Maha Shivaratri: Invoke Shiva through the Super-Grand Invocation with 259 Sacred Rituals for Ultimate Life-Transforming Blessings Join Now
சூரியனார் கோவில், Sooriyanar Kovil, Suryanar Temple
x
x
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.

சூரியனார் கோவில் | Suryanar Temple

சூரியனார் திருக்கோயில்

நவகிரகங்களில் முதன்மையாக விளங்குபவர் சூரிய பகவான். இந்து மதத்தின் ஆறு பிரிவுகளில் ஒன்றான சௌரம் என்பது சூரியனையே முழுமுதல் கடவுளாக போற்றி கொண்டாடுகிறது. சூரிய பகவான் இருகரங்களில் தாமரை ஏந்தி, வலதுபுறம் உஷா, இடது புறம் பிரத்யுஷா என்ற இரண்டு மனைவியருடன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் கம்பீரமாக வலம் வருபவர். சூரியன் நாம் வாழும் பூமியை விட 109 மடங்கு பெரியது. ஆரஞ்சு நிறமான கதிர்களை வீசிக்கொண்டு, 26 நாட்களுக்கு ஒரு சுற்று என தன்னைத்தானே சுற்றுகிறது.

சூரியனின் கதிர் அலைகள் எலும்புக்கு பலத்தை அளிக்கக் கூடியது. வெற்றி, கல்வி, மேன்மையான அறிவு, வளங்கள் ஆகிய வாழ்க்கைக்குத் தேவையானவைகளை அளிக்கக் கூடிய வல்லமை சூரிய கதிர்களுக்கு உண்டு. தமிழகத்தில் சூரியனுக்கென்று தஞ்சை மாவட்டத்தில் திருமங்கலக்குடி என்னும் ஊரில் சுமார் 1800 வருடங்கள் பழமை வாய்ந்த கோயிலாக அமைந்துள்ளது. இங்கு தை மாதம் பொங்கல் திருவிழாவையொட்டி சூரியனார் கோயிலில் நடைபெறும் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. பத்து நாட்கள் இவ்விழா நடைபெறும். விழாவில் சூரியனாரின் திருமணப் பெரு விழா மிகவும் விசேஷமானது.

கோயில் அமைப்பு

இதுவரை கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மூலம் சூரியானார் திருக்கோயில் குலோத்துங்கச் சோழ மன்னன் காலத்தில் (கி.பி.1060 – கி.பி.1118) கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. முதலில் இக்கோயில் அர்காவனம் என்றழைக்கப்பட்டு பின்னர் சூரியனார் கோயில் என்று மாறியுள்ளது. இக்கோயிலில் இராஜகோபுரம் சுமார் 50 அடி உயரம் கொண்டது. மொத்தம் மூன்று நிலைகளையும், ஐந்து கலசங்களையும் உடையது.

சூரியனுக்கென்று இந்தியாவில் இரண்டே இடத்தில் மட்டுமே கோயில் உள்ளது. வடக்கே கோனார்க் கோயிலும், தெற்கே இந்த சூரியனார் கோயிலும் அமைந்துள்ளது. கோனார்க் கோயிலில் உருவ வழிபாடு இல்லை. ஆனால் இந்த சூரியனார் கோயிலில் உருவ வழிபாடு உள்ளது. இங்கு திருமண கோலத்தில் இரண்டு மனைவியரோடு சூரிய பகவான் காட்சியளிப்பது சிறப்பு. இங்கே சூரிய பகவான் உக்கிரமாக இல்லாமல் சாந்த சொரூபமாக காட்சியளிக்கிறார். இங்குள்ள நவகிரகங்களுக்கு வாகனங்கள் இல்லை. வாகனங்கள் இல்லாமல் நவகிரக நாயகர்களாக மட்டுமே காட்சியளிக்கின்றனர்.

கோயில் தல வரலாறு

காலவ முனிவர் என்பவருக்கு தொழு நோய் ஏற்பட்டது. தனது நோய் குணமடைய வேண்டி நவகிரகங்களை வழிபட்டார். நவகிரக நாயகர்களும் அவர் கேட்டுக்கொண்டபடி வரமளித்தனர். இதனால் கோபமடைந்த பிரம்மா, “சிவபெருமானின் ஆணையின் படி எல்லா உயிர்களுக்கும் பாவ, புண்ணிய பலன்களை மட்டுமே கொடுக்குமாறு கட்டளையிட்டிருந்தோம். ஆனால் நீங்கள் கீழ்ப்படியாமல் வரம் அளிக்கிற அளவுக்கு வரம்பு மீறி செயல்பட்டுவிட்டீர்கள். எனவே நீங்கள் பூலோகத்தில் தொழுநோய் பீடித்து துன்புறுவீர்களாக” என சாபமிட்டார்.

