய்வார்கள். ஒரு சிலர் வீட்டில் கலசத்தில் மஞ்சள் நீர் வைத்து மாவிலை வைத்து தேங்காய் வைப்பார்கள். ஒன்பது நாட்கள் பூஜை முடிந்ததும் அந்த நீரை வீடு முழுவதும் தெளித்து விடுவார்கள். தேங்காயை இனிப்பு செய்து சாப்பிடுவார்கள். வேறு சிலர் வெற்றிலை வைத்தது மாதுளம் பழத்தை வைப்பார்கள். மாதுளை லக்ஷ்மி தேவிக்கு உகந்த பழம் ஆகும். ஒரு சிலர் கலசத்தில் அரிசி, பாதாம்பருப்பு, பேரிச்சை போன்றவற்றை வைப்பார்கள். அவரவர் வீட்டு வழக்கபடி இது மாறுபடலாம். ஒன்பது நாட்கள் ஒன்பது வகையான சுண்டல் செய்து நைவேத்தியம் செய்வார்கள். பல பேர் வீட்டில் படி அமைத்து கொலு பொம்மைகளை வைத்து வழிபடும் வழக்கம் இருக்கும். அவர்கள் முன்னோர்கள் செய்தது போலவே வழிபடுவார்கள். ஒரு சிலர் கடைசி மூன்று நாட்கள் மட்டும் பொம்மைகள் வைத்து கொண்டாடுவதும் உண்டு.
எல்லோருக்கும் நவராத்திரியில் கொலு வைத்து வழிபாடு செய்வது என்பது ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் ஒரு சில பேர் வீட்டில் இந்த வழக்கம் இருக்காது. வழக்கம் இல்லாதவர்கள் வீட்டில் கலசம் நிறுத்திக் கொலு வைக்க மாட்டார்கள். புதுசாக இந்த வழக்கத்தை நாம் துவங்கலாமா என்று கேட்டால், துவங்கலாம். ஆனால் அந்த வழக்கம் பாதியில் நிற்கக்கூடாது. இந்த வருடம் கலசம் நிறுத்திக் கொலு வைத்தால், அடுத்தடுத்த வருடங்கள் அதை தடைபடாமல் அந்த வழிபாட்டை நாம் மேற்கொள்ள வேண்டும். ஆசைக்காக ஒரு வருடம் கொலு வைப்பது, 1 வருடம் கொலு வைக்காமல் விடுவது என்று இருக்கக் கூடாது. இதுதான் சாஸ்திரம்.
இந்த விழாவில் இன்னொரு சிறப்பம்சம் யாதெனில் நவராத்திரி முதல் நாளில் ஏற்றும் விளக்கு ஒன்பது நாட்கள் தொடர்ந்து எரியும் வண்ணம் விளக்கு ஏற்றுவார்கள். இதற்கு அகண்ட தீபம் என்று பெயர். இது அம்பிகையை விளக்கு ரூபத்தில் வழிபடுதல் ஆகும். ஒரு பெரிய அகல் விளக்கு வாங்கிக் கொள்ளுங்கள். பித்தளை விளக்கும் இருக்கலாம். ஆனால் சற்று பெரிதாக இருக்க வேண்டும். அதில் சுத்தமான பசு நெய் ஊற்றி கொஞ்சம் தடிமனான திரி எடுத்து போட்டு,நவராத்திரி முதல் நாள் காலை நல்ல நேரம் பார்த்து ஏற்ற வேண்டும். ஒரு சிலர் முக்கூட்டு எண்ணெயில் விளக்கு ஏற்றுவார்கள். நெய், நல்லெண்ணெய் மற்றும் இலுப்ப எண்ணெய் இந்த மூன்றையும் கலந்து விளக்கு ஏற்ற வேண்டும். 9 நாட்களும் எங்களுடைய வீட்டுக்கு அருளாசி கொடுக்க வேண்டும் என்று அம்பிகையை வேண்டிக்கொண்டு, இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இரவு பகல் என ஒன்பது நாளும் எரிய வேண்டும். இந்த விளக்கை ஏற்றி வைத்து விட்டு வீட்டை பூட்டக் கூடாது. யாராவது ஒருவராவது வீட்டில் இருந்தபடி இந்த விளக்கிற்கு அடிக்கடி எண்ணெய் ஊற்றி விளக்கு அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் ஒரு சுண்டல் நெய்வேத்தியம் வைத்து வழிபாட்டை மேற்கொள்ளலாம். குறைந்த பட்சம் 5 சுமங்கலி பெண்ககளை உங்கள் வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலம் தட்சணை வைத்து கொடுக்க வேண்டும். இந்த அகண்ட தீப, அணையா தீப வழிபாட்டை மேற்கொண்டாலும், நீங்கள் நவராத்திரி கொலு வைத்து, கலசம் வைத்து வழிபாடு செய்த புண்ணியத்தையும் பலனும் பெற முடியும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025