Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
கந்த சஷ்டி நாளில் கோவிலுக்கு வாங்கித் தர வேண்டிய பொருட்கள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கந்த சஷ்டி நாளில் கோவிலுக்கு வாங்கித் தர வேண்டிய பொருட்கள்

Posted DateNovember 1, 2024

முருகப்பெருமான் சூரனை அழித்த நாளை பெருமையுடன் போற்றி வழிபடும் விழாவே கந்த சஷ்டி விழா ஆகும். சஷ்டி என்பது ஆறாவது திதி ஆகும்.  மாதந்தோறும் சஷ்டி திதி வந்தாலும், முருகனுக்குரிய விரத நாட்கள் வந்தாலும், ஐப்பசி  மாதம் சுக்கிலபட்ச (வளர்பிறையில்) பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி (மகா கந்த சஷ்டி) காலமாகும். இந்த ஆறு நாளையும் முருக பக்தர்கள்  விரத நாட்களாக கருதுகின்றனர்.

முருகன் சூரனை அழித்தல்

ஆறு நாட்கள் நடைபெற்ற சூர சம்காரத்தின் முடிவில் சூரன் முருகனிடம் இருந்து தப்பிக்க மா மரமாக நின்றான். மா மரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய  வேலினால் முருகப் பெருமான் பிளந்தார். பிளவுபட்ட மாமரம்,  சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது  ஸ்கந்த புராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும்.கந்தபுராணத்தில் வரும்  சூரபத்மன், சிங்கமுகன் , தாரகாசுரன் ஆகியோர் முறையே ஆணவம், கன்மம், மாயை   என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. இந்த மும்மலங்களின் பிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும்.

 கந்த ஷஷ்டி விரதம்

முருகப் பெருமானுக்கு பல விரதங்கள் இருந்தாலும் அவற்றுள் முக்கியமான விரதமாகக் கருதப் படுவது கந்த சஷ்டி விரதம் ஆகும். மாதா மாதம் சஷ்டி விரதம் இருக்கலாம். என்றாலும் ஒரு சிலர் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய கந்த சஷ்டி திருவிழா சமயத்தில் மட்டும் விரதம் கடை பிடிப்பதும் உண்டு. அதிலும் ஆறு நாட்களும் தொடர்ச்சியாக விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். ஒரு சிலர் கந்த சஷ்டிஅன்று மட்டும் விரதம் இருக்கிறார்கள். இது அவரவர் சௌகரியத்தை பொறுத்து அனுசரிக்கப்படுகிறது. காலையில் எழுந்து முருகப் பெருமானை வணங்கி விளக்கேற்றி வைத்து வழிபட வேண்டும். ஆறு நெய் தீபங்களை ஏற்றி முருகப் பெருமானை வழிபாடு செய்வதும், அதே போல் மாவிளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்வதும் நல்ல பலனை தரும். முருகப் பெருமானுக்கு நைவேத்தியம் செய்து அன்றைய தினம் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். முடியாதவர்கள் பால் மற்றும் பழம் எடுத்துக் கொள்ளலாம். காலை அல்லது மாலை அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி விட்டு வழிபட்டு வரலாம். கந்த சஷ்டி நாளில் முருகர் ஆலயங்களில் சூர சம்ஹார விழா விமரிசையாக நடை பெறும். அன்றைய தினம் விரதம் இருப்பது மிகவும் சிறப்பு.

 கோவிலுக்கு வாங்கித் தர வேண்டிய பொருட்கள்

கந்த சஷ்டி அன்று முருகப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடை பெறும். எனவே அன்று ஆலயத்திற்கு செல்லும் போது வெறும் கையுடன் செல்லாமல் பூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டியது அவசியம். குறிப்பாக அபிஷேகத்திற்கு உண்டான பால், தயிர் வாங்கி தர வேண்டும். பால் அபிஷேகம் செய்வதன் மூலம் வாழ்வில் நாம் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தீரும். தயிரை வாங்கி நாம் அபிஷேகத்திற்கு தருவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.  சந்தனத்தை வாங்கி கொடுத்தால் தோல் நோய்கள் நீங்கும் என்றும், கண், காது, மூக்கு தொடர்பான நோய்களோ பிரச்சனைகளோ இருப்பவர்கள் அபிஷேகத்திற்கு தேன் வாங்கி தர வேண்டும் என்றும் கூறப்படுகிறது. மேலும் முருகப் பெருமானுக்கு உகந்த மலர்களை தனியாகவோ அல்லது மாலையாகவோ வாங்கி சாற்றலாம். முருகருக்கு வஸ்திரம் வாங்கி அளிக்கலாம்.

பலன்கள்

கந்த சஷ்டி நாள் அன்று முருகனை வழிபட்டு  அபிஷேகத்திற்கு உரிய பொருளை வாங்கி அளித்து மனம் உருக வேண்டிக் கொள்ள வேண்டும். அதன் மூலம் தீராத பிரச்சினைகள் தீரும். மன நோய் மற்றும் உடல் நோய்கள் அகலும். குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கு குழந்தை பிறக்கும்.