தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் புரட்டாசி மாதமும் தனிச் சிறப்பு வாய்ந்தது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதம். அதிலும் புரட்டாசி சனிக்கிழமை பெருமாளை வணங்க ஏற்ற நாள் ஆகும்.
புரட்டாசி முதல் சனிக்கிழமை செப்டம்பர் 21ம் தேதி வருகிறது. மகா சங்கடஹர சதுர்த்தி மட்டுமல்ல, இந்த நாளில் மகாபரணியும் இணைந்தே வருகிறது. புரட்டாசி 2வது சனிக்கிழமை செப்டம்பர் 28ம் தேதி வருகிறது. இது ஏகாதசியுடன் வரும் புரட்டாசி சனிக்கிழமை என்பதால் மிகவும் விசேஷமானதாகும். புரட்டாசி 3வது சனிக்கிழமை அக்டோபர் மாதம் 5 ம் தேதி வருகிறது. இது நவராத்திரி காலத்துடன் இணைந்து வருகிறது. புரட்டாசி 4வது மற்றும் கடைசி சனிக்கிழமை அக்டோபர் 12ம் தேதி வருகிறது. இது பெருமாளுக்குரிய திருவோணம் நட்சத்திரம் மற்றும் விஜயதசமி நாளுடன் இணைந்து வருகிறது.
சனிக்கிழமை என்பது பெருமாளுக்கு உகந்த நாள் என்றும் பெருமாளை வணங்கி வழிபடுவதற்கு உரிய நாள் என்றும் போற்றப்படுகிறது. அதனால்தான் மற்ற நாட்களை விட சனிக்கிழமைகளில், திருப்பதி முதலான பெருமாள் குடிகொண்டிருக்கும் க்ஷேத்திரங்களில், வழக்கத்தை விட மக்கள் குவிகிறார்கள். சனிக்கிழமைகளில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொள்வதும் துளசி தீர்த்தம் பருகுவதும் மிகவும் மகத்துவம் வாய்ந்தது. புரட்டாசி மாத முதற் சனி, இத்தினத்தில் சூரியபகவானின் இச்சா சக்தியாகிய உஷாதேவியிடம் சூரியனுக்கு புத்திரனாக இச்சையின் வடிவமான சனீஸ்வரன் தோன்றினான் என்பது புராணம். இதனால் புரட்டாசி சனிக்கிழமை பெருமாளின் வழிபாட்டிற்கு விசேஷமானது.புரட்டாசி சனிக்கிழமையில் தானே சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. நவககிரகங்களுள் மற்ற கிரகங்களுக்கு இல்லாத சிறப்பு சனீஸ்வரனுக்கு உண்டு. ஈஸ்வரன் என்ற பட்ட பெயர் சனீஸ்வரனுக்கு மட்டும் தான் சேர்கிறது. சனியைப் போல் கொடுப்பாருமில்லை கெடுப்பாரும் இல்லை என்று சொல்வார்கள். எனவே தான் புரட்டாசி சனிக்கிழமை தோறும் பிரார்த்தித்து வழிபாடுகள் செய்து விரதமிருக்கும் வழக்கம் நீண்டகாலமாக மக்களிடையே உண்டு
புரட்டாசி முதல் சனிக்கிழமையில் பெருமாளுக்கு தளிகை இட்டு வழிபட வேண்டும். சிலர் தளிகையுடன், மாவிளக்கும் சேர்த்து படைத்து வழிபடுவார்கள். பெருமாளுக்கு தளிகை இடும் போது, பூஜை அறையில் பெருமாளின் படத்திற்கு துளசி மற்றும் மலர்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். ஒரு டம்ளரில் துளசி தீர்த்தம் வைத்து, பழங்கள் ஆகியவற்றை வைக்க வேண்டும். பெருமாளின் படத்திற்கு முன்பு, சாமியை நோக்கி இருப்பது போது வாழை இலை போட்டு, 5 வகையான சாதங்கள் செய்து படைக்கலாம். சர்க்கரை பொங்கல், எலுமிச்சை சாதம் அல்லது நெல்லிக்காய் சாதம், புளிசாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம் ஆகிய சாதங்களை இலையில் அப்படியே வைத்தும் வழிபடலாம். அல்லது அந்த சாதங்களைக் கொண்டு பெருமாளின் உருவம் அமைத்தும் வழிபடலாம்.
