Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு – முழு பலன் பெறும் வழிகள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரின் முழுமையான பலனைப் பெற இப்படி கொண்டாடுங்கள்

Posted DateAugust 13, 2025

கிருஷ்ண ஜெயந்தி (அல்லது ஜன்மாஷ்டமி) என்பது மகா விஷ்ணுவின்  எட்டாவது அவதாரமான ஸ்ரீ கிருஷ்ண பகவான் பிறந்த தினமாகக் கொண்டாடப்படும் புனிதமான பண்டிகை.  இது இந்து சமயத்தில் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். பாத்ரபத மாதம் எனப்படும்  ஆவணி மாதம் பௌர்ணமி முடிந்த பின் வரும் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி (8ஆம் திதி) அன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ரோஹிணி நட்சத்திரம் இருந்தால் அது இன்னும் சிறப்பானதாக கருதப்படும்.  பொதுவாக நாம் எதனை செய்தாலும்,  அந்த செயலை கண்ணனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று கீதை சொல்கிறது. எனவே கண்ணனுக்கு அர்ப்பணிக்கும் ஒவ்வொரு காரியமும் அன்புடன், தூய்மையான மனதுடன் செய்ய வேண்டும். மனதில் பொறாமை, கோபம், பொய் இல்லாமல் செய்ய வேண்டும். கிருஷ்ணர்  நமது அறியாமை என்னும் இருளை நீக்கும் ஒளியாகத் திகழ்பவர்.கிருஷ்ண ஜெயந்தி அன்று நாம் முழு மனதுடன் கிருஷ்ண பகவானுக்கு அந்த நாளை அர்ப்பணம் செய்து கொண்டாடினால் நம் மனதில் அன்பு, நம்பிக்கை, அமைதி, தர்ம நெறி ஆகியவை என்றென்றும்  நிலைபெறும்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று கண்ணனின் அருள் பெறுவதற்கான சில முக்கிய வழிமுறைகள் மற்றும் சடங்குகள் பற்றி இங்கே காணலாம்.

பூஜைக்கான ஏற்பாடுகள்.

பூஜை செய்வதற்கு முன் நம் உடல் மற்றும் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். முதல் நாளே  வீட்டை பெருக்கி துடைத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அன்று காலையில் எழுந்து சுத்தமான நீரில்  மஞ்சள், குங்குமம், துளசி இலை சேர்த்து குளிக்க வேண்டும். பூஜை அறையை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். மாங்கல்யக் கோலம் போடவும். வீட்டின் வாசலில் இருந்து பூஜை அறை வரையிலும் கிருஷ்ணரின் பாதம் வரைந்து கொள்ளுங்கள். பாதம் வீட்டிற்கு உள்ளே வருமாறு அமைய வேண்டும்.பூஜை அறையில் ஒரு அலங்கார மேடை அமைத்துக் கொள்ளுங்கள். அதன் மீது கிருஷ்ணர் சிலை அல்லது விக்கரகத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

பூஜை செய்யும் முறை

வீட்டில் கண்ணன் சிலையை அழகாக அலங்கரிக்கவும். சந்தனம், குங்குமம், வாசனைப் பூக்கள் சாற்ற வேண்டும். துளசி தளம் அர்ப்பணிப்பது மிகவும் புனிதமானது.கிருஷ்ணருக்கு  புதிய வஸ்திரம், மாலை, துளசி மாலை, பூமாலை அணிவிக்கவும்.கண்ணனை ஊஞ்சலில் (தொட்டில்) வைத்து ஆட்டிக்கொள்ளவும்.”கண்ணனுக்கு வெண்ணெய் கொடுக்கிறேன்” எனக் கூறி நைவேத்யம் சமர்ப்பிக்கவும். வெண்ணெய் நெய்யப்பம், அவல், பால், மோர் போன்றவை கண்ணனுக்கு மிகவும் பிரியமானவை. குறிப்பாக வெண்ணெய் மற்றும் அவல் அர்ப்பணிப்பது கண்ணனின் சிறப்பு விருப்பம்.முறுக்கு, வெல்ல சீடை, கார சீடை, சோமாசி மற்றும் உங்களுக்கு தெரிந்த பலகாரங்களை செய்து நைவேத்தியம் செய்யவும். மூன்று  முறை ஆரத்தி காட்டவும்.அப்போது பகவத்கீதை 12வது அத்தியாயம் பாராயணம் செய்யலாம். கோலாட்டம், நாம சங்கீர்த்தனம், ஜெய ஜெய கோஷங்கள் செய்யலாம். ஜென்மாஷ்டமி அன்று கண்ணன் பெயர்கள் 108 முறை சொல்ல வேண்டும். மனதில் ஒருமைப்பாடு இருந்தால், அதுவே மிகப்பெரிய பூஜை.

