x
x
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.

திருவெண்காடு புதன் கோவில் | Thiruvenkadu Budhan Temple

அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்

நவகிரகங்களில் புதன் பகவான் நான்காவதாக குறிப்பிடப்படுபவர். கல்வியையும், ஞானத்தையும் வழங்கும் வித்யாகாரகன் புதன் பகவான். நவகிரகங்களில் சுபகிரகம் என்ற அந்தஸ்தைப் பெற்ற கிரகம். உபஜெய ராசிகளான மிதுனம், கன்னி ஆகிய இரண்டு ராசிகளுக்கும் சொந்தக்காரர். இதில் கன்னி ஆட்சி, உச்சம் என்ற இரு அந்தஸ்குரிய ராசியாகும். சூரியனுக்கு அருகில் இருக்கும் கிரகம் புதன். புதன் சூரியனை ஒருமுறை சுற்றிவர 88 நாட்கள் ஆகும். புதன் பாதரசம் நிரம்பிய கிரகம் என்றும், பச்சை நிறமுடைய கிரகம் என்றும் விஞ்ஞானம் கூறுகிறது. ஜாதகத்தில் புதனுடைய அனுக்கிரகம் இருந்தால் தான் தொழிலிலும், கல்வியிலும் உயர்வு பெற முடியும். புதனுக்கு சௌம்யன், புத்திதாதா, தனப்பிரதன் என்ற பெயர்களும் உண்டு. புதன் கிரகம் அளப்பரிய ஆற்றல்களைக் கொண்டுள்ளது. அறிவு, ஆற்றல், வித்தை, கல்வி, சொல், வாக்கு ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குபவர்.

தமிழகத்தில் புதனுக்கென்று அமைந்துள்ள தலம், நாகப்பட்டினம் மாவட்டம், திருவெண்காட்டில் அமைந்துள்ள அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலங்களில் இது 11வது தேவாரத்தலமாகும். அம்மனின் 51 சக்திப் பீடங்களில் இது பிரணவ சக்தி பீடம் ஆகும். திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் என்ற பெயர்களும் இத்தல இறைவனுக்கு உண்டு. இத்தலத் தாயார் பிரம்ம வித்யாம்பிகை. தல விருட்சம் வடவால், கொன்றை, வில்வம். தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற பிரார்த்தனை தலம் இது.

கோயில் அமைப்பு

அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியளிக்கிறது. உள்ளே பரந்த இடப்பரப்பைக் கொண்டது. கிழக்கு வாயில் பக்கத்தில் தேவஸ்தானம் நடத்தும் மெய்கண்டார் பாடசாலை உள்ளது. உள்ளே நுழைந்ததும் இடது பக்கத்தில் அக்னி தீர்த்தம் உள்ளது. கரையில் விநாயகர், மெய்கண்டார் சன்னதிகள் உள்ளது. பிரகாரத்தில் பக்கத்தில் சூரிய தீர்த்தமுள்ளது. கரையில் சூரிய தீர்த்தலிங்க சன்னதி உள்ளது. இத்தலத்தில் சிவபெருமானது ஆனந்தத் தாண்டவத்தின் போது அவரது முக்கண்ணிலிருந்து சிந்திய நீர்த்துளிகளே அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களாக அமைந்துள்ளன. சுப்பிரமணியர் மண்டபம், ஆறுமுகர் சன்னதி ஆகியவற்றை தொடர்ந்து அம்பாள் சன்னதி தனிக்கோயிலாக அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள விநாயகர் பெரியவாரணர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு

மருத்துவன் என்னும் அசுரன் பிரம்மாவிடம் பெற்ற வரத்தால் தேவர்களுக்கு துன்பங்கள் விளைவித்தான். தேவர்கள் சிவபெருமான் கூறியபடி வேற்றுருவம் கொண்டு திருவெண்காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் மருத்துவன் அங்கும் வந்து தேவர்களுடன் போர் புரிந்தான். அசுரன் சிவபெருமானை நோக்கி தவம் புரிந்து சூலாயுதம் பெற்றான். அந்த சூலத்தால் ரிடப தேவரை தாக்கி காயப்படுத்தினான். ரிடப தேவர் சிவபெருமானிடம் முறையிட, கோபம் கொண்டார் சிவன். அப்போது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்திலிருந்து அகோர மூர்த்தி தோன்றினார். சிவபெருமானின் 64 வடிவங்களில் 43வது வடிவம் அகோரமூர்த்தி. இந்த அகோர உருவத்தைக் கண்ட உடனேயே அசுரன் சிவபெருமானிடம் சரணாகதி அடைந்துவிட்டான். சரணடைந்த அசுரனை அகோர மூர்த்தியின் காலடியிலும், காயம்பட்ட ரிடப தேவரை சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி நிறுத்தம் மண்டபத்திலும் இன்றும் காணலாம்.

