அஞ்சனை புத்திரன் அனுமன். இவரை சிறிய திருவடி என்று அழைப்பார்கள். சொல்லின் செல்வனாக விளங்கும் அனுமன் சிறந்த ராம பக்தன். இவரை ராம பக்த அனுமன் என்றே அழைப்பார்கள். ராம நாமம் இருக்கும் இடத்தில் எல்லாம் அனுமன் இருப்பார் என்பது ஐதீகம். எனவே அனுமனை வணங்கும் போது ராம நாமம் ஜெபிப்பது ஜெயத்தை உண்டாக்கும். அனுமன் பலசாலி. வலிமை மிக்கவர். வீரம் நிறைந்தவர். ராம சேவை மற்றும் ராம பக்தி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டவர்.
வெற்றிலை மாலை, வடை மாலை, துளசி மாலை, வெண்ணெய் காப்பு, செந்தூரக் காப்பு ஆகியவை அனுமனுக்கு மிகவும் பிடித்தமானவை. இவற்றை சாற்றி வழிபடுவதன் மூலம் அனுமன் மகிழ்ந்து அருள் புரிவார். மேலும் அனுமனை வழிபட சனிக்கிழமை உகந்த நாள் ஆகும். இவை எல்லாவற்றையும் விட அனுமனை வழிபடும் போது ஸ்ரீ ராம ஜெயம் என்று சொல்லி வழிபட்டால் கூட அவர் மனம் மகிழ்ந்து அருள் புரிவார். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு துணையாக இருப்பார். வேண்டும் வரங்களை அருளுவார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த அனுமன் அவதரித்த தினத்தை ஆண்டு தோறும் அனுமன் ஜெயந்தியாக நாம் கொண்டாடுகிறோம்.அனுமன் அவதரித்த நட்சத்திரம் மூல நட்சத்திரம் ஆகும். எனவே ஒவ்வொரு மாதமும் வரும் மூல நட்சத்திர தினத்தன்று அவரை வழிபடுவது நல்லது.
தெய்வங்கள் மற்றும் அவதார புருஷர்களின் அவதார தினத்தை ஜெயந்தி என கொண்டாடுவது வழக்கம். அப்படி அனுமன் அவதரித்த தினத்தை அனுமன் ஜெயந்தியாக கொண்டாடுகிறோம். மற்ற எந்த தெய்வத்திற்கும் இல்லாத சிறப்பாக அனுமனுக்கு மட்டும் வருடத்திற்கு இரண்டு முறை ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில் மார்கழி மாத அமாவாசையுடன் வரும் மூலம் நட்சத்திரத்தில் அனுமன் அவதரித்ததாக கூறி அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஆனால் வட மாநிலங்களில் சித்திரை மாதம் பெளர்ணமியில் அனுமன் அவதரித்ததாக கருதி, அனுமன் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள்..
இப்படி இரு வேறு மாதங்களில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுவதற்கு மிக முக்கியமான, சிறப்பான காரணம் உள்ளது. வால்மீகி ராமாயணத்தின் படி, அனுமன் அவதரித்தது மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் என சொல்லப்படுவதால் அந்த நாளை அனுமன் ஜெயந்தியாக கொண்டாடுகிறார்கள். அதே சமயம் புராண கதைகளின் படி, சித்ரா பெளர்ணமி நாளில் தான் அனுமன் அவதரித்ததாக சொல்லப்படுவதால் அந்த நாளையும் அனுமன் ஜெயந்தியாக கருத்தில் கொண்டு பக்தர்கள் கொண்டாடுகிறார்கள்.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித் தனி மந்திரங்கள் உண்டு. அவற்றை நாம் ஜெபிப்பதன் மூலம் அல்லது பாராயணம் செய்வதன் மூலம் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற இயலும். அனுமன் அவதார நாளான அனுமன் ஜெயந்தி அன்று அனுமனை மந்திரங்கள் கூறி வழிபடுவதன் மூலம் நாம் நமது வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்களை எளிதாக கடக்க முடியும். அனைத்தையும் தாங்கும் வலிமையை அனுமன் வழங்குவார். அவற்றில் இருந்து நம்மை விடுவிப்பார். இந்த மந்திரங்கள் மனதை மட்டும் இன்றி உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்
இந்த மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பவர்களுக்கு அனுமான் எப்போதும் துணையாக இருந்து அருள் செய்வார். தனது பக்தர்களை எந்த ஆபத்துக்களும், பிரச்சனைகளும் நெருங்காத வகையில் காத்து அருள்வார்.
1.அனுமன் மூல (பீஜ) மந்திரம் :
ஓம் ஐம் ப்ரீம் ஹனுமதே
ஸ்ரீ ராம தூதாய நமஹ
2. அனுமன் காயத்ரி மந்திரம் :
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமத் பிரச்சோதயாத்
3. ஹனுமன் மூல மந்திரம் :
ஓம் ஸ்ரீ ஹனுமந்தாய நமஹ
4. ஆஞ்சநேய மந்திரம் :
ஓம் ஸ்ரீ வஜ்ரதேஹாய ராமபக்தாய
வாயுபுத்ராய நமோஸ்துதே
5. காரிய சித்தி அனுமன் மந்திரம் :
த்வமஸ்மிந் கார்ய நிர்யோகே
பிரமாணம் ஹரி சட்டமால்
ஹனுமான் யத்ன மாஸ்தாய
துகா க்ஷய கரோ பவ
6. ஸ்ரீ ஹனுமன் மந்திரா :
ஓம் நமோ பகவதே ஆஞ்சநேயாய
மஹாபலாய் ஸ்வாஹா!
ராம ப்ரிய நமஸ்துப்யம்
ஹனுமான் ரக்ஷ் சர்வதா
7. பக்த அனுமான் மந்திரம் :
அஞ்சனி கர்ப ஸம்பூத கபீந்த்ர
சசிவோத்தமால்
ராம ப்ரியா நமஸ்துப்யம்
ஹனுமான் ரக்ஷ் சர்வதா
அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக
ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் எம்மை அளித்துக் காப்பான்
September 19, 2025
September 17, 2025
September 15, 2025