x
x
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.

கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில் | Keezhaperumpallam Kethu Temple

அருள்மிகு நாகநாதர் திருக்கோயில்

நவகிரகங்களில் மற்றொரு நிழல் கிரகம் கேது. கேதுவுக்கு அதிபதி விநாயகர் பெருமான். கேது பகவானை ஞானக்காரகன் என்பர். ராகுவைப் போலவே கேதுவுக்கும் சொந்த வீடு கிடையாது. தான் அமர்ந்த வீட்டையே சொந்த வீடாக எடுத்துக் கொள்வார். கேது சூரியனை ஒரு முறை சுற்றி வர 18 1/2 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். கேதுவின் தசாபுத்தி காலம் ஏழு ஆண்டுகள். அசுவினி, மகம், மூலம் ஆகியவை கேதுவின் நட்சத்திரங்கள். கேது பகவான் செவ்வாயைப் போல செயல்படுவார் என்பதால் மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம், தனுசு, மீனம் லக்னக்காரர்களுக்கு கேது நன்மை செய்வார். ஜோதிடத்தில் கேது பகவான் மாற்றங்களைத் தரும் கிரகம் எனக் குறிப்பிடப்படுகிறார். இடமாற்றம் என்பது கேதுவின் காரகத்துவம், வேலையில் மாற்றம், வீடு இடமாற்றம், மன மாற்றம், வெளிநாடு யோகம் போன்றவைகளை கேது பகவான் ஏற்படுத்துவார். ஆன்மீக ஈடுபாட்டையும் உருவாக்குபவர். வாழ்க்கையை புரட்டிப் போட்டு நல்லதை கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் தலைகீழாக மாற்றுபவர் கேது பகவான்.

கேதுவிற்கான சிறந்த பரிகாரத் தலமாக தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டம், கீழப்பெரும்பள்ளம் எனும் ஊரில் அமைந்துள்ள அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் விளங்குகிறது. இத்தலத்தின் மூலவர் நாகநாத சுவாமிகள். தாயார் சௌந்தர்யநாயகி. தல விருட்சம் மூங்கில். இங்கே அமைந்துள்ள தீர்த்தம் நாகதீர்த்தம். இத்திருக்கோயில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. கேதுவுக்கு அதிபதி விநாயகப் பெருமான். இத்தலத்தில் உள்ள விநாயகர் அனுக்கிரக விநாயகர் என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார். இங்கே கேது பகவான் தனி சன்னதியில் மேற்கு நோக்கி இருக்கிறார். பாம்புத் தலையுடனும், மனித உடலுடனும் சிம்ம பீடத்தில் இரு கைகூப்பி சிவன் சன்னதியை வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். ஜாதக ரீதியாக நாகதோஷம் உள்ளவர்கள் முதலில் நாகநாதரையும், பின்னர் கேதுவையும் வழிபட வேண்டும். கேது பகவானுக்குரிய செவ்வரளி மலர் வைத்து, கொள்ளு சாதம் நைவேத்தியம் படைத்து, ஏழு தீபம் ஏற்றி வணங்குவது இத்தலத்தில் விசேஷம். கேது இங்கு பிரதான மூர்த்தி என்பதால் நவகிரக சன்னதி இல்லை. கேது சன்னதிக்கு அருகில் இரண்டு சூரியன் சிலைகளும், சனீஸ்வரர் சிலையும் உள்ளன. இங்கே உள்ள சூரியனுக்கு உத்ராயண புண்ணிய காலத்தில் ஒரு சூரியனுக்கும், தெட்சிணாயன புண்ணிய காலத்தில் மற்றொரு சூரியனுக்கும் விசேஷ பூஜை நடைபெறுகிறது.

தல வரலாறு

அமுதம் பெற வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர். மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற நாகத்தை கயிறாகவும் பயன்படுத்தினர். தொடர்ந்து பாற்கடலை கடைந்ததால் வாசுகி நாகம் மிகவும் பலவீனமடைந்தது. ஒரு கட்டத்தில் களைப்புமிகுதியால் விஷத்தை உமிழ ஆரம்பித்தது. இதைக் கண்டு பயந்து போன தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமானும் தேவர்களை காப்பாற்ற வேண்டி அந்த விஷத்தை தானே அருந்தி நீலகண்டன் ஆனார். தனது விஷத்தை சிவபெருமான் விழுங்க வேண்டி வந்ததை எண்ணி வாசுகி நாகம் மிகவும் வருத்தமுற்றது. சிவ அபச்சாரம் செய்ததற்காக வருந்தி சிவபெருமானை நோக்கி தவம் இருந்தது. வாசுகியின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் காட்சி தந்தார். வாசுகிக்கு பாப விமோசனத்தை அளித்து, அதன் தியாக உணர்வையும் பாராட்டினார். அப்போது வாசுகி தனக்கு அருள் செய்த கோலத்தில் , தனக்கு காட்சி கொடுத்த இத்தலத்தில் எழுந்தருள வேண்டும் இறைவா என வேண்டியது. வாசுகியின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமானும் நாகத்தின் பெயரை தாங்கி நாகநாதர் எனும் திருநாமத்தில் இத்தலத்தில் அமர்ந்தார்.

