முன்னோர்கள் இறந்த மாதம், பட்சம், திதி அறிந்து, ஒவ்வொரு ஆண்டும் திதி கொடுப்பது அவசியம். இல்லாவிட்டால் குடும்பத்தில் சிரமம், பிரச்சினை, துயர சம்பவங்கள் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. முன்னோர் வழிபாட்டை முறையாக மேற்கொண்டால், இந்தப் பிரச்சினைகளில் இருந்து நாம் விடுபடலாம். சிலருக்கு தங்களுடைய முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் இருக்கலாம். அவர்களும் மகாளய பட்சத்தில் திதி கொடுக்கலாம். மகாளய பட்சத்தில் கொடுக்கப்படும் தர்ப்பணத்தால், ஓராண்டுக்கு திதி கொடுத்த புண்ணியம் கிடைக்கும். மற்ற மாதங்களில் அமாவாசை தர்ப்பணம் செய்யாதவர்கள் கூட இந்த மகாளய பட்ச தர்ப்பணத்தை தவிர்க்காமல் செய்ய வேண்டும்.
பித்ரு தோஷம், பித்ரு சாபம் என்பது, ஒருவருக்கு அவருடைய முன்னோர்களால் வருவதாக சிலர் சொல்வார்கள். ஒரு மகன் தன்னுடைய தாய்- தந்தையை உயிருடன் இருக்கும் பொழுது கவனிக்காவிட்டால் கூட, பசியால் வாடியபோதும், துன்பத்தை அனுபவித்த போதும், அந்த தாயும் தந்தையும் தன்னுடைய பிள்ளையை சபிக்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் இறந்த பிறகு சாபம் இடுவார்களா என்ன? பித்ரு தோஷம் (சாபம்) என்பது, நம் தாய், தந்தை, தாத்தா, பாட்டியால் வருவது அல்ல. அவர்களை சரியாக பராமரிக்காவிட்டால், பித்ரு தேவதைகள் நமக்குக் கொடுக்கக் கூடிய சாபம்தான், ‘பித்ரு சாபம்’ ஆகும். இதனால் நம்முடைய வாழ்வில் பலவிதமான துன்பங்கள் ஏற்படுகிறது. நமக்கு பித்ருக்களின் தோஷம் அல்லது சாபம் இருக்கிறதா? பித்ருக்கள் நம் மீது கோபத்தில் இருக்கிறார்களா என்பதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நமது வாழ்வில் நடக்கும் சில நிகழ்ச்சிகளை வைத்து நமக்கு பித்ரு தோஷம் உள்ளதா என்பதை அறியலாம். மேலும் துல்லியமாக அறிய சிறந்த ஜோதிடரை அணுகுவது சிறப்பு. அவர்கள் நமது ஜாதகத்தைப் பார்த்து பித்ரு தோஷம் உள்ளதா என்பதை அறிந்து கூறுவார்கள்.
திருமண தடை, குழந்தையின்மை :
தக்க வயது வந்தும் உங்கள் வீட்டில் உங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமணம் நடப்பதில் தாமதம் ஏற்படுவது. எந்த வரன் வந்தாலும் தட்டிச் செல்வது, பொருத்தம் அமையாமல் போவது போன்ற சில பல காரணங்களால் திருமணத்தில் தடை இருப்பது. ஒரு சிலருக்கு திருமணம் நடந்தும் பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது ஆகியவை முன்னோர்கள் தீராத கோபத்தில் இருக்கிறார்கள் என்பதைக் காட்டும் அறிகுறிகள் ஆகும்.
இறந்த நமது மூதாதையர்கள் கனவில் வந்து அமைதியாக இருந்தால் தோஷம் எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் நமது கனவில் வந்து அழுதால் அவர்கள் மன வருத்தத்தில் உள்ளார்கள் என்று அறியலாம். அவர்களது மன வருத்தமே நமக்கும் நமது சந்ததியர்க்கும் சாபமாக மாறும். அதை நீக்க அவர்களுக்கு தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்ய வேண்டும். பித்ருதோஷம் நீங்க பூஜைகள் செய்து வழிபடுவதுடன், ஏழை எளியவர்கள் மற்றும் தேவையானவர்களுக்கு தானங்கள் அளிப்பதாலும் பித்ருக்கள் மனம் மகிழ்ந்து, மன அமைதி பெறுவார்கள்.
உங்களுடைய சாப்பாட்டில் அடிக்கடி தலைமுடி இருக்கிறது என்றால் அதற்கு பித்ருக்களின் தோஷமே காரணமாக இருக்கும். உங்களின் பித்ருக்கள் பசியுடன் இருப்பதையும், நிறைவேறாத ஆசைகளுடனும், மன அமைதியின்றி வருத்தத்துடன் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் தான் உணவில் தலைமுடி இருப்பது.
காரணமே இல்லாமல் மனதிற்குள் ஏதோ ஒரு பய உணர்வும், பதற்றமும், கவலையும் உங்களுக்கு இருந்து கொண்டே இருப்பதாக உணர்ந்தால் அதற்கு பித்ரு தோஷம் காரணமாக இருக்கும். உங்களின் முன்னோர்கள் உங்கள் மீது அதிருப்தியில் இருப்பதை காட்டுவதன் வெளிப்பாடே ஆகும். வீட்டிலும் அடிக்கடி சண்டை வருவதும், இறுக்கமான சூழ்நிலை இருப்பதற்கும் இது தான் காரணம் என சொல்லப்படுகிறது.
நீங்கள் எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் உங்கள் செயல்களில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது. நீங்கள் முக்கியமான விஷயங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் ஏதாவது ஒரு தடை ஏற்பட்டுக் கொண்டே இருப்பது, சொல்ல முடியாத அளவிற்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருப்பது, வாழ்க்கையில் முன்னேற அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமல் தேக்க நிலையை எதிர் கொள்வது போன்றவை யாவும் முன்னோர்கள் உங்கள் மீது வருத்ததுடனும் கோபத்துடனும் உள்ளார்கள் என்று பொருள்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025