சாபம் பெற்ற நவகிரகங்கள், அவை நீங்க வேண்டி பூலோகத்தில் வெள்ளை எருக்கு வனத்திற்கு வந்து சிவபெருமானை வேண்டி கடும் தவமிருந்தனர். அவர்கள் முன் சிவபெருமான் தோன்றி “இத்தலம் உங்களுடைய தலமாக விளங்கும். பல்வகைத் துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு உங்களை வேண்டி வழிபடும் பக்தர்களுக்கு நீங்கள் அனுக்கிரகம் செய்வீர்களாக என அருளினார்.”

கண் நோய்கள் தீர்க்கும் சூரிய பகவான்

சூரிய பகவான் பார்வையை வழங்கக்கூடிய தெய்வமாகத் திகழ்கிறார். அதனால் பார்வை குன்றியவர்களும், கண் தொடர்பான நோய்கள் உடையவர்களும் இங்கு வந்து வழிபட்டு பலன் பெறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் முழு முதல் கடவுளாக சூரியன் இங்கே கருவறையில் அருள்பாலிக்கிறார். இது நவக்கிரக கோயிலாக அமைந்துள்ளது.

சூரியனை சுற்றியுள்ள கிரகங்கள்

சூரியனை சுற்றியுள்ள மற்ற எட்டு கிரகங்களான சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களுக்கு சூரியனார் கோயில் வளாகத்தில் சுற்றாலயங்களாக அமைக்கப்பட்டுள்ளன. சூரியன் எதிரே உள்ள மண்டபத்தில் குதிரை நிற்கிறது. பிரகஸ்பதி என்றழைக்கப்படும் குரு தனியாக சன்னதியில் இல்லாமல் சூரியனின் எதிரில் குதிரை வாகனத்தின் பின் நிற்கிறார்.

தோஷங்கள் நீங்க

சுக்கிர திசை, குரு திசை, சனி திசை, ராகு திசை, கேது திசை ஆகியவைகளால் பாதிக்கப்பட்டவர்கள், தோஷங்கள் நீங்குவதற்காக இங்கு வந்து அந்தந்த நவகிரக தெய்வங்களை வேண்டி விரதம் மேற்கொண்டு இங்கு வந்து வழிபடுகின்றனர். தமிழகத்தில் நவகிரகங்களுக்கென்று 9 கோயில்கள் தனித்தனியாக அமைந்துள்ளன. ஆனாலும் இங்கு சூரியனார் கோயிலில் வந்து வழிபட்டால் அனைத்து தலங்களையும் வழிபட்டதற்கான பலன் கிடைக்கிறது என்று கூறப்படுகிறது.

ஏழரைச்சனி, அஷ்டமத்துச் சனி, ஜென்மச் சனியால் பாதிக்கப்பட்டவர்களும், பிற நவகிரக தோஷமுள்ளவர்களும் சூரியனார் கோயிலுக்கு வந்து பன்னிரண்டு ஞாயிற்றுக்கிழமை காலம் வரை தலவாசம் செய்து வழிபட வேண்டும். குறிப்பிட்ட ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலிருந்து தொடர்ந்து பன்னிரெண்டு ஞாயிற்றுக்கிழமை முடிகிற வரை சுமார் இரண்டரை மாத காலம் (78 நாட்கள்) இத்தலத்திலே தங்கியிருந்து நவதீர்த்தங்களிலும் நீராடி விரதமிருந்து திருமங்கலக்குடி பிராணநாதரையும், மங்கள நாயகியையும், இத்தலத்து நாயகர்களையும் முறைப்படி வழிபட்டு வரவேண்டும். தங்களுயை தோஷத்துக்கான பரிகாரங்களையும் செய்து வர வேண்டும். இப்படி செய்து வந்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

பக்தர்களின் நேர்த்திக்கடன்

நாடி பரிகாரம் செய்வது இங்கு விசேஷம் என கூறப்படுகிறது. நவகிரக ஹோமம் செய்யலாம். சூரிய அர்ச்சனை செய்யலாம், சர்க்கரைப் பொங்கல் அபிஷேகம் செய்வது இத்தலத்தின் முக்கிய நேர்த்திக்கடனாக பார்க்கப்படுகிறது. நவகிரக தோஷம் அகல நவகிரக அர்ச்சனை, நவகிரக அபிஷேகம் செய்தல் நலம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மண வரை நடை திறந்திருக்கும்.

கோயிலுக்கு எப்படி செல்வது?

கும்பகோணத்திலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும், ஆடுதுறையிலிருந்தும், அணைக்கரை திருப்பனந்தாளிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. பேருந்தில் வருவோர்களுக்கு திருமங்கலக்குடி காளியம்மன் கோயில் பேருந்து நிற்கும் இடத்தில் இறங்கி வரலாம்.