பக்தர்களின் பிரார்த்தனை

இத்தலத்தில் நரம்பு, வாயு தொடர்பான நோய்கள் நீங்கவும், பயம் நீங்கவும், தொழில், வியாபாரம் சிறக்க, தம்பதியர் ஒற்றுமையுடன் இருக்க, ஆயுள் அதிகரிக்கவும், குடும்பத்தில் எப்போதும் ஐஸ்வர்யம் நிலைக்கவும், தலைமுறை சிறக்கவும் இறைவன் நாகநாதரையும், கேது பகவானையும் வழிபடுகின்றனர். ஜாகத்தில் கேது திசை நடப்பவர்கள் அவர்களது ஜென்ம நட்சத்திர தினத்தன்று இத்தலம் வந்து பாலாபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். நேர்த்திக் கடனாக பக்தர்கள் கேது பகவானுக்கு கொள்ளு சாதம் படைத்து, பல வர்ண வஸ்திரம் சாத்தி வழிபடுகிறார்கள்.

கேதுவுக்குரிய பரிகாரத் தலம்

இத்திருத்தலம் கேதுவுக்குரிய பரிகாரத் தலம். ராகு காலத்திலும், எமகண்டத்திலும் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறுகிறது. பூஜையின் போது 16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்து, கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை நைவேத்யமாக படைக்கின்றனர். அதோடு கேது பகவானுக்கு பல வண்ணத்தில் வஸ்திரம் சாத்தி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றியும் வழிபடுகிறார்கள். கொள்ளு சாத நைவேத்யத்தை இங்கேயே விநியோகம் செய்து விடுகிறார்கள். வீட்டிற்கு எடுத்துச் செல்லக் கூடாது எனக் கூறப்படுகிறது. இந்த நைவேத்யத்தை கோயிலியே செய்து தருகிறார்கள் என்பது சிறப்பு. இதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கிறார்கள்.

சனி மற்றும் திங்கட்கிழமைகளிலும், ஜென்ம நட்சத்திர நாளன்றும் கேது பகவானை வழிபடுவது சிறந்த பலன்களைத் தரும். அபிஷேகம் நடத்துவதற்கும், ஹோமம் செய்வதற்கும் தனியாக கட்டணம் வசூலிக்கிறார்கள். இங்கே பங்குனியில் வாசுகி உற்சவம் நடைபெறுகிறது. விழாவின் மூன்றாம் நாளன்று கேதுவுக்கு சிவபெருமான் காட்சி தந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருடத்தில் ஒரு முறை நடைபெறும் இந்த விழாவின் போதும், கேது பெயர்ச்சியின் போதும் மட்டும் கேது பகவான் வீதியுலா செல்கிறார்.

சிறப்பு ஹோமம்

அருள்மிகு நாகநாதர் சுவாமி திருக்கோயிலில் ராகு, கேது பெயர்ச்சியன்று சிறப்பு ஹோமம் நடத்துகிறார்கள். இந்த ஹோமத்தை அர்ச்சகர்களே செய்கிறார்கள். இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு கட்டணம் ஏதும் கிடையாது. கேதுவுக்குரிய எண் 7 என்பதால் 16 விதமான பூஜைகள் செய்து, 7 லட்சம் ஜெப மந்திரங்கள் சொல்லியும், அதன் பின்னர் கொள்ளு தானியம், கொள்ளினால் செய்யப்பட்ட பாயாசம், சூர்ணம், வடை, சாதம், பொங்கல் மற்றும் கொள் உருண்டை என 7 விதமான நைவேத்யங்களை ஹோமத்தில் இடுகின்றனர். பக்தர்கள் 16 விதமான தானங்களை அந்தணர்களுக்கு செய்வதன் மூலம் சிறந்த பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம். சிறப்பு ஹோமம் நடைபெறுகின்ற தினத்தில் சுமார் 7 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறுகிறது. அன்னதானத்திற்கு தேவையான பொருட்களை பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் முன்னதாக வழங்கலாம் என்று கூறப்படுகிறது.

கோயில் திறந்திருக்கும் நேரம்

அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் காலை 6 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோயிலுக்கு எப்படிச் செல்வது?

இத்திருக்கோயில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் இருந்து 22 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. பேருந்து வசதிகள் அதிகமில்லை. மயிலாடுதுறையில் இருந்து கார் மற்றும் ஆட்டோவில் சென்று வரலாம்.