Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு - 18-06-2025
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு – 18-06-2025

Posted DateJune 17, 2025

நாளை 18-06-2025 புதன்கிழமை – தேய்பிறை அஷ்டமி

ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்த வகையில் தேய்பிறை அஷ்டமி திதியும் மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அஷ்டமி என்றாலே வணங்க வேண்டிய தெய்வம் பைரவர் என்பதை  பலரும் அறிந்து இருப்பீர்கள் அதிலும் குறிப்பாக காலத்தின் கடவுளாக விளங்கும் கால பைரவரை வணங்குவதன் மூலம்,  நிலவு தேய்வது போல நமது பிரச்சினைகள் தேய்ந்து காணாமல் போகும் என்பது ஐதீகம்.

கால பைரவர்

கால பைரவர்,  சிவபெருமானின் ஒரு உக்கிர வடிவமாகக் கருதப்படும் ஒரு தெய்வம். இவர் சிவனின் காவல் தெய்வமாக, குறிப்பாக காசி நகரின் காவல் தெய்வமாக போற்றப்படுகிறார். கால பைரவர் நிர்வாணக் கோலத்தில், நாகத்தை பூணூலாக அணிந்தும், சந்திரனை தலையில் சூடியும், கையில் சூலாயுதம், பாசக் கயிறு போன்ற ஆயுதங்களைத் தாங்கியும் காட்சி தருகிறார். நவகிரகங்களும் இவரது உடலில் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே இவர் தலைவிதியை மாற்றும் ஆற்றல் கொண்டவர் என்று நம்பப்படுகிறது.பெரும்பாலும் சிவாலயங்களில் வடகிழக்கு திசையில் பைரவருக்கென்று தனி சன்னதி இருக்கும். கால பைரவர், எதிரிகளுக்கு அச்சத்தைத் தருபவர்; தன்னைச் சரணடைந்த பக்தர்களை சகல ஆபத்துகளில் இருந்தும் பாதுகாத்து, அவர்களுக்கு அனைத்து நலன்களையும் அருளக்கூடியவர்.

கால பைரவாஷ்டமி

பைரவரை வழிபடுவதற்கு உகந்த நாள் பைரவாஷ்டமி. இந்த நாளில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்வதன் மூலம், சகல கஷ்டங்களும் நீங்கி, செல்வமும், மகிழ்ச்சியும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

தேய்பிறை அஷ்டமி

நாளைய தினம் புதன் கிழமை 18.06.2025 தேய்பிறை அஷ்டமி நாள். பைரவருக்கு மிகவும் உகந்த நாளான தினத்தில் அவரை வழிபடுவதன் மூலம் உங்கள் கஷ்டங்கள் யாவும் தீரும். முறையான வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் கால பைரவரின் அருள் பக்தர்களுக்கு கிட்டும் என்பதில் சந்தேகமில்லை . நாளைய தினம் பைரவரை எப்படி வணங்க வேண்டும் என்றும் எப்படி வணங்கினால் அவரது அருளுக்கு பாத்திரம் ஆவோம் என்பதையும் இந்தப் பதிவில் காணலாம். அஷ்டமி வழிபாட்டை மாலை நேரத்தில் தான் செய்ய வேண்டும். அதாவது சூரிய அஸ்தமன நேரத்திற்குப் பிறகு மேற்கொள்ள வேண்டும். அருகில் இருக்கும் பழமையான சிவன் கோவிலுக்கு சென்று பைரவர் அபிஷேகத்தில் கலந்துகொண்டு, வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு. உங்களால் முடிந்த அபிஷேக பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.

விரதம் :
ஒரு சிலருக்கு விரதம் இருக்கும் பழக்க வழக்கம் இருக்கலாம். ஆனால் இது கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது இல்லை. முடிந்தவர்கள் விரதம் மேற்கொள்ளலாம். அப்படி பைரவருக்கு விரதம் இருக்கும் நாட்களில் பகலில் ஒரு பொழுது மட்டும் உணவு சாப்பிட வேண்டும். இரவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது. இப்படி முறையாக விரதம் இருந்து வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும்.

 தேய்பிறை அஷ்டமி வழிபாட்டு முறைகள் :

தேய்பிறை அஷ்டமி நாளில், பைரவரை வழிபட ஏற்ற நேரம், ராகு காலம். கால பைரவருக்கு செவ்வரளி மலர்கள் சூட்டி வழிபடலாம் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும் எந்த மலராக இருந்தாலும் சாத்தி பைரவரை வழிபடலாம். ஆலயங்களில், பைரவருக்கு வடைமாலை சாத்தியும் வேண்டிக் கொள்வார்கள். விளக்கேற்றி வழிபடலாம். அதிலும் பைரவருக்கு பஞ்ச எண்ணெய் விளக்கேற்றுவது மிகவும் விசேஷமானதாகும். பைரவர் சன்னதியில் பஞ்ச தீபம் ஏற்றி வைத்து, காலபைரவாஷ்டகம் பதிகத்தை படித்தால் பைரவரின் பரிபூரண அருள் கிடைக்கும். பஞ்சதீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகிய ஐந்தையும் தனித்தனியாக ஐந்து அகல்களில் ஊற்றி, அவற்றில் தீபம் ஏற்ற வேண்டும். பைரவருக்கு பஞ்ச தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். தீரவே தீராது என்ற பிரச்சனைகள் கூட தீர்ந்து விடும்.  கால பைரவருக்கு புனுகு வாங்கி சார்த்தலாம். முந்திரி பருப்பு மாலை கட்டி போடலாம். மாதுளம் பழம் முத்துக்களை உதிர்த்து பிரசாதமாக வைத்து அந்த பிரசாதத்தை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானமாக கொடுக்கலாம். தயிர் சாதம் நெய்வேத்தியம் வைத்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம்.

வழிபாட்டின் பலன்கள்

 கால பைரவரை வணங்குவதால், பயம் நீங்கும், துன்பங்கள் விலகும், வறுமை நீங்கும். செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கால பைரவர் அஷ்டமி திதியில் மிகவும் விசேஷமாக வழிபடப்படுகிறார். பைரவருக்கு உகந்த நாட்களில் அவருக்கு பூஜைகள் செய்து வழிபடுவதால் என்ன கஷ்டம் இருந்தாலும் அது நீங்கி விடும். வேண்டிய வரங்கள் கிடைக்கும்.