x
x
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.

திங்களூர் சந்திரன் கோவில் | Thingalur Chandran Temple

திங்களூர் கைலாசநாதர் திருக்கோயில்

நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்து இரண்டாவதாக வருபவர் சந்திர பகவான். சந்திரனுக்கு சோமன் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவர் வளர்பிறை காலத்தில் சுபராகவும், தேய்பிறை காலத்தில் பாபராகவும் இருக்கிறார். சுப கிரகங்களுக்கு சந்திரன் நட்பு கிரகமாக இருப்பதால் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில் பல நன்மைகளை வழங்குகிறார். உடல் பலம், மனோ பலம் இரண்டிற்கும் காரணியாக விளங்குபவர் சந்திர பகவான். ரசனை, அறிவு, ஆனந்தம், புகழ், அழகு, சுகபோகங்கள் அனைத்திற்கும் சந்திர பகவானே காரகன் ஆவார். சந்திரன் பூமியிலிருந்து 4 லட்சத்து 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பூமியை விட 81 மடங்கு எடை குறைவானது. சந்திரன் பூமியை ஒரு முறை சுற்றுவதற்கு 29 1/2 நாட்கள் ஆகும்.

நவகிரக தலங்களுள் சந்திரனுக்கென்று தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திங்களூரில் அமைந்துள்ளது அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். தமிழகத்தில் அன்னப்பிரசானத்துக்கு மிகச்சிறந்த தலம் திங்களூர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் என்று கூறப்படுகிறது. திருநாவுக்கரசரும், அப்பரும் தங்கள் பதிகங்களில் திங்களூர் தலத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதி அடிகள் அவதரித்தலம் என்ற பெருமையும் திங்களூருக்கு உண்டு.

கோயில் அமைப்பு

கிழக்கு நோக்கியுள்ள கோயிலுக்கு தெற்கில் அமைந்துள்ள வாயிலே பிரதான வாயிலாக அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் இறைவன் கைலாசநாதர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அம்பாள் பெரியநாயகி சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலுக்கு முன்பாக சந்திர தீர்த்தம் உள்ளது. கோயிலை வெளிப்பிரகாரமாக வலம் வரும் போது விஷம் தீர்த்த விநாயகர், சுப்பிரமணியர், கோஷ்டத்தில் அமர்ந்த நிலையில் தட்சிணாமூர்த்தி, கஜலெட்சுமி சந்நிதிகளும், சண்டிகேஸ்வரர் உடன் சண்டிகேஸ்வரி சந்நிதியும், பைரவர் சந்தியும் அமைந்துள்ளன. இத்தலத்தில் ஷேத்திர பாலகனான சந்திரன், மேற்கு திசை நோக்கி இறைவனைப் பார்த்தபடி தனி சந்நிதியில் காட்சியளிக்கிறார்.

தல வரலாறு

இக்கோயிலின் தல வரலாறானது, தட்சன் தனது 27 மகள்களையும் சந்திரனுக்கு மணமுடித்து வைத்தான். தனது 27 மனைவிகளிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதற்குப் பதிலாக ரோகிணியிடம் மட்டும் தனி பிரியம் காட்டினான் சந்திரன். இதனால் மனமுடைந்த மற்ற 26 மனைவிகளும் தந்தை தட்சனிடம் முறையிட்டனர். தட்சன் சந்திரனிடம் அனைவரிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்த வேண்டினார். சந்திரன் அதை ஏற்கவில்லை. இதனால் கோபமுற்ற தட்சன் சந்திரனின் அழகு குறையவும், அவனது கலைகள் மங்கும்படியும் சாபம் இட்டான்.

தட்சனின் சாபம் நீங்க திங்களூர் திருத்தலத்தில் நீண்ட காலம் சிவபெருமானை வேண்டி தவம் செய்தான் சந்திரன். தனது பெயரில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி இறைவனை பூஜித்து வந்தான். ஒரு பங்குனி மாத பௌர்ணமியில் இறைவன் சந்திரனுக்கு காட்சி கொடுத்து சாபத்தை நீக்கினார். இத்தல இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றதால் இத்தலம் சந்திரனுக்குரிய தலமாக விளங்கியது.

இறைவன் திருமேனியில் விழும் ஒளி

இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பௌர்ணமி தினத்தில் சந்திர பகவானின் ஒளி மூலவர் கைலாசநாதர் திருமேனியில் விழுவதை இன்றும் இத்தலத்தில் காணலாம். பங்குனி மாதம் பௌர்ணமி தினத்தில், கைலாசநாதர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து தனி சந்நிதியில் அமர்ந்திருக்கும் சந்திர பகவானுக்கு லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

அப்பூதி அடிகள்

63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதி அடிகள் அவதரித்த தலம் திங்களூர். இவர் திருநாவுக்கரசர் மீது அளவு கடந்த அன்பும், பற்றும் கொண்டிருந்தார். திருநாவுக்கரசரின் பெயரால் அன்ன சத்திரம், கல்விக் கூடம், தண்ணீர் பந்தல் அமைத்து மக்கள் சேவையாற்றினார் அப்பூதி அடிகள். திருநாவுக்கரசரின் மீது கொண்ட அன்பால் அப்பூதி அடிகள் தனது இரண்டு பிள்ளைகளுக்கு மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு எனப் பெயரிட்டு மகிழ்ந்தார்.

