Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW
வைத்தீஸ்வரன் கோயில், Vaitheeswaran Koil, Sevvai temple in kumbakonam
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

வைத்தீஸ்வரன் கோயில் | Vaitheeswaran Koil

அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில்

நவகிரகங்களில் செவ்வாய் எனும் அங்காரகன் மூன்றாவதாக குறிப்பிடப்படுவார். செவ்வாய் யுத்தக் கடவுள் என்றும் போற்றப்படுகிறார். இவருக்கு சக்திதரன், குமாரன், மகாகாயன், மங்கலன், தனப்பிரதன், லோகிதாங்கன், ரத்தாயதேஷணன், ரத்தர்ணன், ஹோமகுண்டலி, ரோகநாசனை, ரக்தவஸ்ரன் போன்ற பிற பெயர்களும் உண்டு. பரத்வாஜ முனிவரின் மகனாகப் பிறந்து பூமாதேவியால் வளர்க்கப்பட்டதால் அங்ககாரகன் என்றும் கூறப்படுகிறது. செவ்வாய் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் தங்குகிறார். ஒரு முறை ராசி சக்கரத்தை சுற்றி வர 18 மாதங்கள் ஆகின்றன. ஒருவரது ஆற்றலானது செவ்வாய் அவரது ஜாதகத்தில் அமையும் நிலையைப் பொறுத்தது. செவ்வாயை வணங்கினால் தைரியமும், அரச சபையில் பேசும் ஆற்றலும், தோள் வலிமையும், போரில் வெற்றியும் கிடைக்கும். செவ்வாய் கிரகத்துக்கு சுய ஒளி கிடையாது. சூரிய ஒளியைப் பெற்று பிரதிபலிக்கிறது. பஞ்ச பூதங்களில் செவ்வாய் நெருப்பு கிரகமாகும்.

தமிழகத்தில் செவ்வாய் கிரகத்துக்கான தலமாக நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயிலில் வைத்தியநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. மூலவர் வைத்தியநாதர், தாயார் தையல் நாயகி அம்மன். தல விருட்சம் வேம்பு. இத்தலம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 16வது தேவாரத்தலம் ஆகும். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயில் இது என்று சொல்லப்படுகிறது.

கோயில் அமைப்பு

இத்திருக்கோயில் ஏழுநிலை ராஜகோபுரங்களைக் கொண்டது. 5 பிரகாரங்களைக் கொண்ட இக்கோயில் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் கிழக்கே பைரவர், மேற்கே வீரபத்திரர், தெற்கே விநாயகர், வடக்கே காளி ஆகியோர் இத்தலத்திற்கு காவல் புரிகின்றனர். அதோடு இக்கோயிலானது திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானதாகும். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு

ஒருமுறை அங்காரகனுக்கு வெண்குஷ்ட நோய் வந்து அவதியுற்றார். தனது நோய் நீங்க சிவபெருமானிடம் வேண்டி நிற்க, அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது. வைத்தீசுவரன் கோயில் சென்று ஒரு மண்டலம் சித்தாமிர்த குளத்தில் குளித்துவிட்டு வைத்தியநாத சுவாமியை வணங்கினால் நோய் குணமாகிவிடும் என்று கேட்டது. இதையடுத்து அங்காரகனும் இத்தலம் வந்து வழிபட்டு நோய் குணமானது. அன்றிலிருந்து இத்தலம் செவ்வாய்க்குரிய தலமாக விளங்கி வருகிறது. இந்த வைத்தியத்துக்கு சுவாமி மருந்து தயார் செய்த போது பார்வதி அன்னை தைல பாத்திரம் கொண்டு வந்ததால் அம்பாளுக்கு தையல் நாயகி என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. இத்தலத்தில் முருகனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால் இங்கு அனைத்து விழாக்களும் முத்துக்குமார சுவாமிக்கே நடைபெறுகிறது. தினமும் காலையிலும், அர்த்தஜாம பூஜையிலும் முதலில் முருகனுக்கு பூஜை செய்த பின்பே சிவனுக்கும், அம்மனுக்கும் பூஜை நடைபெறுகிறது. முருகப்பெருமான் இறைவனை வழிபட்டு சூரனை அழிக்க வேல் வாங்கிய தலம் என்ற சிறப்பும் இத்தலத்திற்கு உண்டு.

