விளக்கு ஏற்றுவது என்பது நமது பாரம்பரிய வழக்கம் ஆகும். விளக்கானது நமது அக இருளையும் புற இருளையும் நீக்குகிறது. எனவே தான் நமது முன்னோர்கள் காலை மாலை இரு வேளையும் விளக்கு ஏற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். மேலும் விளக்கு ஏற்றுவதால் பல விதமான பலன்கள் நமக்கு கிட்டுகின்றன.
வீட்டில் தீபம் ஏற்றி வழிபடுவது நாம் காலம் காலமாக செய்து வரும் வழக்கம் தான். இருந்தாலும் பிரம்ம முகூர்த்த தீபம் என்பது மிகவும் விசேஷமானது. இந்த நேரத்தில் நாம் தீபம் ஏற்றும் பொழுது நம்முடைய வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.
விளக்கு ஏற்றுவதற்கு உகந்த நேரமாக பிரம்ம முகூர்த்த வேளை ஏன் சிறந்ததாக கருதப்படுகிறது? சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என்பர். அந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம். பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5.30 மணி வரையாகும் எனவே அதிகாலை எழுந்திருக்கும்போது சில நன்மைகள் உண்டு. இந்த நேரத்தில் எழுந்து விளக்கு ஏற்றுவதன் மூலம் அதன் முழுப் பலனையும் நாம் பெறலாம்.
தினமும் அந்த நாளின் குறிப்பிட்ட இறைவனை வேண்டி பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றுவதன் மூலம் அந்த தெய்வங்களின் அருளாசிகளை பரிபூரணமாக அடையலாம்.
ஞாயிற்றுக்கிழமை – அகல் விளக்கேற்றி சிவன் மற்றும் சூரிய பகவானை வணங்குவதன் மூலம் மனதில் அமைதி நிலவும். குடும்பத்தில் ஒற்றமை ஓங்கும். சூரிய கிரக தோஷம் நீங்கும்.
திங்கட்கிழமை – அகல் விளக்கேற்றி அம்பிகையை வழிபட்டால் பயம் நீங்கி, ஞானம் பெருகும். சந்திர கிரக தோஷம் நீங்கும்.
செவ்வாய்கிழமை – செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாள். அந்த நாளில் பஞ்சலோக விளக்கேற்றி, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து, முருகப் பெருமானை வழிபட்டால் நோய்கள் தீரும். கண் திருஷ்டி, பீடை, செய்வினை கோளாறுகள் நீங்கும்.. செவ்வாய் கிரக தோஷம் நீங்கும்.
புதன்கிழமை – புதன்கிழமை விஷ்ணுவிற்கு உகந்த நாள் . அன்று விளக்கு ஏற்றி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து பெருமாளை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கல்வி மேம்படும். சகல கலைகளும் சித்திக்கும்.விஷ்ணுவிற்கு பிடித்தமான துளசி சாற்றி வழ்படுவது பல மடங்கு நன்மை பயக்கும்.புத கிரக தோஷம் நீங்கும்.
வியாழக்கிழமை – அகலில் நெய் விளக்கேற்றி சித்தர்கள், ராகவேந்திரர், சாய்பாபா போன்ற மகான்கள் மற்றும் குல தெய்வத்தை வழிபட்டால் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். அன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவதும் சிறப்பு. குரு கிரக தோஷம் நீங்கும்.
வெள்ளிக்கிழமை – வெள்ளி விளக்கேற்றி கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும், கடன்கள் தீரும், அஷ்டலட்சுமிகளும் வீட்டில் நிரந்தர வாசம் செய்வார்கள். சுக்கிர கிரக தோஷம் நீங்கும்.
சனிக்கிழமை – நல்லெண்ணெய் விட்டு அகல் விளக்கேற்றி ஸ்ரீ ருத்திர மந்திர பாராயணம் செய்து சிவ பெருமானை வழிபட்டால் சனி தோஷம் விலகும். அன்று ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொள்ளலாம். சனி கிரக தோஷம் நீங்கும்.
பிரம்ம முகூர்த்த வேளையில் நமது உடல் இயக்கங்கள் சீராக இருக்கும். பதற்றம் இல்லாத அமைதி நிலவுவதால் மனதில் அமைதியை உண்டாக்கும். இது நமது மனம் மற்றும் உடலின் இயக்கத்தை சீராக்கி, நம்மை ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
இந்த தீபத்தை ஏற்ற மன்னாலான தட்டு போன்ற ஒரு சட்டியை வாங்கிக் கொள்ளுங்கள். இதை தண்ணீரில் வைத்து சுத்தம் செய்த பிறகு காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இதில் கல் உப்பை நிரப்பி அதன் மேல் அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை இலுப்பை எண்ணையும் பஞ்சித் திரியும் பயன்படுத்தி ஏற்றுங்கள். –
காலை மூன்று முப்பது மணிக்கு இந்த தீபத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் தீபம் கிழக்கு முகமாக எரியும்படி ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்ற நீங்கள் காலையில் எழுந்து குளிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பல் துலக்கி கை கால் முகம் அலம்பிய பிறகு சுத்தமான திருநீரை நெற்றியில் ஓம் நமசிவாய என்ற நாமத்தை சொல்லி பூசி கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த தீபத்தை ஏற்றலாம். நீங்களும் கிழக்குப் பார்த்தவாறு அமர வேண்டும். அதன் பிறகு இந்த தெய்வத்தையே உங்களுடைய குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வமாக பாவித்து உங்களுக்கு வேண்டியவை உடனே நிறைவேற வேண்டும் என்ற கோரிக்கையை வையுங்கள்.இப்படி வேண்டும் போது நீங்கள் வைக்கும் கோரிக்கை மூன்றே நாளில் நடக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு வேளை உங்களுடைய கிரகநிலை நேரம் சரியில்லாத சூழ்நிலையாக இருந்தால் கூட ஒரு மண்டலத்திற்கு உள்ளாக இதற்கான பலன் கை மேல் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம். –
September 19, 2025
September 17, 2025
September 15, 2025