சனிக்கிழமை சஷ்டி விரதம் | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

சனிக்கிழமை சஷ்டி விரதம்

Posted DateMay 2, 2025

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக முருகப்பெருமான் விளங்குகிறார். முருகரை வணங்கி வழிபட பல விரத நாட்கள் உள்ளன. அதில் முக்கியமாக கருதப்படுவது சஷ்டி விரதம் ஆகும். சஷ்டி என்பது ஆறாவது திதியாகும். இது வளர்பிறை சஷ்டி மற்றும் தேய்பிறை சஷ்டி என மாதம் இரண்டு முறை வரும். முருகருக்கு உரிய நாள் செவ்வாய்க்கிழமை ஆகும்.

சஷ்டி விரதம்:

சஷ்டி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதம் தொடங்க வேண்டும். சிலர் ஆறு நாட்கள் விரதம் இருப்பர். முருகப் பெருமானை வீட்டிலும் வழிபடலாம். கோவிலிலும் வழிபடலாம். முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், திருப்புகழ் பாடல்கள் போன்ற வழிபாடுகளைச் செய்யலாம். அன்றைய தினம் விரதம் இருக்க வேண்டும். பால், பழம், போன்றவற்றை உண்ணலாம். விரதத்தை முடித்த பின் பாரணை செய்து, விரதத்தை நிறைவேற்றலாம். சஷ்டி விரதம் அனுஷ்டிப்பது, முருகப்பெருமானின் அருளைப் பெற்று, நல்ல பலன்களைப் பெற ஒரு சிறந்த வழி.

முருகனுக்கும் சனிக்கும் உள்ள தொடர்பு:

முருகனுக்கும் சனி பகவானுக்கும் ஒரு நேரடியான தொடர்பு இல்லை. ஆயினும், சில சமயங்களில் சனிபகவான் சம்பந்தப்பட்ட பலன்களில் முருகனை வழிபடுவது நன்மை அளிக்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, சனி பெயர்ச்சி காலத்தில் சிலருக்கு ஏற்படக்கூடிய சங்கடங்களை போக்க முருகனை வழிபடலாம். சில கோயில்களில் முருகனும் சனியும் இணைந்து அருள்பாலிப்பதாகக் கூறப்படுகிறது. உதாரணமாக, ராமநாதபுரத்தில் உள்ள வழிவிடு முருகன் கோயிலில் முருகனும் விநாயகரும் இணைந்து அருள்பாலிக்கின்றனர், மேலும் கோயிலில் சனிபகவானின் தாயார் பெயரில் மரம் உள்ளது. சனி தோஷம் உள்ளவர்கள் முருகனை வழிபடலாம். திருவாவினன்குடி வந்து முருகனை வழிபட்டால் சனியால் ஏற்படும் தொல்லைகள் தீரும் என்று நிடத நாட்டு அரசன் நித்தியநாதனுக்கு முருகன் வரம் தந்துள்ளார் என்று கூறப்படுகிறது. சில கோயில்களில் சனி பகவானின் பாதிப்பு நீங்க, முருகனை வழிபடலாம் என்று கூறப்படுகிறது.

வழிபடும் முறை:

சஷ்டி விரதம் இருப்பவர்கள், காலை முதல் மாலை வரை விரதம் இருந்து, காலை, மாலை இருவேளையும் முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம். ஷட்கோண தீபம், சர்க்கரை பொங்கல், தயிர் சாதம் போன்ற நெய்வேத்தியம்,செய்து ஏழை மற்றும் எளியவர்களுக்கு அன்னதானம் செய்யலாம். கந்த சஷ்டி கவசம், பதிகங்கள் போன்றவற்றை பாராயணம் செய்யலாம். கோவிலுக்கு சென்று முருகன் சந்நிதியில் விளக்கு ஏற்றலாம். முருகருக்கு செய்யப்படும் அர்ச்சனை மற்றும் அபிஷேகம் ஆகியவற்றில் பங்கு கொள்ளலாம்.

சஷ்டி வழிபாடு மூலம் கிடைக்கும் நன்மைகள்:

பொதுவாக சஷ்டி அன்று முருகனை வழிபடலாம். சனிக்கிழமை அன்று வழ்படும் போது சனி பகவானின் அருளும் சேர்ந்து நமக்கு கிடைக்கும். சனிக்கிழமை அன்று முருகனை வழிபடுவதன் மூலம் திருமண தடைகள் நீங்கும். சகல நன்மைகளும் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்கள், சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபடலாம். இது குழந்தை பாக்கியம் கிடைக்க வழிவகுக்கும். முருகர் வழிபாடு நினைத்தது நடக்கவும், வேண்டியது கிடைக்க வழிவகுக்கும். நோய், கடன், எதிரி தொல்லை உள்ளவர்கள் சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபடலாம். இது சகல தொல்லைகளிலிருந்தும் விடுபட வழிவகுக்கும். அதிலும் குறிப்பாக சனிக்கிழமை அன்று வரும் சஷ்டி வழிபாடு மற்றும் விரதம் சனி தோஷத்தை நீக்கும் என்பது ஐதீகம்.