விரதம் இருக்கும் முறை

அன்று பெரும்பாலும்  நிர்ஜல விரதம் (தண்ணீர் கூட பருகாமல்) அல்லது பழம், பால், பன்னீர் போன்றவற்றை மட்டும் உட்கொள்ளலாம். விரதம் மேற்கொள்வது மனம் மற்றும் உடலை சுத்தமாக வைக்க உதவும்.

விஷ்ணு  சஹஸ்ரநாமம், கண்ணன் ஸ்லோகங்கள், கோவிந்த நாமம் தொடர்ந்து ஜெபிக்கவும்.

“ஓம் நமோ பகவதே வாஸுதேவாய” மந்திரத்தை குறைந்தது 108 முறை ஜெபிப்பது சிறந்தது.

பகவத்கீதையில் குறைந்தபட்சம் 12வது அல்லது 15வது அத்தியாயம் பாராயணம் செய்வது நல்லது.முடியுமானால் முழுவதையும் பாராயணம் செய்யலாம்.ஜகந்நாதர், ராதா-கிருஷ்ணன் பாடல்கள் பாடி, கீர்த்தனை செய்வது.சில இடங்களில் ராசலீலை, கோலாட்டம், பஜனை நடத்துவது வழக்கம்.

செய்ய வேண்டிய தான தருமங்கள்

பசுக்கள், பசுக்களுக்கு உணவு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது கண்ணனுக்கு மிகவும் பிடித்தது.

குழந்தைகளுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் கொடுப்பது புண்ணியம்

.பசுக்களுக்கு புல் கொடுக்கவும்.

துளசி செடிக்கு நீர் ஊற்றி நமஸ்காரம் செய்யவும்.

 கொண்டாட்டங்கள்

சிறுவர்கள் கிருஷ்ண வேடம் பூண்டு விளையாட்டுகள் நடத்துவர்.

சில இடங்களில் உறியடி விழா (குடம் உடைக்கும் விளையாட்டு) நடக்கும்.

குழந்தைகளை கிருஷ்ணன் அல்லது ராதை போல அலங்கரித்து வைத்துப் பூஜை செய்வது மிகவும் பக்திப் பரவசமான வழக்கம்.

கிருஷ்ணர் சிறுவயதில் வெண்ணையைக் களவாடியதை நினைவுபடுத்தும் விளையாட்டு.

தொங்கவிட்ட பானையில் பால், தயிர், வெண்ணெய் வைத்து அதை உடைப்பது.

கிருஷ்ணரின் வாழ்க்கையை விவரிக்கும் நாடகங்கள், கிருஷ்ணரின் போதனைகளை விளக்கும் ஆன்மிக சொற்பொழிவுகள் ஆகியவை நடைபெறும். இவற்றை காதுகளால் கேட்பதே மிகப் பெரிய புண்ணியமாகும்.

கிருஷ்ணர் கோவில்கள் அல்லது கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள் நடக்கும் இடங்களுக்கு சென்று மலர்கள் பறித்துக் கொடுப்பது, மாலைகள் கட்டிக் கொடுப்பது, அலங்காரம் செய்ய உதவி செய்வது ஆகியவையும் கூட கிருஷ்ணருக்கு நம்மை நெருக்கமானவர்களாக ஆக்கும்.

கிருஷ்ணரை போல் எந்த பாகுபாடும் பார்க்காமல் அனைவருடனும் அன்பையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து, மற்றவர்களுக்கு தானங்கள் வழங்கி அவர்களையும் மகிழ்விப்பது கண்ணனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.