இந்து மதத்தில் பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அவற்றுள் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளிப் பண்டிகை எனலாம். இந்தப் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீபம் என்றால் விளக்கு. ஆவளி என்றால் வரிசை. எனவே இது தீபங்களின் வரிசை என்று பொருள் படும். இருளை அகற்றி ஒளியை அளிக்கும் பண்டிகையாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீஜ் ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன்தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது. கிரகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் மாத 17 லிருந்து நவம்பர் மாத 15 ஆம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது.
திருமாலின் வராக அவதாரத்திற்கும் பூமாதேவிக்கும் பிறந்தவர் நரகாசுரன் . இவர் தன்னுடைய தாயினால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரம் வாங்கியதாகவும், அதன் காரணமாக திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் பூமாதேவி சத்தியபாமாவாக பிறந்து நரகாசுரனை வதம் செய்ததாகவும் கூறுகிறது புராண கதை. நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி, ஒளிமயமாக கொண்டாட வேண்டும் என்று நரகாசுரன் வேண்டினான். மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. நரகாசுரன் சம்ஹாரம் செய்யப்பட்ட நாளைத்தான் தீபாவளி பண்டிகையாக கொண்டாடுகிறோம். நரகனை சம்ஹாரம் செய்த நாளானதால், நரக சதுர்த்தசி என்றும் தீபாவளி அழைக்கப்படுகிறது.
இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும், அயோத்திக்கு திரும்பிய நாளை அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது.
கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான் விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று “அர்த்தநாரீசுவரர்” உருவமெடுத்தார். இறைவன் ஜோதிவடிவாக நம்முள் இருக்கிறான். இந்த ஜோதி வடிவான இறைவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே தீபாவளியாகும். தீப வழிபாடு – தீபாவளி என நாம் கொள்ளலாம். மேலும் ஆணில் பெண் சரிபாதியாக இணையும் நன்நாளினை நினைவுபடுத்துவதாக தீபாவளி அமைந்ததாகக் கூறுகிறது ஸ்கந்தபுராணம்.
தீபாவளி அன்று அனைவரும் விடியற்காலையிலேயே எழுந்து விடுவார்கள். எண்ணெய்தேய்த்துக் குளிப்பார்கள். இதனை கங்கா ஸ்னானம் என்று கூறுவார்கள். அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும்” கங்கா தேவி ” வியாபித்து இருப்பதாக ஐதீகம். என்றாலும் தீபாவளி அன்று வெந்நீரில் குளிக்க வேண்டும். அன்று மட்டும் வெந்நீரில் கங்கையிருப்பதாக நம்பிக்கை. கங்கை நம் பாவங்களை போக்குவாள். தீபாவளி அன்று எண்ணை தேய்த்து தான் குளிக்க வேண்டும். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டுமகிழ்வர். புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புக்கள் செய்தும் உண்டு மகிழ்வார்கள். மேலும் இனிப்பு மற்றும் வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வார்கள். பரிசுகள் தந்து மகிழ்வார்கள். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீப ஒளித் திருநாளன்று பட்டாசு, மத்தாப்பூ கொளுத்துவது மக்களின் வாடிக்கை ஆகும். பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு தலை தீபாவளியாக முதல் தீபாவளி அமையும். அந்நாளில் பெண்ணின் தாய் வீட்டில் தம்பதிகளுக்கு புத்தாடை பரிசுகள் அளித்து மகிழ்விப்பார்கள்.
விஷ்ணுபுராணம் தீபாவளி அன்று அதிகாலையில் நீராடி மகாலட்சுமி பூஜையை அனுஷ்டித்து தீபங்களை ஏற்றி வீடு நிறைய வைத்தால் லட்சுமி கடாட்சம் கைவர கிடைக்கும் என்கிறது. ஒரு சிலர் மாலையில் வீடு முழுவதும் விளக்கேற்றி குபேர லட்சுமி பூஜை செய்து கொண்டாடுவார்கள். ஒரு சிலர் தீபாவளிக்கு அடுத்த நாள் நோன்பு நோற்பார்கள். அன்று இனிப்புபண்டங்களை (அதிரசம்) செய்து கோவிலுக்கு சென்று இறைவனுக்கு படைப்பார்கள்.
தீபாவளிக்கு பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு தெய்வத்தின் கடாட்சம் இருப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. அவையாவன..
எண்ணெய் – மகா லட்சுமி.
சிகைக்காய் – சரஸ்வதி.
சந்தனம் – பூமாதேவி.
குங்குமம் – கௌரி.
மலர்கள் – ஜீவாத்மா.
தண்ணீர் – கங்கா தேவி.
இனிப்பு பலகாரம் – தன்வந்திரி.
தீபம் – பரமாத்மா.
புத்தாடை – மகாவிஷ்ணு.
தீபாவளியின் பெருமை
ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும் தீபாவளிக்கு என்று தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அன்றைய தினம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் எண்ணெய் நீராடி, புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றிக் கொண்டாடுவது அவசியம் என்று புராணமே கூறுவதுதான் அந்தச் சிறப்பு.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025