Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
தீராத நோயில் இருந்து விடுபட உதவும் மந்திரம்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

தீராத நோயில் இருந்து விடுபட உதவும் மந்திரம்

Posted DateNovember 9, 2023

“உள்ளம் பெரும் கோவில்; ஊன் உடம்பே ஆலயம்” என நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். செல்வங்கள் பல இருந்தாலும் ஆரோக்கியம் இருந்தால் தான் அவற்றை அனுபவிக்க இயலும். நமது உடல் இறைவன் நமக்கு அளித்துள்ள மிகப் பெரிய சொத்து. அதன் மதிப்பே ஆரோக்கியம் தான். எனவே நாம் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதுவே நமது தலையாய கடமை ஆகும். நமக்கு இந்த உடலை அளித்த ஆண்டவனுக்கு நாம் செலுத்தும் நன்றியே இந்த உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது தான். அதனால் இறைவனிடம் அனுகிரகம் செய்ய சொல்லி கேட்கும் போது கூட பெரியவர்கள், ஆயுள், ஆரோக்கியத்தை முதலில் சொல்லி விட்டு, அதற்கு பிறகு தான் ஐஸ்வர்யத்தை வேண்டுவார்கள்.

நோய்கள் நான்கு வகையில் ஏற்படுகின்றது. ஒன்று பரம்பரை பரம்பரையாக வருவது. அதாவது நமது தாத்தா, பாட்டி அல்லது அம்மா அப்பாவிற்கு இருக்கும் நோய்கள் நம்மையும் தாக்கலாம்.  இரண்டாவது நாம் உண்ணும் உணவு முறையால் ஏற்படும் நோய். மூன்றாவது பிறரின் கண் திருஷ்டி, பில்லி சூனியம் போன்றவற்றால் ஏற்படுவது. நான்காவதாக பருவ கால நிலை மாற்றம் அல்லது தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படுவது.

தற்காலத்தில் நாகரீகம் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளதோ அந்த அளவிற்கு நோய்களும் அதிகமாக இருக்கிறது, ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு நோய் இருந்து கொண்டு தான் இருக்கிறது தீராத நோயால் அவதிப்படுபவர்களும் உண்டு.  என்ன வென்று பெயர் கூட தெரியாத பல வியாதிகள் புதிது புதிதாக உருவாகி மனித இனத்தை வாட்டிக் கொண்டிருக்கிறது. பல மருத்துவர்களை அணுகியும், பல மருந்துகள் உண்டும் நோய்கள் சிலருக்கு தீராமல் இருக்கலாம். நாமும் எத்தனையோ மருந்து மாத்திரைகளை எடுத்தாலும் கூட சில வியாதிகள் சரியாவதும் இல்லை. சில வியாதிகள் என்னவென்று  கண்டுபிடிக்க கூட முடிவதில்லை. எது எப்படியோ நோய் இல்லாத வாழ்க்கை வாழத் தான் நாம் அனைவரும் ஆசைப்படுகிறோம். எனவே நோயில்லாத வாழ்க்கை வாழ நாம் மருந்துகள் உட்கொள்வதோடு இறைவனின் அருளையும் பெற வேண்டும். அந்த வகையில் நமது நோய்களை தீர்க்கும் கடவுளாக தன்வந்தரி விளங்குகிறார். அவரை வழிபடுவதன் மூலம் நாம் நோயில் இருந்து எளிதில் தப்பிக்கலாம். தன்வந்தரி மந்திரம் கூறி தொடர்ந்து வழிபட நாட்பட்ட வியாதிகள் கூட விலகும் என்பது ஐதீகம்.

தன்வந்தரி மருத்துவக் கடவுள். பிரமன் நான்கு வேதங்களையும் படைத்து, அதன் சாரமாகிய ஆயுர்வேதத்தையும் படைத்தான். இந்த ஆயுர்வேதம் நன்றாகத் தழைத்தோங்கி, பலரையும் அடைய வேண்டும் என்பதற்காக, முதலில் சூரியக் கடவுளுக்கு உபதேசித்தார் பிரம்மன். சூரியனும் இதை நன்றாகக் கற்று உணர்ந்து, அதை எங்கும் பரவச் செய்யும் பணியை மேற்கொண்டார்.

சூரியக் கடவுளிடம் இருந்து ஆயுர்வேதத்தைக் கற்றுத் தேர்ந்த பதினாறு மாணவர்களில் மிகவும் முக்கியமானவர் தன்வந்திரி என்று பிரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது. தன்வந்திரி என்று சொல்லப்படுபவர் வானத்தில் வசித்து வருபவர். அதாவது, சூரியனே தன்வந்திரி என்றும் புராணங்களில் ஒரு குறிப்பு இருக்கிறது. தன்வ என்ற பதத்துக்கு வான்வெளி என்று பொருள். தன்வன் என்றால் வான்வெளியில் உலவுபவன் என்று பொருள் கொள்ளலாம். எனவே, இவரையேச் சூரியன் என்றும் சொல்வார்கள். சூக்த கிரந்தங்களில் தன்வந்திரி என்கிற திருநாமம் சூரியக் கடவுளையே குறிப்பிடுகிறது. தன்வந்திரிதான் ஆயுர்வேதத்தைப் படைத்தவர் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது. தன்வந்திரியை வைத்தியத்தின் அரசன், சிறந்த மருத்துவர் என்றும் குறிப்பிடுகிறது பத்ம புராணம். வாயு புராணம், விஷ்ணு புராணம் போன்றவையும் தன்வந்திரி அவதாரம் பற்றிச் சொல்கிறது. இந்த தன்வந்த்ரியை வணங்குவதன் மூலம் நமது நோய்கள் யாவும் தீரும் என்பது ஐதீகம். தீராத நோய்கள் கூட தன்வந்திரியை வணங்குவதன் மூலம் தீரும்.

நம் அனைவரையும் நோயில் இருந்து காக்கக் கூடிய தன்வந்தரி மந்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது நோய் தீர்க்கும் அருமையான மந்திரம். மருந்து மாத்திரை உட்கொள்வதோடு நம்பிக்கையுடன் இந்த மந்திரத்தை ஜெபம் செய்வதன் மூலம் உங்கள் வியாதிகள் அனைத்தும் தீரும். உங்கள் நோய் குணமாகி விட்டால் பின் மருந்து மாத்திரைகளின் தேவை இருக்காது.

தன்வந்தரி மந்திரம்

ஓம் நமோ பகவதே வாசுதேவாய 

தன்வந்த்ரயே அமிர்தகலச ஹஸ்தாய  

சர்வாமய வினஷனயா த்ரைலோக்ய நாதாய

ஸ்ரீ மகாவிஷ்ணுவே நமஹ:

தன்வந்திரி மந்திரத்திற்கான பொருள்: எல்லோருக்கும் வரம் தருபவரும் வாசுதேவராக இருப்பவரும் அமிர்த கலசத்தை கையில் ஏந்திய வரும் சகல நோய்களை தீர்த்து மூவுலகத்தை காண்பவரும் மகாவிஷ்ணுவாக அவதரித்திருப்பவரும் ஆகிய தன்வந்திரி கடவுளே உன்னை வணங்குகிறேன் எனக்கு வந்திருக்கும் நோய்களை கண்ணுக்குத் தெரியாமல் நீக்குவாயாக

இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் தினமும் காலையில் எழுந்தவுடன் சொல்லலாம் அல்லது உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக் கொண்டே இருங்கள. உங்கள் நோயிலிருந்து நீங்கள் விரைவில் விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.