Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW
திருநாகேஸ்வரம் கோவில், Thirunageswaram Temple, Tirunageswaram Naganathar Temple
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

திருநாகேஸ்வரம் கோவில் | Thirunageswaram Temple

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்

நவகிரகங்களில் மிகவும் வலிமையானவர் ராகு பகவான். கலியுகத்தில் மிகவும் வலுவாக செயல்படும் கிரகமும் இவர் தான். ஒளியை வழங்கும் கிரகங்களான சூரியனையும், சந்திரனையும் தன் பிடியில் சிக்க வைத்து, அவர்களின் சக்தியையே செயலிழக்கச் செய்யும் அளவுக்கு வலிமை படைத்தவர் ராகு பகவான். ராகுவை யோகக்காரகன் என்றும் கூறுவார்கள். ராகுவைப் போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்று கூறுவதுண்டு. ராகு பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்வார். ராகுவின் தசாபுத்தி 18 ஆண்டுகள் நடைபெறும். நிழல் கிரகமான ராகு பகவானுக்கென்று சொந்த வீடு கிடையாது. அதனால் தான் இருக்கும் வீட்டையே சொந்த வீடாக எடுத்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டவர். ஜோதிடத்தில் கிரகப் பெயர்ச்சிகளில் சனிப்பெயர்ச்சி எந்தளவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதோ, அதே போல் ராகு, கேது பெயர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அரசனை ஆண்டியாக்குபவரும் இவர் தான், அதே போல் ஆண்டியை அரசனாக்குபவரும் இவர் தான். ஆக ஒருவரது ஜாதகத்தில் ராகு அமைந்திருக்கும் இடம் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தமிழகத்தில் ராகுவின் பரிகாரத்தலமாக தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரம் என்ற ஊரில் அமைந்துள்ளது அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில். இது மிகவும் பிரசித்தி பெற்ற பரிகாரத்தலமாகும். இக்கோயிலில் வீற்றிருக்கும் மூலவர் நாகேஸ்வரர், நாகநாதர். தாயார் பிறையணி வானுதலாள் (கிரிகுஜாம்பிகை) என்ற திருநாமத்தோடு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இத்திருத்தலத்தில் அன்னை கிரிகுஜாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியரும் ஒரே சன்னதியில் காட்சி தருவது சிறப்பு. இங்கு தனி சன்னதி கொண்டிருக்கும் ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்யும் போது பால் நீல நிறத்தில் மாறுகிறது. இத்தலம் சிறந்த ராகு தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது.

கோயில் அமைப்பு

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் பிரதான வாயிலில் அமைந்திருக்கும் கிழக்கு கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. நான்கு திசைகளிலும் நான்கு கோபுர வாயில்கள் அழகிய சிற்பங்களுடன் உள்ளன. இத்திருக்கோயில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலங்களில் இது 92வது தேவாரத்தலமாகும். இங்கு மூலவர் நாகேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலம் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடப்பெற்ற சிவத்தலமாகும். சேக்கிழார் திருப்பணி செய்த தலமாகும். ராகு, தட்சகன், கார்கோடகன், ஆதிசேஷன், வாசுகி வழிபட்ட தலம் என்ற சிறப்பும் இத்தலத்திற்கு உண்டு. இங்கு நிருத்த கணபதி, நந்தி, சூரியதீர்த்தம் உள்ளன. நூற்றுக்கால் மண்டபம் சூரிய தீர்த்தத்தின் கரையில் மழுப்பொறுத்த விநாயகர் சன்னதி, இரண்டாம் பிரகாரத்தில் நாகராஜா உருவமுள்ளது. சேக்கிழார், அவரது தாயார், தம்பி உருவங்களும் இத்தலத்தில் அமைந்துள்ளன.