ஒருமுறை தனது பக்தரான அப்பூதி அடிகள் இல்லத்திற்கு உணவருந்துவதற்காக திருநாவுக்கரர் சென்றார். அப்போது அவரை வரவேற்ற அப்பூதி அடிகள் சிறுவனான தனது மகனை வீட்டின் பின்புறமிருந்த வாழைத் தோட்டத்திற்குச் சென்று வாழை இலை கொண்டு வருமாறு அனுப்பி வைத்தார். ஆனால் வாழைத் தோப்பில் பாம்பு கடித்து அச்சிறுவன் உயிரிழந்துவிட்டான். தனது மகன் இறந்தது தெரிந்தால் திருநாவுக்கரசர் உணவருந்தமாட்டார் என எண்ணி, அதைக் கூறாமல் திருநாவுக்கரசரை உணவருந்த அழைத்தார். திருநாவுக்கரசர் தன்னோடு அப்பூதி அடிகளின் மகனையும் உணவருந்த வேண்டி அழைக்க, மகன் இறந்து விட்ட செய்தியை அப்பூதி அடிகள் கூறுகிறார். அதைக் கேட்ட திருநாவுக்கரசர் மகனின் உடலை எடுத்து வரச்சொல்லி “ஒன்று கொலாம்” என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி, இறந்த சிறுவனை உறக்கத்தில் இருந்து எழச்செய்தவனைப் போல உயிர்த்தெழுச் செய்கிறார். இந்த அற்புத நிகழ்வு நிகழ்ந்த தலம் திங்களூர் ஆகும்.

கோயிலில் அப்பூதி அடிகள் குடும்பத்தினர் சிலை

இத்திருக்கோயில் உள்மண்டபத்தில் இடப்புறத்தில் அப்பூதி அடிகள், அவருடைய மனைவி, மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு ஆகியோருடைய மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இது இத்தலத்தின் மற்றொரு சிறப்பு.

அன்னப்பிரசானம்

குழந்தைக்கு முதல் சோறு ஊட்டுவதை அன்னப்பிரசானம் என்பர். கிராமங்களில் உள்ள மக்கள் தங்களது குலதெய்வக் கோயில்கள் இந்த சடங்கைச் செய்வார்கள். வசதியுள்ளோர் குருவாயூரப்பன் கோயிலில் செய்வது வழக்கம். தமிழகத்தில் அன்னப்பிரசானத்துக்கு மிகச்சிறந்த தலமாக திங்களூர் கைலாசநாதர் கோயில் விளங்குகிறது.

அசுவினி, மிருகசீரிஷம், உத்திரம், சுவாதி, திருவோணம், சதயம், ரேவதி நட்சத்திர நாளிலும், சந்திரஹோரை வேளையிலும் சந்திரனையும், பசுவையும் குழந்தைக்கு காண்பித்து, வெள்ளிக்கிண்ணத்தில் பால், நெய், தேன் கலந்த சாதத்தை ஊட்ட வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு ஜல தேவதையின் அருளும், ஔஷதி தேவதையின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஜலதேவதையின் அருளால் குழந்தைக்கு ஜலதோஷம், காய்ச்சல், உள்ளிட்ட நோய் அண்டாது என்றும், அப்படியே வந்தாலும் ஔஷதி (மருந்து) தேவதையின் அருளால் அது உடனே நீங்கிவிடும் என்பதும் இத்தலத்து விசேஷமாக கூறப்படுகிறது.

தோஷங்கள் நீக்கும் தலம்

அருள்மிகு கைலாசநாதர் கோயிலில் அமைந்துள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, இறைவன் மற்றும் தனி சந்நிதியில் காட்சி தரும் சந்திரனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து, நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் யாவும் நீங்கி நற்பலன்கள் உண்டாகும். இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தன்று காலை உதயத்தில் 6 மணிக்கு லிங்கத்தின் மீது சூரிய ஒளி படுவதால், அன்று சூரிய பூஜையும், மறுநாள் பௌர்ணமி பிரதமையில் மாலை 6 மணிக்கு சந்திர ஒளி லிங்கத்தின் மீது படுவதால் அன்று சந்திர பூஜையும் நடைபெறுவது வழக்கம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்

இத்திருக்கோயில் காலை 6 மணியிலிருந்து 11 மணி வரையிலும், மாலை 4 மணியிலிருந்து இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோயிலுக்கு எப்படிச் செல்வது?

திருவையாற்றில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், திருப்பழனம் ஊரை அடுத்து சிறிது தூரம் சென்றால், திங்களூர் செல்லும் சாலை பிரிகிறது. அதில் சென்று ஆலயத்தை அடையலாம். திருவையாற்றில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு.