முருகனுக்கு இருக்கும் பல ஆலயங்களில் சிறப்பு வாய்ந்த ஆலயமாக இந்த ஓதி மலை முருகன் கோவில் அமைந்துள்ளது. சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் இந்த முருகன் கோவில் அமைந்துள்ளது. வறட்சியான பகுதி, மரங்கள் அதிகம் கிடையாது. இங்கு இருக்கும் பெரும்பாலான மரங்களும் முள் மரங்களே. இந்தக் கோவில் எந்த விதமான ஆடம்பரமும் இல்லமால் எளிமையாக இருக்கும்.கோவிலுக்கு வரும் ஐயர் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வருவார் ஒரு சில நாட்கள் கோவிலிலேயே தங்கி விடுவார்.இத்தனை உயர மலையிலும் ஒரு கிணறு உள்ளது. ஆலயத்தின் உள்ளே சென்றால் ஒரு நிம்மதியான சூழல் காணப்படுகிறது. இக்கோவிலுக்கு நடந்து மட்டுமே போக முடியும், வாகன பாதை கிடையாது. மொத்தம் ஆயிரத்து எண்ணூறு படிகள். ஒவ்வொரு 300 படிக்கட்டிற்கும் ஒரு இளைப்பாறும் மண்டபம் இருக்கும் (850 படிக்கட்டு வரை)சமதரையே கிடையாது முழுவதும் படிக்கட்டே தான். 850 வது படிக்கட்டு அருகே ஒரு சிறு கோவில். இதன் பிறகு இளைப்பாறும் மண்டபம் கிடையாது.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். பெரும்பாலான முருகன் ஆலயங்கள் குன்றின் மேல் அமைந்து இருக்கும். என்றலும் இந்தக் கோவில் மிக உயரமான இடத்தில் அமைந்து உள்ளது. இது கிட்டதட்ட மூன்றாயிரம் அடி உயரத்தில் உள்ளது. ஆயிரத்து எண்ணூறு படிகள் ஏறி இந்த கோவிலுக்குச் செல்ல வேண்டும். இந்தப் படிகள் மிகவும் செங்குத்தாக இருக்கும். கோவிலில் படி ஏறுவதற்கு முன் கோவில் அடிவாரத்தில் சுயம்பு விநாயகர் சந்நிதி உள்ளது. முதலில் இவரைத் தான் வழிபட வேண்டும். முருகனிடம் பிரணவ மந்திரம் பெற தனியாக ஈசன் வந்த காரணத்தால் அடிவாரத்தில் ஈசனுக்கு மட்டும் சந்நிதி உள்ளது. அம்பாளுக்கு கிடையாது. ஆனால் மலையின் மேல் காசி விஸ்வநாதர் மற்றும் காசி விசாலாட்சி தனித் தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
சுவாமி மலையில் பிரணவ மந்திரத்தை சிவபெருமானுக்கு உபதேசித்த முருகன் இந்த தலத்தில் வேத ஆகமங்களின் விதிகளை உபதேசம் செய்ததாக ஐதீகம் எனவே இந்த மழைக்கு ஓதி மலை என்று பெயர் வந்தது என்பதாக புராண வரலாறு கூறுகிறது.
பழனி மலைக்கு செல்லும் முன்பு, அங்கு செல்ல வழி தெரியாத காரணத்தால் போகர் இத்தலத்திற்கு வந்து இத்தல இறைவனை வழிபாட்டு தனக்கு வழி காட்டுமாறு வேண்டினார். அப்போது முருகன் தனது ஒரு தலையுடன் வெளிப்பட்டு போகருக்கு பழனி மலை செல்லும் வழியைக் காட்டினார். அவ்வாறு வழி காட்டச் சென்ற முருகப் பெருமான் ஓதி மலையில் இருந்து சற்று தூரத்தில் உள்ள குமாரபாளையம் நாகநாதேஸ்வர் கோவிலில் அமர்ந்து விட்டார். எனவே ஆறு தலையுள் ஒரு தலை இங்கு இருக்க ஓதி மலையில் முருகன் ஐந்து தலைகளுடன் காட்சி தருவதாக மற்றொரு புராண வரலாறு வாயிலாக அறிய முடிகிறது.
ஒரு சமயத்தில் முருகப் பெருமான் படைப்புத் தொழில் செய்து வந்த பிரம்ம தேவரை அழைத்து பிரணவ மந்திரத்தின் பொருளைக் கேட்டார்.பிரம்மாவிற்கு அதன் பொருள் தெரியாத காரணத்தால் அவரை சிறையில் அடைத்தார். மற்றும் படைப்புத் தொழிலை தாம் மேற்கொண்டார். அவ்வாறு முருகன் படைப்புத் தொழிலை மேற்கொண்ட இடம் இந்த தலம் என்று புராண கதைகள் வாயிலாக அறிய முடிகிறது. இங்கு நான்முகனின் நான்கு முகம் மற்றும் முருகனின் ஒரு முகம் சேர்த்து ஐந்து முகத்துடன் காட்சி அளிக்கிறார். இத்தகைய காட்சி வேறு எந்த முருகன் ஆலயத்திலும் இல்லை.
பிரம்மதேவரை சிறையில் அடைத்த இரும்பறை இந்த கோவிலுக்கு சற்று தூரத்தில் உள்ளது. அதுவே இன்று மருவி இரும்பொறை ஆகும்.
கோயம்புத்தூரில் இருந்து 48 கிலோமீட்டர் தூரத்தில் புளியம்பட்டி உள்ளது. அங்கிருந்து 10 கிலோ மீட்டர் சென்றால் இரும்பறையை அடையலாம். தரிசன நேரம்: திங்கள், வெள்ளி, சஷ்டி, கார்த்திகை, அமாவாசை, நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை முருகப்பெருமானை தரிசனம் செய்யலாம். மார்கழி மாதத்திலும் இந்த நேரத்தில் கோவில் திறந்திருக்கும். பிற நாட்களில் கோவிலுக்கு செல்ல விரும்புபவர்கள் முன் கூட்டியே தொலைபேசியில் முன்பதிவு வாங்கிவிட்டு செல்வது நல்லது.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025