சித்திரை மாதம் இருபத்தொன்றாம் தேதிமுதல் வைகாசி மாதம் பதினான்காம் தேதிவரை வெய்யிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கும். இதனை கத்திரி வெய்யில், அக்னி நட்சத்திரம் என்று சொல்வர்.இது கோடையின் மிக முக்கியமான காலக்கட்டம் ஆகும். பொதுவாக கத்திரி வெயில் மூன்று வாரங்கள் வரை இருக்கும். அக்னி தொடங்குவதற்கு முன்னும் பின்னும் வெயில் வாட்டும். இதனை முன் கத்திரி என்றும் பின் கத்திரி என்றும் கூறுவார்கள்.
யமுனை நதிக்கரைக்கு அருகில் காண்டவ வனம் என்ற பெரிய வனம் இருந்தது. அந்த வனம் இந்திரனின் பாதுகாப்பில் இருந்தது. அந்த வனத்தில் உயிர்காக்கும் அரிய முலிகைகளை செழித்து வளர்ந்து இருந்தன. அவற்றை பாதுக்காக இந்திரன் அவ்வப்பொழுது அங்கு மழை பொழிந்து வரச் செய்தான்.
ஒரு சமயம் அந்த வனத்தின் அருகே ஓடும் யமுனையில் கண்ணனும் அர்ச்சுனனும் அவர்களுடைய தோழர்களும் நீராடி மகிழ்ந்தார்கள். அவர்கள் கரையேறும் போது அந்தணர் வேடத்தில் அக்னி தேவன் அங்கே வந்தார். அவர் கண்ணனிடம், “”எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. அதற்கு உங்களின் உதவி தேவை. இந்த வனத்தில் என் பசிப்பிணி தீர்க்கும் மருந்துள்ளது. நான் இந்த வனத்தில் பிரவேசிக்க நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும்” என்று வேண்டினார். அவரது வேண்டுதல் வித்தியாசமாக இருக்கவே, கண்ணன் அவரை உற்றுப்பார்த்தார்.
“”அக்னிதேவனே, ஏன் இந்த வேடம்?” என்று கண்ணன் அவரைக் கேட்டன். உடனே அக்னிதேவன்,தன் வேடத்தைக் கலைத்தான். “”பரமாத்மாவே, தங்களுக்குத் தெரியாததல்ல. துர்வாச முனிவர், சுவேதசி என்னும் மன்னனுக்காக நூறாண்டுகள் தொடர்ந்து யாகம் நடத்தினார். அந்த யாகத்தில் அர்ப்பணிக்கப்பட்ட அதிகப்படியான நெய்யை நான் உண்ணும்படி நேர்ந்ததால் மந்தநோய் என்னைத் தாக்கிவிட்டது. அதிலிருந்து நான் குணமடைய தகுந்த மூலிகைகள் இந்த வனத்தில் உள்ளன. இதற்குள் நான் பிரவேசிக்கும் பொழுதெல்லாம், இந்திரன் மழைபொழிய மேகங்களுக்கு உத்தரவிட்டு என் தீ நாக்குகளை அணைத்துவிடுகிறான்.
அதனால் என் நோய் தீர மூலிகைகள் கிடைக்காமல் மிகவும் துன்பப்படுகிறேன். எனக்கு உதவுங்கள்” என்றான்.
“”உனக்கு இதனைச் செய்வதால் எங்களுக்கு என்ன பயன்?” என்று அர்ச்சுனன் கேட்டான்.” “நீங்கள் கேட்டதைத் தருகிறேன்” என்று அக்னிதேவன் வாக்கு கொடுத்தான்.உடனே கண்ணன், “”நாங்கள் இங்கு நீராடத்தான் வந்தோம். எனவே எங்களிடம் ஆயுதங்கள் இல்லை. தற்பொழுது காண்டீபம், அம்பறாத்தூணி, அம்புகள், தேர் ஆகியவை வேண்டும்” என்றார்.
உடனே அக்னிதேவன் அவற்றை ஒரே நொடியில் வரவழைத்துக் கொடுத்தான். கண்ணன், அர்ச்சுனனைப் பார்க்க, அவற்றைப் பெற்றுக்கொண்டான் அர்ச்சுனன்.
