ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும் என்றாலும் ஆடி மாதம் வரும் அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் ஆகும். அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சௌமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம் அதனைப் பற்றியும் அமாவாசை விரதம் பற்றியும் இந்தப் பதிவில் காணலாம் வாருங்கள்.
அழகாபுரி என்னும் நாட்டை அழகேசன் என்னும் பெயர் கொண்ட அரசன் ஆண்டு வந்தான். பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதனை தீர்த்துக் கொள்ளும் வகையில் அவனும் அவனது மனைவியும் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார்கள். அதன் பலனாக அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவர்களது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் அரசனுக்கு “உனது மகன் இளமை பருவத்தை எட்டும் போது அவன் இறந்து போவான்” என்னும் அசரீரி கேட்டது. இதனைக் கேட்ட மன்னன் ஆழ்ந்த துக்கம் கொண்டான். பல கோவில்களுக்கும் சென்று இறைவனை வேண்டிக் கொண்டான். ஒரு நாள் காளி கோவிலுக்கு செல்ல நேர்ந்தது. அங்கு அவன் மனமுருக வேண்டிக் கொண்டிருக்கும் போது, உன் மகன் இறந்ததும் அவனுக்கு திருமணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது.
அசரீரி கூற்றுப்படி இளவரசன் ஒரு நாள் இறந்து போனான். அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடினான். அந்த நேரத்தில் பெற்றோரை இழந்த பெண் ஒருத்தி தனது சகோதரன் மற்றும் அவன் மனைவியின் கொடுமைக்கு ஆளாகி இருந்தாள். அவர்கள் இந்தப் பெண்ணை ஏமாற்றி செல்வத்திற்கு ஆசைப்பட்டு இறந்து போன இளவரசனுக்கு மணமுடித்து வைத்தனர். இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்தப் பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்தபின் தான் அவளுக்கு உண்மை தெரிய வந்தது. ஏமாற்றம் தாங்க முடியாமல் அவள் அழுது அரற்றினாள். அவளின் அழுகுரல் கேட்டு அம்பிகை மனம் இரங்கினாள். இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதி யோடு உயிர்பெற்று எழச்செய்தாள்.
இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாளில். தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெறச் செய்ததுபோலவே அன்று அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள். மகிழ்ந்த அம்பிகை, ஆடிமாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையை படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.
ஆடி அமாவாசை தேதி
இந்த வருடம் ஆடி அமாவாசை ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 4ஆம் தேதி, 2024 அன்று வருகிறது. இந்த புனித நாளின் தொடக்கத்தை குறிக்கும் அமாவாசை திதி, ஆகஸ்ட் 3, 2024 அன்று மாலை 3:50 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 4ஆம் தேதி, 2024 மாலை 04:42 மணிக்கு முடிவடைகிறது.
படையல் போடும் நேரம்
ஆகஸ்ட் 04ம் தேதி பகல் 12 மணி முதல் 01.30 வரை எமகண்டம் நேரமாகும். அதனால் முன்னோர்களுக்கு இலை போட்டு, படையல் போடும் வழக்கம் உள்ளவர்கள் பகல் 01.30 மணிக்கு பிறகு படையல் போட்டு வழிபடுவது சிறப்பானதாகும். காகத்திற்கு சாதம் வைப்பதும் பகல் 01.30 மணிக்கு பிறகு வைப்பது சிறப்பானதாகும்.