தல சிறப்புகள்

இக்கோயிலில் அமைந்துள்ள மரகதலிங்கம் மிகவும் புகழ் பெற்றது. இங்குள்ள 5 கோபுரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது சிறப்பு. மூலவருக்கு முன் தங்கம், வெள்ளியால் ஆன இரண்டு கொடி மரங்கள் உள்ளன. பொதுவாக கோயில்களில் நவகிரகங்கள் திசைமாறியிருக்கும். ஆனால் இங்கே நவகிரகங்கள் அனைத்தும் சிவன் சன்னதிக்கு பின்புறம் ஒரே நேர்கோட்டில் நின்று வைத்தியநாதருக்கு அடங்கி, கிரக பலன்களை பக்தர்களுக்கு சாதகமாக்கி நோய் மற்றும் தோஷங்களை நீக்குவதாக ஐதீகம். மற்ற திருக்கோயில்களில் சிவன் சன்னதி முன்பாகவே நவகிரக சன்னதி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கே மட்டும் தான் சிவனின் பின்பக்கம் உள்ளது. அங்காரகன் (செவ்வாய்) பகவான் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

நோய்கள் தீர்க்கும் சித்தாமிர்த தீர்த்தம்

இத்தலத்தில் அமைந்துள்ள இறைவனுக்கு சித்தர்கள் அமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டு பல வரங்களைப் பெற்றுள்ளனர். அப்போது சிந்திய அமிர்தமானது இங்குள்ள தீர்த்த குளத்தில் கலந்துள்ளது. எனவே இக்குளம் சித்தாமிர்த தீர்த்தம் ஆனது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. இதில் 18 தீர்த்தங்கள் கலந்துள்ளன. சதானந்த முனிவர் இங்குள்ள தீர்த்த கரையில் தவம் இருந்த போது, தவளையை பாம்பு விழுங்க முயற்சித்து இவரது தவத்திற்கு இடையூறு செய்தது. கோபத்தில் முனிவர் விடுத்த சாபத்தினால் இக்குளத்தில் பாம்பு, தவளைகள் காணப்படுவதில்லை.

செவ்வாய் தோஷ நிவர்த்தி தலம்

இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள அங்காரகன் சன்னதியில் செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடை மற்றும் பல துன்பங்களை அனுபவிப்போருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. நிலம் வாங்க, கடன் தொல்லை நீங்க, நோய்கள் நீங்க அங்காரகனை வணங்குவது சிறப்பு. செவ்வாய் தோஷம் நீங்க முருகன் வழிபாடு, கார்த்திகை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பது, துவரை, செப்பு பாத்திரம் ஆகிய பொருட்களை தானம் செய்வது, அங்காரகனுக்கு அபிஷேகம் செய்வது, சிவப்பு நிற ஆடை அணிவித்து வழிபடுவது சிறந்த பலன்களைத் தரும். இங்கே முருகன் திருவடியில் சாத்தப்படும் சந்தனத்தை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

தீராத நோய்கள் தீர்க்கும் திருச்சாந்து

இத்தலமானது பல நோய்களை தீர்த்து வைக்கும் மருத்துவத்தின் தலைமைப் பீடம் என்றழைக்கப்படுகிறது. மருத்துவத்துறையில் படிப்பவர்கள் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு செல்கின்றனர். இங்கு புற்று மண், அபிஷேக தீர்த்தம், வேப்ப இலை, அபிஷேக சந்தனம், அபிஷேக விபூதி இவைகளை கொண்டு ‘திருச்சாந்து’ எனப்படும் உருண்டை தயாரிக்கப்படுகிறது. இதைச் சாப்பிட்டால் தீராத நோய்களும் குணமாகும். தோல் நோய்கள் நீங்க இங்குள்ள புனுகு எண்ணெய் வாங்கி தேய்த்து நீராடுகின்றனர். வைத்தியநாத சுவாமி வியாதிகளை மட்டுமின்றி, பிறவிப்பிணியையும் தீர்த்து வைக்கிறார்.

சடாயு குண்டம்

சம்பாதி, சடாயு என்ற கழுகரசர்கள் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றுள்ளனர். சடாயுவின் வேண்டுகோளின்படி இராமர் இத்தலத்தில் உள்ள விபூதி குண்டத்தில் சிதையடுக்கி சடாயுவின் உடலை தகனம் செய்ததால் இவ்விடம் சடாயு குண்டம் என்று அழைக்கப்படுகிறது.

பிரசித்தி பெற்ற நாடி ஜோதிடம்

வைத்தீஸ்வரன் திருக்கோயில் பாரம்பரிய நாடி ஜோதிடத்திற்கு பெயர் பெற்ற தலமாகும். அகத்தியர் அருளிய நாடி ஜோதிடத்தை பார்ப்பதற்காக ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தங்களது எதிர்காலத்தை பற்றி அறிந்து செல்கின்றனர்.

கோயில் திறந்திருக்கும் நேரம்

அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோயிலுக்கு எப்படி செல்வது?

திருச்சி வழியாக வரும் பக்தர்கள் மயிலாடுதுறை வழியாக செல்லலாம். சென்னை வழியாக வரும் பக்தர்கள் புதுச்சேரி மற்றும் சிதம்பரம் வழியாக இக்கோயிலுக்கு வர முடியும். பேருந்து வசதிகள் உள்ளன.