இன்றைய தினம் சூரசம்ஹார விழா நடை பெறும். கந்த சஷ்டி முடிவு நாளான இன்றைய தினம் அனைத்து முருகன் ஆலயங்களிலும் இந்த விழா வெகு விமரிசையாக நடை பெறும். கொடும் அசுரனை முருகன் வேல் கொண்டு வதம் செய்து அவனை தடுத்தாட்கொண்ட நாள். சூரனுடன் போரிட்டு அவனுக்கு வரமளித்து சேவலாகவும் மயிலாகவும் மாற்றி ஏற்றுக் கொண்ட நாள். இன்றைய தினம் முருகனை வழிபடுவதன் மூலம் நாம் கேட்கும் வரங்கள் கிட்டும். முருகனை வழிபட எத்தனையோ நாட்கள் இருந்தாலும் இன்றைய தினம் மிகவும் அருமையான நாள் ஆகும்.
இன்றைய தினம் முருகனுக்கு உரிய பாடல்களைப் பாடுவதன் மூலம் மற்றும் கேட்பதன் மூலம் நம் மனதிற்கு அமைதி மற்றும் புத்துணர்ச்சி கிட்டும். முருகனுக்கு கந்த சஷ்டி கவசம், சண்முகக் கவசம், திருப்புகழ் என்று பல பாடல்கள் இருந்தாலும் கீழே அளிக்கப்பட்ட இந்த எளிய பாடலை இன்றைய தினம் பாடி முருகனை வணங்குவதன் மூலம் நமது தலையெழுத்து மாறும்.
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.
சொற்பிரிவு
சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே.
பொருள்
சேல் என்னும் மீன்கள் குதித்துத் திரிவதனால் திருச்செந்தூரில் உள்ள வயல்கள் அழிந்துபோயின; மலர்க்கொடி போன்ற பெண்களின் மனமானது சோலையிலுள்ள இனிமையான கடப்ப மலர்மாலையை விரும்பியதால் அழிந்துபோயிற்று. பெருமைதங்கிய மயில்வாகனத்தையுடையதிருமுருகப்பெருமானது வேலாயுதம் பட்டதால் கடலும் சூரபத்ன்மனும் கிரௌஞ்சமலையும் அழிந்துபோயின. இவ்வுலகில் கந்தவேளின் திருவடிகள் அடியேனின் தலைமீது பட்டதால் பிரம்மதேவனால் எழுதப்பட்டிருந்த [‘விதி’ என்னும்] கையெழுத்தும் அழிந்துபோயிற்று.
இந்தப் பாடலை சூர சம்ஹாரம் முடிந்த பிறகு குளித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் முருகப் பெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். தரையில் ஒரு விரிப்பை விரித்து வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு இந்த பாடலை பாட வேண்டும். எப்பொழுதும் வீட்டில் எந்த முறையில் சூரசம்கார நாள் அன்று பூஜை செய்வோமோ அதே போல் பூஜை செய்து முடித்துவிட்டு இந்த பாடலை பாடினால் போதும். உங்கள் தலை எழுத்து மாற்றும் இந்தப் பாடலை தவறாமல் இன்று பாடி முருகனின் அருளைப் பெறுங்கள்.
January 27, 2026
January 19, 2026
January 13, 2026
January 12, 2026