தமிழ் மாதம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் தமிழ் மாதத்தின் நான்காவது மாதமான ஆடி மாதமும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தை பக்தி மாதம் என்றும் கூறலாம். இறைவனை வழிபட அர்ப்பணிக்கப்பட்ட மாதம் என்றும் கூறலாம். மேலும் ஆடி மாதம் வந்து விட்டாலே பரவலாக பண்டிகைகள் வர ஆரம்பித்துவிடும். தெய்வீக ஆசிகளைப் பெறுவதற்கு இது புனிதமான நேரம். ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரத்தில்தான் அன்னை பூமா தேவி ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் அவதாரம் எடுத்து, எளிய பக்தி மார்க்கம் மூலம் கடவுளை எவ்வாறு அடைவது என்பதை மனிதகுலத்திற்குக் காட்டினார். மீனாட்சி அம்மன் ருதுவான நாள் என்று இந்த நாளுக்கு இன்னும் பல சிறப்புகள் உண்டு. இன்றும் ஆடிப்பூர நாளில் ருது பூஜை நடைபெருகிறது. ஆழ்வார்கள் அவதரித்த நாள். ஒரு வலையல்காரரின் வளையலை அம்மன் பாம்பாக வந்து புற்றில் வைத்தது மற்றும் அம்மனே பிரசவம் பார்த்தது என பல நிகழ்சிகள் இந்த நாளில் நடந்துள்ளது. அம்மனுக்கு அணிவிக்கும் வளையலை திருமணம் ஆகாதவர்கள் அணிந்தால் திருமணம் நடக்கும். கர்ப்பிணிகள் அணிந்தால் சுகப் பிரசவம் நடக்கும்.இந்த புனிதமான நாளில், பெண்கள் அம்பாளுக்கு வளையல்களை வழங்கி, அவளைக் கொண்டாடுகிறார்கள்.
மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) வசித்து வந்தார். அந்தணரான அவர் திருவில்லிபுத்தூர் கோவிலுக்கு மலர்கள் கொய்து மாலைகள் தொடுத்து கொடுப்பதையே தமது கடமையாகக் கொண்டவர்.ஒரு நாள் தோட்டத்தில் பூ பறிக்க சென்றபோது, குழந்தை ஒன்றை (ஆண்டாள்) துளசிச் செடியின் கீழ் கண்டெடுத்தார். ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வார் அக்குழந்தைக்கு கோதை என்னும் திருநாமத்தை வைத்தார். கோதை இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார்.சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார்.இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை சூடிய மாலைகளே தனக்குப் உகந்தவை எனவும், அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனாலேயே “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்றும், இறைவனையே ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார். கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உள்ள இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துவருமாறு பணித்தார். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள். இதுவே ஆண்டாள் வரலாறு ஆகும். மேலும் ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார்.இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமைக்கும், தத்துவம்,பக்தி ஆகியவற்றிக்காக மிகுந்து போற்றப்படுகின்றது.
மற்றொரு புராணத்தின் படி, ஆடி பூரம் தினம் பிரபஞ்சத்திற்கு தாயாக விளங்கும் பார்வதி தேவிக்கு ‘வளைகாப்பு’ (வளையல் விழா) விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்குப் பின்னால் ஒரு கதை உள்ளது. சிவன் மற்றும் பார்வதி தேவிக்கு ஒரு விழா நடத்தப்பட்டது. திருவிழா முடிந்ததும், கூட்டம் மெதுவாகக் கலையத் தொடங்கியது. கூட்டத்தில், ஒரு கர்ப்பிணிப் பெண் வலி தாளாமல் சிறிது நேரம் ஒய்வு எடுத்துக் கொள்ள விரும்பினால். அவ்வாறு ஓய்வெடுக்கும்போது, திடீரென பிரசவ வலியால் அவதிப்பட்டார். சுற்றி யாரும் இல்லை, சிறிது நேரம் உதவிக்காக அலறிய பிறகு, அவள் மயக்கமடையும் போது, பார்வதி தேவி அவளைக் காப்பாற்ற வந்தார். அவள் ஒரு மருத்துவச்சி வேடத்தில் வந்து அந்தப் பெண்ணுக்கு குழந்தையைப் பெற உதவினாள். ஆனால் அந்தப் பெண் தெய்வத்தை அடையாளம் கண்டுகொண்டு, அந்த நாளை பார்வதி தேவிக்காக ஒவ்வொரு ஆண்டும் வளையல் தினமாக கொண்டாட சபதம் எடுத்தாள்.
ஆடி பூரத்தன்று, பல வைணவ கோயில்கள் ஹோமங்கள் மற்றும் பூஜைகளை நடத்துகின்றன. ஆண்டாளின் பிறப்பிடமான ஸ்ரீவல்லிபுத்தூரில் ஆடி பூரம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழா ஸ்ரீரங்கம் கோயிலிலும் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 10வது நாளில், ஆண்டாளுக்கும் ரங்கநாதருக்கும் (விஷ்ணு) தெய்வீக திருமணம் கொண்டாடப்படுகிறது. இன்னும் திருமணம் ஆகாத அல்லது சரியான வரன் கிடைக்காத பெண்கள், விரைவில் திருமணம் நடை பெறவும் சரியான துணையைப் பெறவும் 10வது நாளில் ஆண்டாளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். .
ஆண்டாள் ரங்கநாதரைப் போற்றிப் பல பாசுரங்களை (பக்திப் பாடல்கள்) இயற்றியுள்ளார். இவரது பாசுரங்கள் திருப்பாவை (30 பாசுரங்கள்) மற்றும் நாச்சியார் திருமொழி (143 பாசுரங்கள்). திருமஞ்சனம் முடிந்ததும் பக்தர்கள் திருப்பாவை மற்றும் பிற பாசுரங்களை பாடுகின்றனர்.
இந்த நாளில் அனைத்து சக்தி கோயில்களிலும், தேவி அழகாக அலங்கரிக்கப்படுகிறாள். மஞ்சள்காப்பு, குங்குமக் காப்பு, சந்தனக் காப்பு என அம்மனை அலங்கரித்து கண்ணாடி வளையல்களைச் சாற்றி பல்வேறு வடிவங்களில் தேவிக்கு படைக்கப்படுகின்றன. பின்னர், வளையல்கள் அனைத்து பக்தர்களுக்கும் விநியோகிக்கப்படுகின்றன. இந்த வளையல்களை அணிவதன் மூலம் குழந்தைகள் அற்ற தம்பதியர் குழந்தைப் பேறு பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. மேலும், கர்ப்பிணிப் பெண்கள் இந்த வளையல்களை அணியும்போது, அது அவர்களின் குழந்தையை தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆடி பூரம் கொண்டாடுவதன் பலன்கள்
இந்த புனித நாளில் ஆண்டாள் மற்றும் சக்தி தேவியை கொண்டாடுவது பின்வரும் பலன்களை அளிக்கும்:
• மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கை
• குழந்தைப் பேறுக்கான ஆசிகள் மற்றும் தீய சக்திகளிடமிருந்து கருவைப் பாதுகாத்தல்
• நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கப் பெறுதல்
September 12, 2025
September 12, 2025
September 11, 2025