எத்துனை செல்வம் இருந்தாலும் அவற்றை அனுபவிக்க நாம் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். அதனை கருத்தில் கொண்டு தான் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற சொலவடை கூறப்பட்டுள்ளது. ஆனால் நவீன யுகத்தைப் போலவே நோய்களும் நவீனமாக காணப்படுகிறது. அதற்கு காரணம் நமது வாழ்க்கை முறை, நமது சுற்றுச் சூழல், நமது உணவு முறை போன்றவை ஆகும்.
மனிதர்கள் தங்கள் வாழ்வை நோயில்லாமல் தான் வாழ விரும்புகிறார்கள். அவ்வாறு இருந்தால் தான் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியும். மேற்கொள்ளும் காரியங்களை தடையின்றி முடிக்க இயலும். வாழ்வில் எண்ணியவற்றை அடைய முடியும். ஆனாலும் அது எல்லோருக்கும் பொருந்துவது இல்லை. பொதுவாக நோயானது நமக்கு பல காரணங்களால் ஏற்படுகிறது. பரம்பரை அல்லது மரபணு காரணமாக நோய் ஏற்படலாம். நாம் உண்ணும் உணவு காரணமாக நோய் ஏற்படலாம். நமது மன நிலை காரணமாக உடலில் நோய் ஏற்படலாம். எது எப்படி இருந்தாலும் நோய் என்பது நமக்கு தீராத துன்பத்தை விளைவிப்பதாக இருக்கும். எனவே சிறந்த ஆரோக்கியமே சீரும் செல்வமும் ஆகும். எனவே நாம் நமது ஆரோக்கியத்தை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். நமது மனம், உடல், ஆன்மாவை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நமது சுற்றுச் சூழலை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஆரோக்கியத்தை பேணிக் காத்தலே நமது தலையாய கடமை எனலாம். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். நமது உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் நமது கடமைகளை சரிவர செய்ய இயலும்.
ஆனால் இன்று நோய் என்பது இன்னார்க்கு தான் என்று கூற முடிவதில்லை. இன்ன வயதினர்க்கு தான் என்று வரையறுத்துக் கூற இயலாது. எந்த வயதினர் என்றாலும் நோய்க்கு ஆளாவது என்பது இன்றைய காலக் கட்டத்தில் சர்வ சாதாரணம் ஆகி விட்டது. முன்பெல்லாம் மூப்பு காரணமாக சில நோய்கள் தாக்கும். இன்று சிறு வயது குழந்தைகளுக்கு கூட பெரியவர்களுக்கு வரும் நோய் தாக்குகிறது. இளைஞர் இளைஞிகள் கூட நோய்க்கு விதிவிலக்கு அல்ல. ஒரு சிலருக்கு இனம் புரியாத நோய்கள் கூட ஏற்படுகின்றன. என்ன வியாதி என்று கண்டு பிடிக்க முடியாமலேயே சில நோய்கள் தாக்குகின்றன. எத்தனையோ மருந்து மாத்திரைகள் எடுத்தும் சில நோய்கள் தொடர்ந்து உபாதைகளை அளித்துக் கொண்டு தான் இருக்கிறது.
நோய் வந்தால் தீராத நாட்கள் :
நோய் வருவதற்கு அறிவியல் ரீதியாக எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆனால் நாள், கிழமை, திதி ஆகியவற்றிற்கும் நோய் குணமாவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்முடைய ஜோதிட சாஸ்திர முறைகள் சொல்கின்றன. நோய்க்கு மருந்து சாப்பிட துவங்குவது, சிகிச்சை பெறுதற்கும் கூட சில குறிப்பிட்ட நாட்கள் உகந்தவை என சொல்லப்படுவதும் இந்த காரணத்தினால் தான்.அதாவது கிழமைகளில் ஞாயிறு, செவ்வாய், சனி ஆகியவற்றிலும், திதிகளில் நவமி, துவாதசி, சஷ்டி ஆகியவற்றிலும், நட்சத்திரங்களில் சதயம், சுவாதி, பூரம், பரணி, ஆயில்யம், திருவாதிரை ஆகியவற்றிலும் காய்ச்சல், சளி துவங்கி வேறு எந்த நோய் வந்தாலும் அவ்வளவு சுலபத்தில் உடலை விட்டு நீங்காது என சொல்லப்படுகிறது. இதனால் உடல்ரீதியான கஷ்டம், மனக்கஷ்டம், பண விரயம், மருத்துவ செலவுகள் என பல கஷ்டங்கள் ஏற்படும் என்றும் சொல்லப்படுகின்றன.