அப்பொழுது கண்ணன், “”அக்னி தேவனே, ஒரு நிபந்தனை. உன் பிணியைத் தீர்த்துக்கொள்ள 21 நாட்கள் மட்டும் இந்த வனத்திற்குள் பிரவேசிக்கலாம். அதிகமாக அரிய மூலிகைகளை நீ உண்டால் அதுவே உனக்கு நஞ்சாக மாறிவிடும். நீ காட்டிற்குள் நுழையும் சமயத்தில் இந்திரன் மழை பொழிவிக்காமல் பார்த்துக்கொள்கிறோம்” என்றார்.
அக்னியும் அதற்கு உடன்பட்டு காண்டவ வனத்திற்குள் பிரவேசித்தான். இதனையறிந்த இந்திரன், காளமேகத்தை அழைத்து காண்டவ வனப்பகுதியில் மழைபொழிய உத்தரவிட்டான். காளமேகம், தன் நண்பர்கள் கூட்டத்துடன் காண்டவ வனத்தை நோக்கி வருவதைப் பார்த்த கண்ணன் அர்ச்சுனனைப் பார்த்தார். அதன் பொருளைப் புரிந்துகொண்ட அர்ச்சுனன், தன் அம்புகளால் சரக்கூடு கட்டி மழை பொழிவதைத் தடுத்தான்.
அக்னியும் ஏழு நாட்கள் வேகமாக வனத்திலுள்ள மூலிகைகள் பகுதிக்குச் சென்று கபளீகரம் செய்தான். அடுத்த ஏழு நாட்கள் சுற்றியிருந்த மருத்துவ சக்திமிக்க மரங்களை உணவாகக் கொண்டான். அடுத்த ஏழு நாட்கள் மிதமாக உண்டு, இறுதியில் பகவானிடமும் அர்ச்சுனனிடமும் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான். அக்னிதேவன் காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திர நாட்கள் என்று புராணம் கூறுகிறது.
அக்னி நட்சத்திரம் என்றாலே சூரியன் தான் பிரதானம். அந்த சூரிய தேவனை நாம் சாந்தப்படுத்துவதன் மூலம் பல நன்மைகைகளைப் பெற முடியும். சூரியன் சம்பந்தமான பொருட்களை தானம் அளிப்பது. சூரியனின் அதிதேவதைளை திருப்திபடுத்துவது, சூரியனின் நட்சத்திரம் மற்றும் நட்சத்திர தேவதைகளுக்கான நிவர்த்தி பூஜை என்று ஏதாவது ஒன்றை நாம் செய்வதன் மூலம் சூரிய பகவான் திருப்தி அடைந்து அவரது பரிபூரண ஆற்றலை நமக்கு வழங்குவார் என்பது ஐதீகம்.
அக்னி நட்சத்திர சமயத்தில் அல்லது அக்னி நடசத்திரம் நிறைவடையும் நாளில் இந்த பரிகாரத்தை நாம் செய்யலாம்.
சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கத்தில் இருந்து தப்ப உதவும் குடை, செருப்பு, விசிறி போன்றவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கலாம். பானகம், நீர் மோர் போன்றவற்றை பிறருக்கு வழங்கலாம். தயிர்சாதம் செய்து அன்னதானமாக வழங்கலாம். நம் வீட்டில் அருகில் இருக்கும் யாரேனும் ஒருவருக்கு அல்லது தேவைப்படுவோருக்கு கோதுமை மாவு அல்லது கோதுமை தானியம் இவற்றில் ஏதேனும் ஒன்றை தானமாக வழங்கலாம்.
அக்னி நட்சத்திரம் முடிவு வரும் நாளிலும் நாம் சில விஷயங்களை கடைப்பிடிக்கும் பொழுது நம்முடைய குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது அக்னி நட்சத்திர தோஷ காலம் முடியும் நாளில் எல்லா கோயில்களும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும் .இதை அக்னி கழிவு என்றும் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி என்றும் கொண்டாடுவார்கள். இந்த நிவர்த்தி பூஜை மற்றும் மகா அபிஷேகத்தின்போது இறைவனை வணங்கினால் நம் தோஷங்கள் அனைத்தும் விலகும். வேண்டிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.
அக்னி நட்சத்திர நாட்களில் பரணிக்குரிய துர்க்கையையும், ரோகிணிக்குரிய பிரம்மதேவனையும், கிருத்திகைக்குரிய அக்னி மற்றும் முருகப்பெருமானையும் வழிபட, நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்று புனித நூல்கள் கூறுகின்றன.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025