ஆடி அமாவாசை சிறப்பு :
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும். அந்த நாளில் முன்னோர்கள் எனப்படும் பித்ருக்களை ஆராதித்து வணங்குவதற்கு உரிய அற்புதமான நாள். அதிலும் குறிப்பாக, தை மாத அமாவாசை, புரட்டாசி மகாளய பட்ச அமாவாசை, ஆடி மாதத்தில் வரும் அமாவாசை ஆகிய அமாவாசை தினங்கள், மிக மிக முக்கியமானவை.இந்த நாளில் நமது முன்னோர்களை ஆராதிப்பது மிகவும் அவசியம். எனவே இந்த நாட்களில், எந்த வேலை இருந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வணங்கவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
ஆடி முதல் தை மாதம் வரை தேவர்கள் ஓய்வெடுப்பதாக ஐதீகம். அப்போது நம் முன்னோர்கள் நம்மைப் பாதுகாப்பதற்காக பூலோகத்திற்கு வருவார்களாம். அவர்களை வரவேற்று ஆடி அமாவாசை தினத்தில் வழிபட வேண்டும் என் சாஸ்திரம் வலியுறுத்துகிறது. ஆடி அமாவாசை தினத்தில், புனித நீர் நிலைகளின் கரைகளில் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் அளிப்பது அவர்களது முக்திக்கு வழி வகுக்கும். குறிப்பாக தந்தை இல்லாதாவர்கள் இதனை செய்ய வேண்டும். பொதுவாகவே ஒவ்வொரு அமாவாசையும் தர்ப்பணம் அளிக்க வேண்டும் என்றாலும் ஆடி அமாவாசை அன்று தவறாமல் பின்பற்ற வேண்டும். அவ்வாறு செய்ய இயலாதவர்கள் ஏழை எளியவர்களுக்கு உணவு மற்றும் உடைகளை தானமாக வழங்கி, முன்னோரைக் குளிர்விக்கலாம். இதன் மூலம் அவர்களின் ஆசிகள் கிடைக்கைப் பெற்று நம் சந்ததிகள் எந்தக் குறையும் இல்லாமல், வாழையடி வாழையென வளர்வார்கள். செம்மையாய் வாழ்வார்கள் என்பது ஐதீகம். நீர் நிலைகளில் பிதுர் பூஜை செய்வதோடு மட்டும் நில்லாமல் அன்றைய தினம் வீட்டிற்கு வந்ததும், பூஜையறையில் அவர்களை நினைத்து தலைவாழை இலையில் பலவிதமான காய்கறிகளை சமைத்து வடை, பாயசத்துடன் பெரிய அளவில் படையல் போட்டு வழிபட வேண்டும். அவரவர் குல வழிக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ள வேண்டும் என்பது விதியாகும். இதனால் முன்னோர்களின் ஆசி கிட்டுவதுடன் வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருந்தால் இருந்தால் விலகியோடும். இல்லத்தில் உள்ளவர்களும் சகல சவுபாக்கியங்களுடன் வாழ்வர்.
ஆடி அமாவாசை அன்று புனித நீர் நிலைகளான கடற்கரை, ஆற்றங்கரை, குளக் கரைகளில் அமைந்துள்ள கோவில்களில் நம்முடன் வாழ்ந்து முக்தியடைந்த நம் பெற்றோர்கள் மற்றும் முன்னோர்களுக்கு வேதவிற்பன்னர் உதவியுடன் நீத்தார்களுக்கான பிதுர்பூஜை செய்தால், எடுத்த காரியம் தடையின்றி நடைபெறும்; குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன. ஆடி அமாவாசையன்று முக்கடல் கூடும் கன்னியாகுமாரி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம், அக்னி தீர்த்தம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம், நவபாஷாணம் உள்ள கடல், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்பாதிரிப்புலியூர், கோகர்ணம் போன்ற இடங்களில் கடல் நீராடுவது சிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவசை அன்று ராமேஸ்வரம், கயா, தில தர்ப்பனபுரி போன்ற புனித தீர்த்தங்களில் அல்லது தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதன் மூலம் அவர்களின் ஆசிகளைப் பெற முடியும்.
ஆடி அமாவாசையில் ராமேஸ்வர அக்னி தீர்த்தத்தில் நீராட வேண்டியது அவசியம். இந்த நாளில் தான் புராண காலத்தில் அக்னி தேவன் நீராடினார் என்பது ஐதீகம். ராவண வதம் செய்து அயோத்தி திரும்பிய பிறகு ராமபிரான் சீதையை தீக்குளிக்க ஆணையிட்ட போது, சீதை அக்னி குண்டத்தில் இறங்கிய அடுத்த நொடியே அக்னிதேவன் அலறினான். சீதாதேவியின் கற்புக்கனல் சுட்டெரித்தது. சூடு தாங்காத அக்னி, ராமேஸ்வரக் கடலில் குதித்து தன் சூட்டைத் தணித்து கொண்டான். அதனால் கடல் நீர் சூடேறியது. அதனால்அக்னி தீர்த்தம் எனப் பெயர் வந்தது. அக்னி நீராடிய கடலில் நீராடு வோர் பாவங்கள் தீரும் என ஆசியளித்தாள் சீதாதேவி. இன்னும் ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயம் முன் உள்ள கடல் நீரில் அலையே இருக்காது. சீதாதேவி போல அமைதியான இக்கடலில் நீராடுவது சிறப்பு. அதிலும் ஆடி அமாவாசை அன்று இங்கு நீராடுவதும் நீத்தார் கடன்களை செய்வதும் விசேஷமானது.
ஆடி அமாவாசை காலத்தில் கடல் அல்லது புனித ஆறுகளில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கி விமோசனம் பெறமுடியும். பிதுர் தேவதைகளை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பித்ருக்ககளின் தோசங்களில் இருந்து நீக்க முறலாம் என்பது நம்பிக்கை. ஆடி அமாவாசை அன்றைய தினம் தவறாமல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து அவர்கள் முக்திக்கு வழி வகுத்து அவர்களது ஆசிகளைப் பெற்றிடுவோம்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025