வைணவ சம்ரதாயங்களைப் பின்பற்றுபவர்கள் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனை உள்ளத்தில் நினைத்து மாவிளக்கேற்றுதல் மரபு. எனவே அவர்கள் அன்று ஒரு தூய பித்தளை சொம்பை எடுத்துக் கொள்வார்கள். அதற்கு நாமம் போட்டு விடுவார்கள். பிறகு அக்கம் பக்கத்து வீடுகளில் மடிப்பிச்சை எடுத்து அரிசியை வாங்குவார்கள். அவ்வாறு வாங்கும் போது “கோவிந்தா, கோவிந்தா” என்று நாம கோஷம் எழுப்புவார்கள். அவ்வாறு வாங்கி வந்த அரிசியை ஊற வைத்து, உரலில் இடித்து நாட்டுச் சர்க்கரை கலந்து இரு உருண்டைகளாகச் செய்து கொள்வார்கள். அந்த இரு உருண்டைகளில் நடுவில் குழி போல் செய்து நிறைய நெய் ஊற்றி, பஞ்சில் திரி போட்டு விளக்கு ஏற்றுவார்கள்.இதனை மாவிளக்கு என்று கூறுவார்கள். இவ்வாறு ஏற்றும் போதும் கோவிந்த நாமம் முழங்குவார்கள்.
இந்த விரதத்தின் மகிமையை விளக்க ஒரு கதை உண்டு. பெருமாள் கோவில்களில் மிக சிறப்பானதாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோவில். திருப்பதி கோவிலின் அருகில் பீமன் என்ற பெயரில் குயவர் ஒருவர் வசித்து வந்தார். இவர் தீவிரமான பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர். ஆனால், தனது குடும்பத்தைக் காக்க வருமானம் ஈட்ட வேண்டும் என்று அந்த ஏழை தொழிலாளி ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார். சனிக்கிழமைகளில் கூட ஆலயம் செல்ல அவருக்கு கால அவகாசம் இருக்காது. அப்படியே போனாலும் பெருமாளுக்கு செய்ய வேண்டிய பூஜை விதி முறைகள் எதுவும் அவருக்கு தெரியாது. தப்பித்தவறி கோவிலுக்கு செல்ல நேர்ந்தாலும் “பெருமாளே, சர்வமும் நீயே ” என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார். ஒருமுறை அவரது மனதில் ஒரு எண்ணம் உதித்தது. பெருமாளைப் பார்க்க கோவிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார். அவர் தான் குயவன் ஆயிற்றே. தனது தொழிலை வைத்தே அவர் பெருமாள் சிலையைச் செய்ய நினைத்தார். செய்தும் முடித்தார். பெருமாளுக்கு சார்த்த பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடித்த மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார். அவ்வூர் அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார். ஒருமுறை இப்படி அணிவித்து விட்டு மறுவாரம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது. பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் சென்றார். அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார். அப்பொருளைக் கண்டும் மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார். பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில் தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.
இந்த நன்னாளில், பெருமாளுக்கு புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, பிரார்த்திப்பதும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து பூஜிப்பதும் இழந்த செல்வங்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்! சனி பகவானின் கெடு தாக்கத்தை விஷ்ணு பகவான் குறைப்பார் என்பது ஐதீகம். எனவே அன்று பெருமாளை வணங்குவதன் மூலம் சனி பகவான் சாந்தி அடைந்து அவரின் சாதகமான பலனை நமக்கு அருளுவார்
September 19, 2025
September 17, 2025
September 15, 2025