x
x
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.

ஆலங்குடி குருபகவான் திருக்கோவில் | Alangudi Guru Temple

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்

நவகிரகங்களில் பரிபூரண சுப பலத்தைப் பெற்றவர் குரு பகவான். தேவர்களுக்கு குருவான இவரை பிரகஸ்பதி என்றும், வியாழன் என்றும் அழைக்கிறார்கள். கிரகங்களில் வியாழன் ராஜ கிரகம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. வியாழன் கிரகம் சூரியனை ஒருமுறை சுற்றி வர 12 ஆண்டுகள் ஆகின்றன. வானவியலின் படி வியாழன் ஆண்டுக்கு ஒரு முறை ராசி மாறுகிறது. குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். அந்தளவுக்கு குருவின் பார்வை பலம் வாய்ந்தது. நவகிரகங்களில் குரு பகவான் வடக்கு திசை நோக்கி வீற்றிருக்கிறார். குருவுக்கு உகந்த நிறம் மஞ்சள். விருப்பமான நைவேத்தியம் கொண்டைக் கடலை. ஜோதிடத்தில் குரு பகவான் புத்திகாரகன் என்றும், தன காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். அனைத்து கிரகங்களின் தோஷத்தையும் நீக்கக் கூடியவர் குரு.தமிழகத்தில் குரு பரிகாரத் தலமாக திருவாரூர் மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில். இறைவனுக்கு காசி ஆரண்யேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. தாயார் பெயர் ஏலவார்குழலி என்ற சுக்ரவார அம்பிகை ஆகும். சுக்ரவாரம் என்பது வெள்ளிக்கிழமை. அது பெண்களுக்கு உகந்த நாள் என்பதால், வெள்ளியின் பெயரையே தாங்கி தனி சன்னதியில் அம்சமாகவும், நேர்த்தியாகவும் அருள்பாலிக்கிறாள். உற்சவர் தெட்சிணாமூர்த்தி. தலவிருட்சம் பூளை எனும் செடி. இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற தென்கரை தலங்களில் 98வது தலம். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் இது 161வது தலம். இத்திருக்கோயில் சுமார் 1900 வருடங்களுக்கு முன் சோழர்களால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. விசுவாமித்திரர், முசுகுந்தர், வீரபத்திரர் பூஜித்த தலம் இது. அம்பிகை இத்தலத்தில் தோன்றி தவம் செய்து இறைவனை திருமணம் புரிந்து கொண்ட தலம்.

கோயில் அமைப்பு

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன் ஊரின் நடுவே கம்பீரமாக காட்சியளிக்கிறது. இத்திருக்கோயிலின் அமைப்பு சற்று வித்தியாசமானது. ஆம், உள்ளே நுழைந்ததும் நம் கண்ணில் படுவது அம்மன் சன்னதி. அடுத்து சுவாமி சன்னதியைப் பார்க்கலாம். இதன் பிறகு குரு சன்னதி வருகிறது. மாதா, பிதா, குரு என்ற அடிப்படையில் இக்கோயில் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. விசேஷ மூர்த்தியாக குரு தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். கோயிலின் உள் பிரகாரங்களில் கலங்காமல் காத்த விநாயகர், முருகன், லட்சுமி, நால்வர், சூரியேசர், சோமேசர், குரு சோமேசேசுரர், சோமநாதர், சப்தரிஷி நாதர், விஷ்ணு நாதர், பிர்மேசர் ஆகிய சப்த லிங்கங்களோடு, காசி விசுவநாதர், விசலாட்சி, அகத்தியர் முதலியவரும் உள்ளனர்.

சுவாமி மகா மண்டபத்தில் நந்தி பலிபீடம் செப்புத் திருமேனியுடன் அமைந்துள்ளது. ஆபத்சகாயேஸ்வரர் கிழக்கு நோக்கிய சன்னதியில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் சிறப்பு வாய்ந்த குரு தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அதோடு ஞான கூபம் என்னும் தீர்த்தக் கிணறு உள்ளது. சுக்கிரவார அம்மன் சன்னதி, சனீஸ்வரர் சன்னதி, வசந்த மண்டபம், சப்தமாதா ஆலயமும் உள்ளன.

