மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக பதினைந்து நாட்கள் மேலுலகில் இருந்து பூமிக்கு வந்து நம்மோடு தங்கிச் செல்லும் காலமே மகாளய பட்சம் எனப்படும். இது புரட்டாசி மாதத்து பௌர்ணமி திதிக்கு மறுநாள் பிரதமை திதியில் துவங்கி அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை இவைகளை விட உயர்ந்தது மகாளய அமாவசை. மறந்து போனவனுக்கு மகாளயபட்சம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதாவது முன்னோர்களுக்கு ஒரு வருடமாக திதி கொடுக்காமல் மறந்து இருந்தால் அவர்கள் மகாளய அமாவசை அன்று கொடுத்தால் அந்த ஓரு வருட திதி கொடுத்தபலன் வந்து சேரும்.
மற்ற மாதங்களில் அமாவாசை அன்று தர்ப்பணம் செய்ய வேண்டும். நமது முன்னோர்கள் மறைந்த திதி அன்று சிரார்த்தம் செய்வோம். ஆனால் மகாளயபட்சத்தில் பிரதமை திதி துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். அது மட்டும் அன்று. ஒட்டு மொத்த முன்னோர்களையும் நினைவு கூற வேண்டும். புண்ணிய தீர்த்தங்களுக்கு சென்று புனித நீராடி நமது முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து வர வேண்டும். அந்தணர்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு அன்ன தானம் அளிக்க வேண்டும்.
மகாளய பட்ச காட்லத்தில், வெங்காயம் சேர்க்கக் கூடாது. எண்ணெய் ஸ்னானம் கூடாது. முகச்சவரம் செய்யக் கூடாது. தாம்பத்தியம் கூடாது. வெளியில் சாப்பிடக் கூடாது. சாப்பிடுவதற்கு முன் காக்கைக்கு உணவு அளிக்க வேண்டும்.ஒரு வேளை மட்டுமே உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். பசி தாங்க முடியாதவர்கள் இரவில் ஏதாவது பலகாரம் சாப்பிடலாம். .சுமங்கலிப் பெண்கள் கண்டிப்பாக இரவில் ஒரு கவளமாவது உணவு உண்ண வேண்டும்.
இந்த ஆண்டு மகாளய அமாவாசை அக்டோபர் 02ம் தேதி புதன்கிழமை, உத்திரம் நட்சத்திரத்துடன் இணைந்து வருகிறது. உத்திரம், சூரியனுக்குரிய நட்சத்திரமாகும். சூரிய பகவானே பித்ரு காரியங்களுக்குரிய பலன்களை தரக் கூடியவர் என்பதால் காலை சூரிய உதயத்திற்கு பிறகு 09.30 மணிக்கு முன்பாக தர்ப்பணம் கொடுத்து முடித்து விடுவது சிறப்பு.
எப்படிப்பட்ட பித்ரு தோஷத்தையும், பித்ரு சாபங்களையும் போக்கக் கூடிய ஆற்றல் படைத்ததும் இந்த மகாளய அமாவாசை தான். அதனால் தான் வருடத்தில் எந்த மாதத்தில் வரும் அமாவாசையில் விரதம் இருந்து, முன்னோர்களை வழிபட தவறி இருந்தாலும் மகாளய அமாவாசை அன்று விரதம் இருந்து, தர்ப்பணம் கொடுத்தால் ஓராண்டு முழுவதும் அமாவாசை விரதம் இருந்து, தர்ப்பணம் கொடுத்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
மகாளய அமாவாசை நாளில் சில முக்கியமான விஷயங்களை செய்வதால் பித்ருக்கள், நாம் செய்யும் வழிபாடுகளை ஏற்று, நமக்கு ஆசி வழங்குவார்கள் என சொல்லப்படுகிறது. அதோடு ஓராண்டு முழுவதும் தர்ப்பணம் கொடுத்து, பித்ருக்கள் வழிபாட்டினை செய்த பலனும் நமக்கு கிடைக்கிறது என சொல்லப்படுகிறது. இந்த பலன்களை நாமும் பெறுவதற்கு மகாளய அமாவாசை அன்று என்ன தானம் செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்?
மகாளய அமாவாசை நாளில் செய்யும் சிறு தானமும் நமது முன்னோர்களின் பசியை தீர்த்து அவர்களின் ஆசியை வழங்கக்கூடியது. பித்ரு தர்ப்பணம் செய்தால் நமது முன்னோர்கள், சிறுவயதில் இறந்தவர்கள், பிறந்தவுடன் இறந்த குழந்தைகள், துர்மரணம் ஆனவர்களுக்கு நற்கதி கிடைக்கும். இத்தகைய சிறப்புமிக்க அமாவாசை திருநாளில் தானங்கள் செய்தால் நல்ல பலன்களை அடையலாம்.
கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் வாசம் செய்கின்றனர். பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் அனைத்து தெய்வங்களுக்கும் மற்றும் தேவதைகளுக்கும் ஒரே நேரத்தில் தானம் செய்த பலனைப் பெற முடியும். இத்தகைய சிறப்புடைய பசுவிற்கு தங்களால் இயன்றளவு உணவை அளிக்கவும். அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தால் நமது கர்மவினைகளை போக்கி கொள்ள முடியும்.
குறிப்பாக பசுவிற்கு அகத்திக்கீரை அளிப்பதன் மூலம் தானத்திற்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும். கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது. ஒரு கட்டு அகத்திக்கீரையை உணவாக அளிக்கலாம். வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம். அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு அகத்திக்கீரையை அளிக்கலாம்.
எளிதாக சமைக்கும் வகையில் கத்தரி, அவரை, பீன்ஸ், வெண்டை, உருளை, கேரட், பீட்ரூட், முருங்கை, கோஸ், வாழைக்காய், முழுபூசணி போன்றவற்றை தானம் தருதல் நன்று. எள், உப்பு, பொன், பருத்தி ஆடை, இரும்பு ஆகியவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது. தானம் பெற வருபவரை மிகுந்த மரியாதையுடன் நடத்தி தானமளிக்க வேண்டும்.
எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?
அன்னம் – வறுமையும், கடன் தொல்லைகளும் நீங்கும்
தேன் – புத்திர பாக்கியம் உண்டாகும்
தீபம் – கண்பார்வை தெளிவடையும்
அரிசி – நமக்கு தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்களை போக்கும்
நெய் – நாள்பட்ட தீராத நோய்களை போக்கும்
பால் – துக்கம் நீங்கும்
பழங்கள் – புத்தியும், சித்தியும் உண்டாகும்
தேங்காய் – நினைத்த காரியம் வெற்றியாகும்
நெல்லிக்கனி – ஞானம் உண்டாகும்
September 19, 2025
September 17, 2025
September 15, 2025