நோய் தீர்க்கும் கடவுள்
நோய் தீர்க்க மருத்துவக் கடவுளாக இருப்பவர் தன்வந்தரி. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது இவர் அமிர்த கலசத்துடன் தோன்றினார் என்று கூறப்படுகிறது. தன்வந்திரிதான் ஆயுர்வேதத்தைப் படைத்தவர் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது. தன்வந்திரியை வைத்தியர்களின் அரசன், சிறந்த மருத்துவர் என்றும் குறிப்பிடுகிறது பத்ம புராணம். வாயு புராணம், விஷ்ணு புராணம் போன்றவையும் தன்வந்திரி அவதாரம் பற்றிச் சொல்கிறது. இவரை பக்தியுடன் தினமும் வணங்கினால் நோயே நம்மை அணுகாது எனலாம்.
நோய் வராமல் பாதுகாக்கவும், தீராத நோயில் இருந்து விடுபடவும் கீழ்கண்ட மந்திரத்தை ஜெபியுங்கள்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய
சர்வ ஆமய வினாசனாய த்ரை லோக்யநாதாய
ஸ்ரீ மகா விஷ்ணவே நமஹ
இந்த மந்திரத்தை தினமும் 21 முறை சொல்வதன் மூலம் உங்கள் தீராத நோய்கள் தீரும். நோய்கள் உங்களை அண்டாது. எல்லாவிதமான எதிர்மறை ஆற்றல்களும் விலகும்.
மேலும் நோய் தீர்க்கும் சில மந்திரங்கள்
மந்திரங்களின் மகிமைகள் :
சக்தி வாய்ந்த மந்திரங்களை தொடர்ந்து சொல்லி வந்தால் அந்த மந்திரங்களுக்கு அதிக சக்தி ஏற்பட்டு, அதன் காரணமாக விரைவில் உடலில் ஏற்பட்ட நோய்கள் குணமாகும். “சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை; சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை” என்பார்கள். நோய்கள் விரைவில் குணமாக வேண்டும் என்பவர்கள் முருகனுக்குரிய திருப்புகழ் பதிகம், மந்திரம் ஆகியவற்றை தொடர்ந்து சொல்லி வரலாம். அதே போல் வராகி அம்மனுக்குரிய மந்திரத்தையும் தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த மந்திரங்களை நோயால் பாதிக்கப்பட்டவர்களோ அல்லது அவர்களுக்கு பதில் அவர்கள் குடும்பத்தினரோ, உறவினரோ அவர்கள் அமர்ந்து இந்த மந்திரங்களை தொடர்ந்து சொல்லி வரலாம்.
நோய் தீர்க்கும் மந்திரங்கள் :
திருப்புகழ் பதிகம் :
இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி…விடமே
நீரிழிவுவி டாத தலைவலி சோகை
யெழுகள மாலை…யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை
பெருவலி வேறு…முளநோய்கள்
வருமொரு கோடி யசுரர்ப தாதி
மடியஅ நேக…இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை…விடுவோனே
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
தருதிரு மாதின்…மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு
தணிமலை மேவு…பெருமாளே.
முருகன் மந்திரம் :
ஓம் பாலசுப்பிரமணிய
மஹா தேவி புத்ரா
சுவாமி வா வர சுவாஹா
வாராஹி மந்திரம் :
ஓம் பட் பட் ம்ருத்ய ரூபே
பட் பட் கால ரூபே
பட் பட் அஸ்த்ர வாராஹி
ஹூம்பட் ஸ்வாஹா
October 27, 2025
September 19, 2025
September 17, 2025