தல வரலாறு

சுசீலர் என்ற முனிவரின் மகன் சுகர்மன். ஒருசமயம் வனத்தின் வழியாக இந்த சுகர்மன் சென்று கொண்டிருந்த போது, நாக ராஜனான தக்ககன் என்ற பாம்பு தீண்டியது. இதனையறிந்த முனிவர் சுசீலர் மிகுந்த கோபமுற்று, தனது மகனை தீண்டிய தக்ககனை மானிடனாக பிறக்க வேண்டி சாபமிட்டார். இந்த சாபத்திலிருந்து விடுபட வேண்டி தக்ககன் காசிப முனிவரிடம் ஆலோசனை கேட்டான். “பூலோகம் சென்று லிங்க பிரதிஷ்டை செய்து சிவனை பூஜித்து வழிபடு உனது சாபம் நீங்கும்” என்று கூறினார் காசிப முனிவர். அதன்படியே பூமிக்கு வந்த தக்ககன் சிவலிங்க பிரதிஷ்டை செய்து பூஜை செய்தான். சிவபெருமானும் அவனுக்கு காட்சி தந்து சாபவிமோசனம் அளித்தார். இவரே இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். நாகமாகிய தக்ககனுக்கு அருளிபுரிந்ததால் இத்தல இறைவனுக்கு நாகநாதர் என பெயர் வந்தது.

ராகு ஸ்தலம்

இத்திருத்தலமானது சிறந்த ராகு தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. ராகு பகவான் தனது மனைவிகளான சிம்ஹி, சித்லேகாவுடன் மங்கள ராகுவாக தம்மை வழிபடும் பக்தர்களுக்கு அருள்புரிவது இத்தல சிறப்பாகும். பொதுவாக ராகு பகவான் மனித தலை, நாக உடலுடன் தான் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் ராகு பகவான் இக்கோயிலில் மனித உருவில் அருள்புரிகிறார். ராகு பகவானை இக்கோலத்தில் காண்பது அபூர்வம். 1986ம் ஆண்டு பிப்ரவரி 6ம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக ராகு பகவானுக்கு அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது அதிசயம்.

ராகு தோஷ பரிகாரத் தலம்

நாக தோஷம் உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் தோஷம் நிவர்த்தியாகிறது என்பது ஐதீகம். பாலாபிஷேகத்தின் போது பால் நீல நிறமாக மாறுவது மிகப்பெரிய அதிசயம். இங்கு தினமும் காலை 9.30 மணி, 11.30 மணி, மாலை 5.30 மணி மற்றும் ராகு காலங்களில் ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. ஒரு சிவராத்திரியன்று தான் ராகு பகவான் இத்தல இறைவனை வழிபட்டு அருள்பெற்றாராம். இதனடிப்படையில் இப்போதும் சிவராத்திரியின் போது இரண்டு கால பூஜையை ராகு பகவானே செய்கிறார் என்பது ஐதீகம். சிவராத்திரி மற்றும் ராகு பெயர்ச்சியின் போது ராகு பகவான் உற்சவர் வீதியுலா செல்கிறார். ராகு பெயர்ச்சியின் போது ஏராளமான பக்தர்கள் இங்கு பரிகார பூஜை செய்து கொள்கின்றனர். தாயார் கிரிகுஜாம்பிகை சன்னதியில் விநாயகரும், அருகில் ராகு பகவான், யோக ராகு என்ற பெயரிலும் அமைந்திருக்கின்றனர். கேதுவிற்கு அதிபதி விநாயகர் ஆவார். எனவே இங்குள்ள விநாயகரையும், யோக ராகுவையும் வணங்கினால் ராகு, கேது தோஷம் நிவர்த்தியாகிறது என்று கூறப்படுகிறது.

மேலும் திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனான நாகநாதரை வணங்கி வழிபடுகின்றனர் பக்தர்கள். சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

கோயில் திறந்திருக்கும் நேரம்

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் காலை 6 மணி முதல் 12.45 மணி வரையிலும், மாலை 4 மணிமுதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

கோயிலுக்கு எப்படிச் செல்வது?

கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருநாகேஸ்வரம் திருத்தலம். கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உள்ளன. திருநாகேஸ்வரத்தில் இருந்து தெற்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உப்பிலியப்பன் என்கிற திவ்ய தேசத்தலம் அமைந்துள்ளது சிறப்பு.