பிரதி மாதம் சஷ்டி வரும். தேய்பிறை சஷ்டி மற்றும் வளர்பிறை சஷ்டி என மாதம் இரண்டு சஷ்டி வரும். பௌர்ணமி முடிந்து வரும் ஆறாவது திதி தேய்பிறை சஷ்டி ஆகும். அமாவாசை முடிந்து வரும் ஆறாவது திதி வளர்பிறை சஷ்டி ஆகும். வளர்பிறை சஷ்டி விரதம் என்பது முருகப் பெருமானை வழிபடும் ஒரு சிறப்பு வழிபாட்டு முறையாகும்.
நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் அனைத்தும் நமது கர்ம வினை காரணமாக வருவதே ஆகும். இன்பங்களை எளிதாக ஏற்றுக் கொள்ளும் நமது மனம் துன்பம் வரும் நேரத்தில் துவண்டு விடுகிறது. அப்பொழுது நாம் இறைவனை சரணடைகிறோம். என்றாலும் எல்லா நேரத்திலும் இறை அருளைப் பெற வேண்டி நின்றால் சமநிலையை பராமரிக்கலாம். வினை தீர்க்கும் கடவுளாக இருக்கும் கந்தக் கடவுள் முருகனின் அருள் இருந்தால் கர்ம வினைகள் நம்மை அண்டாது.
முருகப் பெருமானை வீட்டில் வேல் வைத்து, அல்லது முருகப் பெருமான் படம் அல்லது உருவச்சிலை வைத்து வழிபடலாம். செவ்வரளி மலர் வைத்து அலங்காரம் செய்து, பால், நாட்டுச் சர்க்கரை, பழங்கள் போன்றவற்றை நைவேத்தியமாக வைக்கலாம். வெற்றிலை தீபம் ஏற்றி, ஷட்கோண கோலமிட்டு வழிபடலாம். ஆலயம் சென்று முருகருக்கான வழிபாட்டில் கலந்து கொள்ளலாம். அர்ச்சனை மற்றும் அபிஷேகம் போன்றவற்றில் கலந்து கொள்ளலாம்.
திருமண தடைகள் நீங்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள் வேளையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். நோய் மற்றும் எதரிகளின் தொல்லை நீங்கும். மொத்தத்தில் முருகப் பெருமானின் பரிபூரண அருள் நமக்குக் கிடைக்கும்.
வளர்பிறை சஷ்டி அன்று செய்ய வேண்டிய எளிய பரிகாரம்
அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்து விட்டு, பூஜை அறையில் விநாயகரையும், குலதெய்வத்தையும் வணங்கி விட்டு, குலதெய்வத்திற்கு காணிக்கை முடிந்து வைத்து விட்டு, இந்த பரிகாரத்தை செய்ய துவங்குவது சிறப்பு. காணிக்கை வைத்த பிறகு முருகப் பெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு அகல் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். பிறகு முருகன் படத்திற்கு நேராக நின்றோ அல்லது அமர்ந்தோ, நிறுத்தி, நிதானமாக ஆறு முறை கீழே இருக்கும் மந்திரத்தை சொல்ல வேண்டும். இரண்டு தட்டு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு தட்டில் விபூதி வைத்துக் கொள்ளுங்கள். கீழே இருக்கும் மந்திரத்தை நிதானமாக ஜெபிக்க வேண்டும். அவ்வாறு ஜெபிக்கும் போது தட்டில் இருக்கும் விபூதி சிறிது எடுத்து மற்றொரு தட்டில் போட வேண்டும். பிறகு அந்த விபூதியை ஒரு டப்பாவில் போட்டு வைததுக் கொள்ளுங்கள். தினமும் குளித்து முடித்து இந்த விபூதியை நெற்றியில் பூசி வாருங்கள்.
சரவணபவ
ரவணபவச
வணபவசர
ணபவசரவ
பவசரவண
வசரவணப
இந்த எளிய பரிகாரத்தின் மூலம் நீங்கள் பல நன்மைகளைப் பெறலாம். முருகனின் பரிபூரண அருள் இருந்தால் வாழ்க்கையில் வெற்றிப் பாதையில் நாம் நடை போடலாம். நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை நாளைய தினம் மேற்கொள்ளுங்கள். நீங்கள் வாழ்வில் வளமும் நலமும் பெற எங்களின் வாழ்த்துக்கள்.!!
January 27, 2026
January 19, 2026
January 13, 2026
January 12, 2026