ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் உண்டு. சந்திரன் எந்த நட்சத்திரத்தில் அமர்கிறதோ அதுவே அன்றைய நாளின் நட்சத்திரம் ஆகும். நாளைய தினம் சனிக்கிழமை 28-6 2025 ஆயில்யம் நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தின் தோற்றம் பாம்பு போல் காணப்படுவதால் சர்ப்ப நட்சத்திரம் என்றும் இதனைக் கூறுவார்கள். ஆயில்யம் என்ற வார்த்தையின் அர்த்தம் தழுவிக் கொள்ளுதல் என்பதாகும். இதன் தமிழ் பெயர் கட்செவி. அரவம். பெருமாள் பள்ளி கொண்டு இருக்கும் ஆதிசேஷ வடிவமாகும்.
லட்சுமணர் அவதரித்த நட்சத்திரம் ஆயில்யம் ஆகும். இவர் ஆதிசேஷனின் அம்சமாக கருதப் படுகிறார். இவர் பிறப்பு ராம அவதாரத்தில் நடந்தது. கிருஷ்ண அவதாரத்தின் போது அனந்தன் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தார். தற்போதைய கலியுகத்தில் நாகராஜா ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்ததாக ஐதீகம். எனவே தான் நாகராஜா ஆலயத்தில் ஆயில்ய நட்சத்திர தினத்தன்று வழிபாடு செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது.
நாகராஜா கோவிலுக்கும் ஆயில்யம் நட்சத்திரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே ஆயில்யம் நட்சத்திர நாட்களில் விரதம் இருந்து இந்த ஆலயத்துக்கு வந்து வழிபாடுகள் செய்தால் அதிக பலனைப் பெற முடியும்.மேலும் குறிப்பாக நாக தோஷம், சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் நாகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. நாகங்களை அடித்ததினால் ஏற்படுவது தான் நாக தோஷம். முற்பிறவியில் செய்து இருந்தாலும், தெரிந்தும் தெரியாமலும் செய்து இருந்தாலும் அந்த தோஷம் தாக்கலாம். பாம்புப் புற்றை அழித்து இருந்தாலும் நாக தோஷம் தாக்கும். இதனை எப்படி அறிந்து கொள்வது உங்களுக்கு சந்தேகம் வரலாம். நாக தோஷம் இருந்தால் சில பேருக்கு அடிக்கடி பாம்பு கனவில் வரும். பாம்பு துரத்துவது போல கனவு வரும். சில பேர் வீடுகளுக்கு அடிக்கடி பாம்பு வரும். இதனை வைத்து அறிந்து கொள்ளலாம். மேலும். ஜோதிட சாஸ்திரத்தின் படி ராகு தசை புத்தி மற்றும் கேது தசை புத்தி உள்ளவர்கள் ஆயில்யம் நட்சத்திர நாட்களில், நாகர் வழிபாடு செய்தால் தோஷங்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். என்றாலும் பொதுவாக யார் வேண்டுமானாலும் நாகரை வழிபடலாம்.
நாளைய தினம் ஆயில்ய நட்சத்திரம் என்பதால், எப்படி வழிபட வேண்டும் என்று பின்வரும் இந்தப் பதிவில் காண்போம்.
நாளைய தினம் நீங்கள் நாகர் கோவிலுக்கு செல்லுங்கள். அரச மரத்தடியில் பிண்ணிப் பிணைந்து இருக்கும் நாகர் சிலைகள் வைத்திருப்பார்கள் அல்லது ஏதாவது குளத்தங்கரையில் நாகர் சிலைகள் வைத்திருப்பார்கள்.அங்கு இரண்டு நாகங்கள் பிண்ணிப் பிணைந்து இருக்கும் சிலை இருக்கும். அங்கு சென்று நீங்கள் பூஜை மேற்கொள்ளலாம். பூஜைக்கு தேவையான பொருட்கள்.
நீர், பால், மஞ்சள், குங்குமம், விளக்கு, வெற்றிலை, தேங்காய், வாழைப்பழம், பூ.ஊதுபத்தி, கற்பூரம், மஞ்சள் கயிறு.
நாகர் சிலைக்கு உங்கள் கையால் முதலில் தண்ணீரில் அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு கொஞ்சம் பசும்பால் அபிஷேகம் செய்ய வேண்டும். மீண்டும் தண்ணீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு மஞ்சள் கலந்த தண்ணீரை கொண்டு அந்த சிலைகளுக்கு அபிஷேகம் செய்து சிலை முழுவதும் மஞ்சள் பூசி, குங்குமப்பொட்டு வைத்து, பூ வைத்து வெற்றிலை பாக்கு, பூ பழம் படைத்து ஊதுவத்தி ஏற்றி, இரண்டு மண் அகல் விளக்குகள் ஏற்றி வைத்து, அந்த நாகர் சிலையை 27 முறை வலம் வர வேண்டும். வெற்றிலை பாக்கு மேல் ஒரு மஞ்சள் கயிறை வைத்து வழிபாடு செய்து விட்டு வழிபாடு முடிந்து உடன் அந்த கயிற்றை எடுத்து கையில் கட்டிக் கொண்டால் மிக மிக நல்லது. மிக மிக எளிமையான வழிபாடுதான். இந்த வழிபாட்டை நாளைய தினம் செய்யும்போது அதி அற்புதமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.
நாக தோஷத்தால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுபட இந்த பரிகாரம் நிச்சயம் உதவியாக இருக்கும்.
September 12, 2025
September 12, 2025
September 11, 2025