தல வரலாறு

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் இத்தலத்திற்கு வரும் போது வெட்டாற்று வெள்ளப் பெருக்கில் ஆபத்சகாயரே ஓடக்காரராக வந்து கரையேற்றி காட்சி தந்தார் என்பது வரலாறு. ஓடம் நிலைதடுமாறி பாறையில் மோதிய போது காத்த விநாயகர், கலங்காமல் காத்த விநாயகர் என்று இத்தலத்தில் போற்றப்படுகிறார். தேவர்களை காக்க வேண்டி ஆலகால விஷத்தை இறைவன் அருந்தி, காத்தருளியதால் இவ்வூருக்கு ஆலங்குடி என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. இங்குள்ள மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

அம்மைத் தழும்புகள்

இத்திருக்கோயிலில் திருவாரூருக்கு ஒரு மன்னனால் எடுத்துச் செல்லப்பட்டு, பின் அங்கிருக்க விரும்பாமல், ஒரு அர்ச்சகரின் உதவியோடு மீண்டும் ஆலங்குடிக்கே திரும்பிய சுந்தரர் சிலை கோயிலுக்குள் இருக்கிறது. தட்சிணாமூர்த்தி சன்னதியை ஒட்டி உற்சவர் சிலைகள் இருக்கும் இடத்தில் சுந்தரர் சிலை உள்ளது. இந்த சிலையை திருவாரூரில் இருந்து எடுத்து வந்த அர்ச்சகர், காவலர்களிடம் இருந்து தப்பிக்க, அம்மை கண்டதனது குழந்தையை எடுத்துச் செல்வதாக கூறினார். ஆலங்குடி வந்து பார்த்த போது சிலைக்கே அம்மை போடப்பட்டது தெரிய வந்துள்ளது. இன்றளவும் இங்கே அமைந்துள்ள சுந்தரர் சிலையில் அம்மைத் தழும்புகள் இருப்பதைக் காணலாம்.

நாகதோஷம் தீர்க்கும் தலம்

இத்தலத்தில் நாகதோஷங்கள் நீங்கவும், பயம், குழப்பம் தீர இங்குள்ள விநாயகரையும், திருமணத் தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்த விளங்கவும் இங்கு பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். தங்களது பிரார்த்தனைகள் நிறைவேறியதும் இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

நடைபெறும் விழாக்கள்

மகா குரு வாரத்தன்று புனித நீர் கொண்டு வருதலும், பஞ்சமுக தீபாராதனையும், மாசி மாத கடைசி குரு வாரத்தன்று சங்காபிஷேகமும், விசேஷ அபிஷேக ஆராதனையும் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் நடைபெறுகிறது. தைப்பூசத்தன்றும், பங்குனி உத்திர திருநாளிலும் தீர்த்தவாரி நடைபெறுகிறது. சித்ரா பௌர்ணமியைக் கொண்டு 10 நாள் உற்சவ விழாவும், தட்சிணாமூர்த்திக்கு தேர்த் திருவிழாவும் நடைபெறுகிறது. தட்சிணாமூர்த்தி உற்சவராக தேரில் பவனி வருவது தமிழகத்திலேயே இங்கு மட்டும் தான்.

மாசி மாத சிறப்பு

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத வியாழக்கிழமையில் மட்டுமே குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. ஒரு காலத்தில் பாசிபடியாத தாலிக்கயிறைக் கூட மாசியில் மாற்றி விடுவார்களாம் பெண்கள். குரு பலம் இருப்பவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்று சொல்வார்கள். அந்த குரு பகவானுக்கு மாசியில் அபிஷேகம் நடப்பது கூடுதல் சிறப்பு கூறப்படுகிறது. குருபெயர்ச்சி நாளைக் காட்டிலும் இந்த நாள் விசேஷ சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.

குரு அருள் பெறுவதற்கு

இத்திருக்கோயிலில் குரு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்தும், 24 நெய் தீபங்கள் ஏற்றியும் வழிபட குரு தோஷங்கள் நீங்கி நன்மை பெறலாம். முல்லை மலர் அர்ச்சனை, மஞ்சள் வஸ்திரம் சாற்றுதல், கொண்டைக் கடலை, சர்க்கரைப் பொங்கல் நிவேதனங்களுடன் நாம அர்ச்சனை, பாலாபிஷேகம் மற்றும் குரு ஹோமம் செய்தால் சகல தோஷங்களும் நீங்கி குரு பகவான் அருள்புரிவார் என்பது ஐதீகம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் காலை 6.30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோயிலுக்கு எப்படிச் செல்வது?

கும்பகோணம் – நீடாமங்கலம் – மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளது.