Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
பணக்கஷ்டத்தை நீக்கும் சுக்கிர சங்கடஹர சதுர்த்தி
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

பணக்கஷ்டத்தை நீக்கும் சுக்கிர சங்கடஹர சதுர்த்தி

Posted DateJanuary 15, 2025

   கஜாநநம் பூத கணாதி ஸேவிதம் கபித்தஜம்பூபல ஸாரபக்ஷிதம்

   உமாஸுதம் சோக விநாச காரணம் நமாமி விக்நேச்வர பாதபங்கஜம்

 ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காவது நாள் தேய்பிறை சங்கடஹர சதுர்த்தியாகவும் அமாவாசைக்கு அடுத்து வரும் நான்காவது நாள் வளர்பிறை  சங்கடஹர சதுர்த்தியாகவும் கொண்டாடப்படுகிறது. அதாவது தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதி சங்கடஹர சதுர்த்தி ஆகும். சங்கடம் என்றால் துன்பம். ஹர என்றால் அறுத்தல் அதாவது விடுதலை செய்தல். சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்களில் இருந்து விடுதலை அடையலாம்.

சங்கட ஹர சதுர்த்தியன்று காலையில் காலைக்கடன்கள் முடித்து நீராடி உபவாசம் இருந்து விநாயகர் சுலோகங்களை பாராயணம் செய்து மாலையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டு வீடு திரும்பி இரவில் உதயமாகும் சந்திரனை தரிசித்து வழிபாடு செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் சிற்றுண்டி அருந்தலாம். இவ்வாறு முழுவிரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் காலை சிற்றுண்டி அருந்தி மதியம் விரதம் இருந்து உணவு உண்ணாமல் இருந்து மாலையில் விநாயகர் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து இரவு சிற்றுண்டி அருந்தி விரதம் பூர்த்தி செய்யலாம்.

வரும் வெள்ளிக்கிழமை இந்த ஆண்டின் சக்தி மிக்க  சுக்கிர வார சங்கட ஹர சதுர்த்தி தினம்.தை மாத சுக்கிர வார (வெள்ளிக்கிழமை) சங்கடஹர சதுர்த்தி தினமான இன்று விநாயகருக்கு பிடித்தமான அருகம்புல் வைத்து வழிபட்டால் நம்முடைய சங்கடங்கள் நீங்கும் கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். இன்றைய தினம் தை மாத சங்கடஹர சதுர்த்தி விரதம் என்பதால் விரதம் இருக்க முடியாதவர்கள் மாலையில் விநாயகர் ஆலயத்திற்கு சென்று அருகம் புல் வைத்து வழிபடுவது சிறப்பானது.

பணம் தொடர்பான கஷ்டங்கள் அனைத்தையும் நீக்குவதற்கு விநாயகப் பெருமானுக்குரிய தை மாத சங்கடஹர சதுர்த்தி நாளன்று விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி  இந்த பதிவில் காணலாம்.

பொதுவாக சங்கடஹர சதுர்த்தி என்பது நம்முடைய கஷ்டங்களை நீக்கக்கூடிய சதுர்த்தியாக திகழ்கிறது. அதுவும் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி என்பது நம்முடைய பணம் தொடர்பான கஷ்டங்களை நீக்க உதவும். பணம் தொடர்பான கஷ்டங்களை நீக்குவதற்கு விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம். கணங்களின் அதிபதி கணபதி. நமத பிரச்சனை மற்றும் விக்னங்களை தீர்ப்பவர் விநாயகர். இந்த வழிபாட்டை சங்கடஹர சதுர்த்தி நாளான ஜனவரி மாதம் 17ஆம் தேதி காலையில் 4 மணியிலிருந்து 8 மணிக்குள் செய்யலாம். ஒரு வேளை காலை நேரத்தில் செய்ய இயலவில்லை என்னும் பட்சத்தில் மாலை 4 மணியிலிருந்து 8 மணிக்குள் செய்யலாம்.இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம்  எதிர்பாராத பண வரவு கிட்டும். இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம்.  திடீர் பணவரவு தரும் இந்தப் பரிகாரம் பற்றிக் காணலாம் வாருங்கள்.

முதலில் மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த பிள்ளையாரை ஒரு வெள்ளித் தட்டின் மீது அல்லது பித்தளை தட்டின் மீது வைத்துக் கொள்ளுங்கள். பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தமான அருகம் புல்லை தவறாமல் சாற்றுங்கள். ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய் முதலியவற்றை அவருக்கு முன் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் அவருக்கு பிடித்தமான கொழுக்கட்டை மற்றும் சுண்டல் செய்து வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை என்பதால் இன்றைய தினம் மொச்சை  சுண்டல் செய்யலாம்.  இதோடு ஒரு அச்சு வெல்லத்தையும்  வைக்க வேண்டும். இப்படி வைத்துவிட்டு அவருக்கு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு விநாயகப் பெருமானுக்கு உரிய மந்திரங்களாக அதுவும் குறிப்பாக பணம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய விநாயக மந்திரமாக இரண்டு மந்திரங்கள் இருக்கின்றன. இந்த இரண்டு மந்திரங்களையும் 108 முறை கூறி விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

“ஓம் வக்ரதுண்டாய ஹீம் நம”

லஷ்மி கணபதி மூலமந்திரம்

ஓம் ஸ்ரீம் கம் சௌம்யாய கணபதயே வரவரத ஸர்வஜனமே வசமானய நமஹ!”

இந்த மந்திரத்தை சொல்லி  முடித்து  மஞ்சள் நிற பேப்பரில் சிகப்பு நிற மையால் உங்கள் செல்வம் பெருக வேண்டும் என்று எழுதுங்கள்

இப்படி செய்து முடித்துவிட்டு தேங்காய் உடைத்து அந்த தேங்காய் தண்ணீரை வைத்து மஞ்சள் பிள்ளையாருக்கு சிறிதளவு அபிஷேகம் செய்ய வேண்டும். மஞ்சள் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்யும்பொழுது அந்த மஞ்சளானது கரைந்து கீழே வரும். அப்படி கரைந்து வரக்கூடிய மஞ்சளை எடுத்து  நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். வழிபாட்டை நிறைவு செய்த பிறகு விநாயகப் பெருமானுக்கு வைத்த அச்சு வெல்லத்தை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய அரச மரம் அல்லது ஆல மரத்தின் அடியில் வைத்து விட வேண்டும்.  சுண்டல் மற்றும் கொழுக்கட்டையை  வீட்டில் இருக்கக் கூடியவர்களுக்கு பிரசாதமாக தரலாம். மறுநாள் அதாவது சனிக்கிழமை அன்று நாம் எடுத்து வைத்திருந்த அந்த மஞ்சள் பிள்ளையாரில் சிறிதளவு மஞ்சளை எடுத்து அதனுடன் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். மீதம் இருக்கக்கூடிய மஞ்சளை துளசி செடியிலோ அல்லது வேறு ஏதாவது செடியிலோ கால்படாதபடி போட்டு விட வேண்டும்.

ஆத்மார்த்தமாகவும் பக்தியுடனும் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாளன்று இந்த மந்திரங்களை கூறி விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய பணம் தொடர்பான அனைத்து கஷ்டங்களும் நீங்கும் பணவசியம் உண்டாகும்.