நாம் பிறந்ததில் இருந்து நமது வாழ்வில் பல சுப காரியங்களை நடத்த வேண்டும் என்ற ஐதீகம் உள்ளது. அதாவது திருமணம்,சீமந்தம், குழந்தைப் பிறப்பு, நாமகரணம் என்னும் பெயர் சூட்டு விழா, அன்னப்பிராசனம், வித்யாப்யாசம், உபநயனம், கிரகப்பிரவேசம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்த சுப காரியங்களுக்கான நமது முயற்சிகளில் நாம் சில பல தடைகளையும் சந்திக்க வேண்டி இருக்கிறது. இது நமது முன்னேற்றத்தைத் தடுக்கிறது. எனவே நமது முயற்சிகளில் ஏதேனும் தடைகள் இருப்பின் அந்த தடைகளை நீக்குவதற்கு முருகப்பெருமானுக்கு எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
தீபம் என்றாலே வாரத்தின் மற்ற நாட்களை விட வெள்ளிக்கிழமை விசேஷ நாளாக இருக்கிறது. ஏனெனில் அன்று தான் நாம் நன்கு துலக்கிய விளக்குகளை ஏற்றுதல் குறிப்பாக காமாட்சி விளக்கு, குத்து விளக்கு என ஏற்றி பூஜைகளை மேற்கொள்வது பலருக்கு வழக்கமாக உள்ளது. அதனால் சுபகாரிய தடை நீங்க வேண்டும் என்று நினைப்பவர்களும் விரைவிலேயே சுப காரியம் நடைபெற வேண்டும் என்று நினைப்பவர்களும் வெள்ளிக்கிழமை அன்று வழிபாடு செய்ய வேண்டும்.
இன்றைய வெள்ளிக்கிழமை தினத்தில் முருகப்பெருமானின் திருக்கல்யாணம் சேர்ந்து வருகிறது. அதனால் இன்றைய தினமே இந்த தீப வழிபாட்டை நீங்கள் தொடங்கலாம். இன்றைய திருமணத்தடை நீங்குவதற்கும் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கும் வழிபாடு செய்தோம் என்றால் அதனுடைய பலன் விரைவிலேயே நமக்கு கிடைக்கும். பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். வள்ளி தெய்வானையோடு சேர்ந்திருக்கக்கூடிய முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் வைத்துக் கொள்ளுங்கள். குலதெய்வ படம் இருக்கும் பட்சத்தில் குலதெய்வப்படத்தையும் அருகில் வைத்துக் கொள்ளலாம்.
நீங்கள் வழக்கம் போல செய்யும் பூஜைகளை செய்து கொள்ளுங்கள். மஞ்சள், குங்குமம், அட்சதை, மலர்கள் சாற்றி வழிபாடு செய்யுங்கள். அடுத்ததாக புதிதாக இரண்டு அகல் விளக்கை எடுத்துவைத்து அதில் நெய் ஊற்றி பஞ்ச திரி போட்டு தீபமேற்றி எந்த சுபகாரியம் தடைப்பட்டு இருக்கிறதோ அது நடைபெற வேண்டும் என்று முருகப்பெருமானிடம் ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ள வேண்டும்.
இப்படி தொடர்ச்சியாக 18 வெள்ளிக்கிழமைகள் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். இரண்டாவது வாரம் தீபம் ஏற்றும் பொழுது நான்கு தீபமாக ஏற்ற வேண்டும். இப்படி ஒவ்வொரு வாரமும் இரண்டு தீபத்தை அதிகரித்துக் கொண்டே சென்று தீபம் ஏற்ற வேண்டும். 18 வது வாரம் 36 தீபங்களை ஏற்றி முடித்த பிறகு நெய்வேத்தியமாக வைத்த பிரசாதத்தை பிறருக்கு தந்து நீங்களும் உட்கொள்ள வேண்டும். இப்படி தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் 18 வாரம் நிறைவடைவதற்குள்ளாகவே எந்த சுபகாரியம் தடைப்பட்டு இருக்கிறதோ அது நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் வந்து சேரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025