தல சிறப்புகள்

வடக்கேயுள்ள காசிக்கு சமமான தலங்கள் ஆறு. அதில் ஒன்று திருவெண்காடு ஆகும். இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மூன்று. நவகிரகங்களில் இது புதனுக்குரிய தலமாகும். இத்தல இறைவனை வணங்கி புதன் அலி தோஷம் நீங்கி நவகோள்களில் ஒருவரானார் என்பது புராண வரலாறு. இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல், இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. இங்கு தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிஷேகங்களும், நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிஷேகங்களும் நடைபெறுகிறது. சிவபெருமான் 1008 விதமான தாண்டவங்கள் இங்கு புரிந்ததால் இத்தலம் ஆதி சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது.

இங்கு நடராஜ சபையும், ரகசியமும் உண்டு. சிதம்பரத்தில் உள்ளது போலவே நடராஜருக்கு அருகில் பெருமாளுக்கு தனி சன்னதி உள்ளது. இந்திரன், ஐராவதம், விஷ்ணு, சூரியன், சந்திரன், புதன் ஆகியோர் இத்தலம் வந்து வழிபட்டுள்ளனர். பட்டினத்தார் சிவதீட்சைப் பெற்றதும், மெய்கண்டார் அவதரித்ததும் இங்கு தான் என்று கூறப்படுகிறது.

புதனுக்குரிய தலம்

நவகிரகங்களில் ஒருவரான புதன் பகவானுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. வித்யாகாரகன் எனப்படும் புதன் பகவான் அன்னை வித்யாம்பிகையின் அரசாட்சிக்கு உட்பட்டவர் போன்றும், தாயின் அரவணைப்போடும் கூடி வீற்றிருக்கும் சேய் போன்று அன்னையின் கோயிலுக்கு இடது பாகத்தில் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார் புதன் பகவான். ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்காது. அத்துடன் அறிவுக் குறைபாடும், நரம்பு சம்பந்தமான நோய்களும் ஏற்படும். இப்படி குறைபாடு உடையவர்கள் இங்கு வந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம் என்பது ஐதீகம். இசைக்கு அதிபதியான புதன் பகவானை இசைக்கலைஞர்களும், திரைப்படக் கலைஞர்களும் இங்கு வந்து வழிபட்டு பயன்பெறுகின்றனர்.

பக்தர்கள் நேர்த்திக்கடன்

இங்கு புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து, வெண்காந்தள் மலர் சூட்டி, பாசிப்பருப்பு பொடியில் காரம் சேர்த்து நிவேதனம் செய்கிறார்கள். உடலில் நரம்பு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்க புதன் பகவானை வழிபடுகின்றனர். திருமண தோஷம், புத்திர தோஷம் உள்ளவர்கள் புதன் பகவானுக்கு பதினேழு தீபம் ஏற்றி பதினேழு முறை வலம் வந்து வழிபடுகிறார்கள்.

அன்னை பிரம்ம வித்யாம்பாள்

இத்தலத்தின் தன்னிகரில்லா தலைவியாக அன்னை பிரம்ம வித்யாம்பாள் விளங்குகிறாள். மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யேஸ்வரரை நோக்கி தவம் புரிந்து தன் கணவராகப் பெற்றார். பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்யாம்பிகையானாள். அன்னையை வழிபடுவோர் கல்வியில் சிறந்து விளங்கலாம். நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ (செழிப்பு), வலது மேற்கரத்தில் அக்கமாலை (யோகம்) அணி செய்வதைக் காணலாம். கீழ்க்கரம் அபய கரம். இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும். பணிந்தார் எவரும் தெய்வம் போல உயரலாம் என்பதாகும். பெருமை வாய்ந்த சக்திப் பீடங்களில் ஒன்று இது.

பிள்ளையிடுக்கி அம்மன்

இத்தலத்தின் வட எல்லைக்கு திருஞான சம்பந்தர் வந்த போது ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. எனவே இத்தலத்தில் கால் வைக்க பயந்து அம்மா என்றழைத்தார். குரலைக் கேட்ட பெரியநாயகி அன்னை இவரை தன் இடுப்பில் தூக்கிக் கொண்டு கோயிலுக்குள் வந்தார். திருஞான சம்பந்தரை இடுப்பில் தாங்கி வடிவில் பெரியநாயகியின் சிலை அம்மன் கோயிலின் பிரகாரத்தில் உள்ளது விசேஷம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்

அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோயிலுக்கு எப்படி செல்வது?

சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழித்தடத்தில், சீர்காழியில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருவெண்காடு. சீர்காழியில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.