AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now
ஆண்டாள் ஸ்லோகம் | Andal slogam in Tamil |
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ஆண்டாள் ஸ்லோகம்

வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை நமக்கு எடுத்துரைக்கிறது. மேலும், ஆண்டாள்  பூமிப் பிராட்டியின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.

ஆண்டாள் வரலாறு

மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்துவந்த விஷ்ணுசித்தர் ஒரு நாள் தோட்டத்தில் பூ பறிக்க சென்றபோது, குழந்தை ஒன்றை துளசிச் செடியின் கீழ் கண்டெடுத்தார். கோதை என்று பெயர் சூட்டி அவளை வளர்த்து வந்தார்.கண்ணன் மீது மிகுந்த பக்தியும் காதலும் கொண்ட கோதை கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார்.இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன.

ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை சூடிய மாலைகளே தனக்குப் உகந்தவை எனவும், அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனாலேயே “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்றும், இறைவனையே ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலந்தாள்

ஆண்டாள் ஸ்லோகத்தை தினமும் அல்லது மார்கழி மாதம் முழுவதும் பாராயணம் செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் ஆகும், திருமணமான தம்பதியர்களுக்கு இடையே ஏற்படும் மனக் கசப்புகளும் குடும்ப சூழ்நிலையின் காரணமாக வரும் கஷ்டங்களும் நீங்கி நன்மை தரும் இல்லற வாழ்வை மேம்படுத்தும் ஆண்டாள் ஸ்லோகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 ஆண்டாள் ஸ்லோகம்

அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்

அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:

தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா

தந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:

கோதா ஸ்துதி

பொருள்:

ஆண்டாள் தேவியே, உனக்கு வந்தனம். சாத்திரங்கள் அனுமதிக்காத  அபசாரங்கள் பலவற்றை நெடுங்காலமாக நாங்கள் செய்து வருகிறோம். ஆனாலும் எங்களுக்கெல்லாம் தங்கள் கணவரான அரங்கத்துப் பெருமாள்  திருவருள் புரிகிறார். தவறு செய்யும் எங்களுக்கும் பெருமாள் அருளும் காரணம் என்னவாக இருக்கும்? அது, நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிருப்பதால்தான். அது மட்டுமல்லாமல் வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழில் பிரபந்தமும் பாடித் துதித்திருக்கிறாய். அதனாலேயே உன் குழந்தைகளாகிய எங்களை பெருமாள் தண்டிக்காமல் விட்டிருக்கிறார். அதற்காக ஆண்டாள் தேவியே உனக்கு மீண்டும் வந்தனம்.