பங்குனி மாதத்தில் வரக்கூடிய உத்திரம் நட்சத்திரமும், பெளர்ணமி திதியும் இணைநது வரக்கூடிய நாள் தான் பங்குனி உத்திரம். ஒவ்வொரு மாதமும் உத்திரம் நட்சத்திரம் வரும். என்றாலும் பங்குனி மாதம் வருகின்ற உத்திர நட்சத்திரத்திற்கு மிகுந்த சிறப்புகள் உண்டு. பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் பௌர்ணமி சேர்ந்த வரும் நாளே பங்குனி உத்திரத் திருநாள் ஆகும். இந்தப் புண்ணியத் திருநாளில் தான் தெய்வத் திருமணங்கள் அதிகம் நடந்தன என்று புராணங்கள் வாயிலாக நாம் அறிய முடிகிறது. இதில் இருந்தே நாம் பங்குனி உத்திர நாளின் சிறப்பினைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். பங்குனி மாதம் வழிபாட்டுக்கு உரிய மாதம். பங்குனி மாதம் தெய்வங்களை வணங்குவதற்கும் பூஜைக்கும் உரிய மாதம். பங்குனி மாதம் திருமண வைபவங்களுக்கான மாதம். அற்புதமான பங்குனி மாதம் தெய்வ மாதம் என்றே போற்றப்படுகின்றது.
சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான்.
அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான். ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர்.
முருகப் பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்டதும் பங்குனி உத்திர நன்னாளில்தான். அதேபோல், ஸ்ரீவள்ளி அவதரித்த நாளும் பங்குனி உத்திரம் என்கிறது புராணம்.
ஸ்ரீராமபிரான்- சீதாதேவி, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த நன்னாள் பங்குனி உத்திரம் என புராணங்கள் விவரிக்கின்றன.
தேவர்களின் தலைவன் என்று போற்றப்படுகிற தேவேந்திரன் இந்திராணியைத் திருமணம் செய்து கொண்டதும் பங்குனி உத்திர நன்னாளில்தான்.
நவக்கிரகங்களில் ஒருவரான சந்திர பகவான், அழகும் திறனும் கொண்ட 27 நட்சத்திரக் கன்னியரை மணம் புரிந்தது இதே பங்குனி உத்திர நாளில்தான் என்கிறது புராணம்.
பர்வத ராஜன் தவத்தால் பத்மத்தில் அவதரித்த பார்வதியை சிவபெருமான் கரம் பிடித்த நாளும் இதுவே.
ஸ்ரீரங்க மன்னார்- ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்த நாளும் இதுதான்.
மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள். மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான்.
பங்குனி உத்திர வழிபாட்டு முறை:
பங்குனி உத்திர தினத்திற்கு முதல் நாளே வீட்டை சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சுப தினத்தன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து சுத்தமாகி விளக்கேற்றி பூஜை செய்ய தொடங்கலாம். பங்குனி உத்திரவிரதம் மேற்கொண்டு அருகே உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டால் சகல பாவங்களும் தொலையும். பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்த நாள். அவர்தம் பக்தர்கள் காவடி எடுப்பதற்கும், விரதம் இருப்பதற்கும் உகந்த நாள். செல்வம் படைத்த ஆன்மீக மெய்யன்பர்கள் இந்நாளில் முருகப் பெருமானுக்கு திருமணம் செய்விக்கலாம்.
பெண்களுக்கு திருமணம் வரம் தரும் விரதம்
பங்குனி உத்திரத்தன்று கடைபிடிக்கப்படும் விரதத்திற்கு கல்யாண விரதம், கல்யாண சுந்தர விரதம், திருமண விரதம் என அழைப்பதுண்டு. இந்த நாளில் திருமணமாகாத இளைஞர்களும், கன்னிப் பெண்களும் முருகன் மற்றும் சிவ பெருமானை திருமணக் கோலத்தில் கண்டு தரிசித்தால் அவர்களுக்கு நிச்சயம் திருமண பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை.
பங்குனி உத்திரத்தன்று திருமணமாகாத பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம் தான். அது போல திருமழப்பாடியில் நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்தான். அன்றைய தினம் கோவிலுக்கு வருகை தரும் சுமங்கலிகளுக்கு ஒரு ஜாக்கெட் பிட், வளையல், மஞ்சள், பூ, குங்குமம், வெற்றிலை, பாக்கு, ஒரு ரூபாய் வைத்து கொடுக்கலாம். உங்களால் எத்தனை பேருக்கு கொடுக்க முடியுமோ அத்தனை பேருக்கு இதை கொடுக்கலாம்.திருமணத்திற்காக காத்திருக்கும் ஆணோ அல்லது பெண்ணோ அவர்கள் கையால் கொடுப்பது நல்லது. நீங்கள் கொடுக்கக்கூடிய பொருட்களை சிறு, சிறு பைகளில் போட்டு, பூஜை அறையில் வைத்து வழிபட்டு கொடுப்பது நன்மை தரும்.
பங்குனி உத்திர விரத பலன்:
இந்த தினத்தில் திருமணத்திற்காக காத்திருக்கக்கூடியவர்களும், வேலை தேடுபவர்களும் விரதமிருந்து இறைவனை வழிபாடு செய்ய நினைத்தது நடைபெறும். அரசு தொடர்பான வேலைகள் கைகூடும். வேலை கிடைக்கவும், வேலையில் பதவி உயர்வு என பல நல்ல விஷயங்கள் நடக்கும்.
தீர்த்த வாரி
பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025