நமது அன்றாட வாழ்வில் பல எண்ணங்கள் நம் மனதில் ஓடிக் கொண்டிருக்கும். பல காரியங்களை நாம் முடிக்க வேண்டும் என்று செயல் படுவோம். ஆனால் நமது எண்ணங்கள் அனைத்தும் ஈடேறுமா என்பது கேள்விக்குறி தான். என்ன தான் நமது முயற்சி என்று இருந்தாலும் கடவுள் துணையும் நமக்கு இருக்க வேண்டும். அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்பது ஆன்மீக அன்பர்களின் அசைக்க முடியாத கருத்து ஆகும். நீங்கள் நீண்ட நாட்களாக ஒரு காரியம் நடக்க வேண்டும் என்று பிரயத்தனப் படுகிறீர்களா? ஆனால் அந்தக் காரியம் தள்ளிக் கொண்டே போகிறதா? உதாரணமாக நடுத்தரக் குடும்பத்தில் இருக்கும் பலரின் பெரும்பாலான ஆசை கடன் இல்லமால் வாழ வேண்டும். சொந்தமாக வீடு அமைய வேண்டும் என்பதாகத் தான் இருக்கும். உங்கள் எண்ணங்களை வேண்டுதலாக்கி நிறைவேற்றிக் கொள்ள இந்த மாதம், அதாவது ஆடி மாதம் முக்கியமாக இந்த மாத செவ்வாய்க்கிழமை உகந்த நாளாக இருக்கும்.
ஆடி மாதம் மங்களகரமான மாதம். அதில் வரும் செவ்வாய்க்கிழமை மங்களம் தரும் நாள் ஆகும். மேலும் ஆடி மாதம் அம்மனுக்கு உரிய மாதம் ஆகும். மேலும் ஆடி மாத செவ்வாய் மற்றும் வெள்ளி அம்மனுக்கு உரிய நாட்கள் ஆகும். இன்று ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமை ஆகும். இன்று நீங்கள் மேற்கொள்ளும் வழிபாட்டின் மூலம் நீங்கள் எண்ணிய காரியம் ஈடேறும். இந்த நாளில் ஆடி மாதத்திற்குரிய அம்மனையும் செவ்வாய்க்கிழமைக்குரிய முருகனையும் ஒருசேர நாம் வழிபாடு செய்வதன் மூலம் நாம் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்திடும். அந்த வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
இந்த வழிபாட்டை ஆடி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் செய்வது என்பது மிகவும் சிறப்பு. குறைந்தபட்சம் மூன்று செவ்வாய்க்கிழமை செய்து விட்டோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும்.
பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அம்மன் திருவுருவப் படம் மற்றும் முருகன் திருவுருவப் படம் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் இட்டு பூக்கள் சாற்றி விளக்கு ஏற்றங்கள். இத்துடன் மேலும் ஒரு அகல் விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். மேலே சொன்ன வழக்கமான பூஜைகளை முடித்த பிறகு அந்த நெய் விளக்கின் முன் தரையில் விரிப்பின் மேல் அமர்ந்து கண் மூடி பிரபஞ்சத்திற்கும் படைத்தலுக்கும் நன்றி கூறி உங்கள் தேவை என்னவோ அதனை ஆழ்மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். பிறகு கண்களைத் திறந்து சுடர் விட்டுக் கொண்டு இருக்கும் தீபத்தின் ஒளியை உற்று நோக்கி ஆழ் மனதின் பதிவுகளை கண்கள் வழியாக தீப ஒளிக்குள் செலுத்துங்கள். சுமார் ஐந்து நிமிடங்கள் உங்கள் பார்வை தீபத்தோடு கலந்து விட செய்யுங்கள். இவ்வாறு ஒரு செயல் நிறைவேற மூன்று செவ்வாய்க்கிழமை செய்யுங்கள். ஓரு நேரத்தில் ஒரு விஷயத்தை மட்டும் நினைத்துக் கொள்ளுங்கள்.
நமது வேண்டுதலை தீபச் சுடர் இந்தப் பிரபஞ்சத்திடம் கொண்டு சேர்க்கும். எனவே உங்கள் எண்ணங்களும் இந்த தீபச் சுடர் மூலம் பிரபஞ்சத்தால் ஏற்றுக் கொள்ளப்படும். உங்கள் நியாயமான எண்ணங்களை இந்தப் பிரபஞ்சம் நிறைவேற்றித் தரும். நம்பிக்கையுடன் இதனை முயன்று பாருங்கள். நல்லதே நடக்கும்.
September 12, 2025
September 12, 2025
September 11, 2025