மனிதனின் ஆசைகளுக்கு முடிவே இல்லை என்று தான் கூற வேண்டும். ஒன்று கிடைத்தால் மற்றொன்று, அதன் பிறகு ஒன்று என்று இப்படி ஆசைகள் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் எல்லா ஆசைகளும் நாம் நினைத்தது நினைத்தபடி நடந்து விடுகிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். நாம் ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? அதற்கான முயற்சி வேண்டாமா? சிறு சிறு ஆசைகள் என்றாலும் அதற்கும் நமது முயற்சி அதற்கு கண்டிப்பாக தேவை. திருமணம், குழந்தைப் பேறு போன்ற நமது ஆசைகளுக்கு முயற்சியுடன் கூட இறை அருளும் அவசியம் தேவை. மேலும் நமது ஆசைகள் தடைகள் மற்றும் தாமதம் இன்றி நிறைவேற விநாயகப் பெருமானின் அருள் வேண்டும். நமது வேண்டுதல் நிறைவேற இறைவனிடம் நமது பிரார்த்தனையை செலுத்த வேண்டும். முழு முதற் கடவுளாக விளங்கும் விநாயகப் பெருமான் நமது வாழ்வில் வரும் தடைகளை நீக்கி நம் எண்ணங்கள் நிறைவேற அருளாசி வழங்குபவர்.விநாயகப் பெருமானை வழிபட மகா சங்கடஹர சதுர்த்தி முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்.
ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு குறிப்பிட்ட திதி சிறப்பானது. அந்த வகையில் விநாயகருக்கு சதுர்த்தி திதி சிறப்பு. விநாயகர் பிறந்தது வளர்பிறை சதுர்த்திதான். என்றாலும் தேய்பிறை சதுர்த்தி என்பது அவருக்கு பிடிக்கும். இதையே சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். ‘ஸங்கட ஹர’ என்றால் ‘சங்கடங்களை தீர்ப்பவர்’ என பொருள். இந்த சதுர்த்தியை விநாயகரே ஏற்படுத்தினார். குண்டாக இருக்கும் விநாயகரைக் கண்ட சந்திரன் கிண்டல் செய்தார். பதிலடியாக சாபமிட்டார் விநாயகர். அதற்காக வருந்திய சந்திரன் மன்னிப்பு கோரினார்.மன்னித்ததோடு தன்னுடன் சேர்த்து சந்திரனையும் வழிபட வேண்டும் என ஆணையிட்டார் விநாயகர். ‘தேய்பிறை சதுர்த்தியன்று விரதம் இருந்து வழிபட்டால் மனம் குளிர்வேன். சங்கடங்களை போக்குவேன். பூஜையின் முடிவில் சந்திரனையும் வணங்குங்கள்’ என்றார் விநாயகர்.மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் குடும்பத்தில் சங்கடங்கள் நீங்கி சுபிட்சம் பெருகும் என்பது ஐதீகம்.ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் சதுர்த்தி விரதத்தை கடைப்பிடிக்க தொடங்கி 12 மாதங்கள் விரதம் கடைப்பிடிப்பார்கள். விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக வரும் சதுர்த்திக்கு (ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி) மஹா சங்கடஹர சதுர்த்தி என்று பெயர். விநாயகப் பெருமானை வழிபட மகா சங்கடஹர சதுர்த்தி முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். வருடத்தின் அனைத்து சங்கடஹர சதுர்த்தி தினத்திலும் வழிபாடுகள் செய்த பலனை, மகா சங்கடஹர சதுர்த்தியில் வழிபடுவதால் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம். சதுர்த்தி அன்று விநாயகருக்கு வழிபாடு செய்பவர்களுக்கு எண்ணியது எண்ணியபடி நிறைவேறுவதாக ஒரு ஐதீகம் உண்டு.
வீட்டில் விநாயகரை வழிபடுபவர்கள், மஞ்சள், தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் போன்ற உலோகங்கள், கருங்காலி மர விநாயகர் அல்லது ஸ்படிக விநாயகரை வைத்து வழிபடலாம் .விநாயகரின் முன் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அவருக்கு மஞ்சள் குங்குமம் சந்தனம் சாற்ற வேண்டும். விநாயகருக்கு உகந்த எருக்கமாலை சாற்றி வழிபடுதல் சிறப்பு. விநாயகர் போற்றி கூறி அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். சாம்பிராணி மற்றும் தூப தீபங்களை காட்டி பூஜை முடிவில் ஆரத்தி எடுக்க வேண்டும். காலை அல்லது மாலை அருகிலுள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று, பூக்கள், தூபக் குச்சிகள், மற்றும் விளக்குகளை ஏற்றி வைத்து பூஜை செய்யலாம். இரு கைகளையும் ஒன்று சேர்த்து யாசிக்கும் படி இறைவனை பார்த்தவாறு கைகளை நீட்டி வழிபட வேண்டும். உங்கள் ஆசைகளை விநாயகரிடம் வைத்துவிட்டு தோப்புக்கரணம் போடுங்கள். பின்னர் முச்சந்திக்குச் சென்று சிதறு தேங்காய் ஒன்றை உடையுங்கள். உங்கள் வேண்டுதல்கள் பலிக்க, தடைகள் எதுவும் வராமல் இருக்க இந்த சிதறு தேங்காய் உடைப்பது நல்லது
இந்நாளில் விரதம் இருப்பவர்கள் காலை முதல் உண்ணாமல் இருந்து விநாயகரை வழிபட வேண்டும். விநாயகர் போற்றி, அஷ்டோத்திரம், அகவல், கவசப் பாடல்களை பாட வேண்டும். மாலையில் வானில் தெரியும் சந்திரனை தரிசித்து விட்டு விநாயகரை வழிபட வேண்டும். உப்பு, புளி, காரம் அதிகம் சேர்க்காத உணவைச் சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். இப்படி தொடர்ந்து ஒவ்வொரு சதுர்த்தி திதி அன்றும் விநாயகர் வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு, கடுமையான ஆசைகளும், கடுமையான வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும் கூட எளிதாக நிறைவேறும்.
மூஷிகவாஹன மோதகஹஸ்த
சாமரகர்ண விளம்பித சூத்திர .
வாமனரூப மஹேஸ்வரபுத்ர
விக்னவிநாயக பாத நமஸ்தே||
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹீ
தந்நோ தந்தி; ப்ரசோதயாத்
September 19, 2025
September 17, 2025
September 15, 2025