பூண்டி, அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயிலானது கோவை மாநகரிலிருந்து மேற்கே சுமார் 36 கி.மீட்டதூரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமையப்பெற்றுள்ளது. இது கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்றாகும்.வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத் தலமாகவும் சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. இதனை தென் கயிலை என்று கூட கூறுவார்கள். இது மேகங்கள் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் “வெள்ளியங்கிரி” என்ற பெயர் பெற்றது. இம் மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது. இந்த அடிவாரப் பகுதியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது.
முன்னொரு யுகத்தில் ஒரு பெண் ‘சிவனையே மணப்பேன்’ என உறுதியாக வாழ்ந்து கொண்டிருந்தாள். ஈசன் இந்நாளுக்குள் தன்னை அடைய வேண்டும் என உறுதியெடுத்துக் கொண்டாள். “ஈசன் வராது போனால், நான் உயிர் துறப்பேன்” என சூளுரைத்திருந்தாள். அவள் பெயர் கன்னியாகுமரி. இதனை அறிந்த ஈசன் அவளை மணம் புரிவதற்காக வருகிறார். ஆனால் சில இடையூறுகள் காரணமாக தாமதம் ஆனதால் அவளை மணம் புரிய இயலாமல் போனது. அவள் உயிர் துறந்து விடுகிறாள். அவ்வேளையில் மிகவும் மனமுடைந்த மகாதேவன், காடு மலைகளை கடந்து விரக்தியில் தனிமையை வேண்டி சென்றுகொண்டே இருந்தார். அப்போது அவர் ஓர் மலையின் உச்சியை அடைந்து, அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். பின்பு பல நாட்கள் கழிந்து மனம் தெளிவாகி கைலாயம் திரும்பினார். அவ்விடமே தென் கைலாயமானது. அதுவே நமது வெள்ளியங்கிரி ஆண்டவன் சுயம்புவாக குடிகொண்டுள்ள வெள்ளியங்கிரி மலையாகப்பெற்றது.
இதில் ஏழு மலைகள் இருப்பதாகக் கூறுவார்கள். மலையேற்றம் செய்யும்போது, ஏழு ஏற்ற – இறக்கங்கள் இருப்பதனால், மலையேற்றம் செய்பவருக்கு ஏழு மலைகள் ஏறியதைப் போன்ற அனுபவம் ஏற்பட்டுவிடுகிறது. இதனால் ஏழுமலை என்றார்கள். இம்மலையில் கைதட்டி சுனை, பாம்பாட்டி சுனை போன்ற பல சுனைகள் உள்ளன.மலையில் சூறைக்காற்று விடாமல் வீசுவதால் இங்கு புற்களைத் தவிர வேறொன்றும் வளர்வதில்லை. பிரம்மாண்டமான மூன்று பாறைகள் கூடி ஒரு லிங்கத்திற்கு ஆலயமாய் மாறி நிற்கிறது.

பரம்பொருளே மனசாந்தி அடைந்த இந்த இடத்தில், யுகங்களாக பற்பல யோகிகள், முனிவர்கள், ரிஷிமார்கள் என பலரும் தவிமிருந்து மன அமைதியை மட்டுமின்றி எண்ணற்ற சக்திகளையும் அடையப்பெற்றனர் வெள்ளியங்கிரி மலை பயணம் நமக்கு ஆன்மீக உணர்வை அதிகரிப்பதோடு உடலில் புத்துணர்வும் பெருகுகிறது என்பதே உண்மை.
இங்கிருக்கும் சிவபெருமான் “வெள்ளியங்கிரி ஆண்டவர்” என்றும் அம்பாள் “மனோன்மணி” என்றும் அழைக்கப்படுகிறார்கள். பன்னெடுங்காலமாக சித்தர்கள் விரும்பி வழிபடும் கோவிலாக இது இருந்திருக்கிறது. இங்கிருக்கும் ஏழு மலைகளும் உடலில் இருக்கும் “ஏழு சக்கரங்களை” குறிப்பதாக கூறுகிறார்கள். இமய மலையில் இருக்கும் கயிலாய மலைக்கு யாத்திரை போக முடியாதவர்கள், “தென்கயிலாயம்” என போற்றப்படும் இந்த வெள்ளியங்கிரி மலையாத்திரை செய்வதால் கயிலாய மலைக்கு சென்ற பலனை அடைவார்கள் என சித்தர்கள் கூறியிருக்கின்றனர். இந்த மலையில் இருக்கும் ஆண்டி சுனை தென்கயிலாயத்தின் “மானசரோவர்” என்றழைக்கப்படுகிறது. வெள்ளியங்கிரி மலை உச்சி வரை செல்ல இயலாதவர்கள் மலையின் அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி நாதரை தரிசித்து செல்கின்றனர்.
வெள்ளியங்கிரி மலை யாத்திரை செல்ல நினைப்போர் பொதுவாக ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை மலை ஏறுகின்றனர். அதன் பிறகு கடும் பனி, குளிர் போன்ற காரணத்தால் பலர் பயணத்தை தவிர்பதுண்டு. அதோடு மற்ற காலங்களில் விலங்குகளின் நடமாட்டமும் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இம்மலை சுமார் 3500 அடி உயரம் கொண்டது. இம்மலை ஏறுவதற்கு கடினமாக இருந்தாலும் ஆறு சிகரங்களை கடந்து ஏழாவது மலையில் சுயம்பு வடிவில் வீற்றிருக்கு சிவனை தரிசிக்கும் சமயத்தில் நமக்கு கிடைக்கும் இன்பம் அளவில்லாதாது.
கோயம்புத்தூரிலிருந்து சிறுவாணி செல்லும் வழியில் 40 கி.மீ. தூரத்தில் கோவில் அமைந்துள்ளது. காந்திபுரத்திலிருந்து இருட்டுப்பள்ளம் (32 கி.மீ.) சென்று அங்கிருந்து வலதுபுறம் (8 கி.மீ.) சென்றால் கோவிலை அடையலாம். காந்திபுரத்திலிருந்து பூண்டிக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு ஒருமுறை பஸ்வசதி உள்ளது.
December 25, 2025
December 24, 2025