Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
அழகர்கோவில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பசாமி வரலாறு
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

அழகர்கோவில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பசாமி வரலாறு

Posted DateSeptember 24, 2024

கருப்பசாமி ஒரு கிராமக் காவல் தெய்வம் ஆவார். இவரை கருப்புசாமி என்றும், கருப்பன் என்றும் அழைப்பதுண்டு. இவர் குடிகொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். பொதுவாகப் பெண் தெய்வங்களின் காவல் தெய்வமாக இவர் உள்ளார். கருப்பசாமி அவர் அமர்ந்த இடங்களுக்கேற்றார் போல் பல நாமங்களில் அழைக்கப்படுகிறார். சங்கிலி கருப்பன், கருப்பனார் சாமி, குல கருப்பனார்,  பதினெட்டாம்படியான், வேட்டைக் கருப்பு, சின்ன கருப்புசாமி, பெரிய கருப்புசாமி, மீனமலை கருப்புசாமி, முன்னோடை கருப்பசாமி, நொண்டி கருப்பசாமி, ஒண்டி கருப்பசாமி என பலவிதமான பெயர்களில் தமிழக கிராமங்களில் மக்கள் கருப்பசாமியை வழிபடுகின்றனர்.

கருப்பசாமிக்கு பொய் என்பது சுத்தமாக பிடிக்காது. அவர் தர்மத்திற்கு மட்டுமே துணை நிற்பவர். தனது பக்தர்களுக்கு ஒரு சோதனை என்றால் காற்றை விட வேகமாக வந்து பிரச்னைகளை தீர்த்து வைப்பவர் கருப்பசாமி. கருப்பசாமியை வழிபடுவோரை தீமைகள், சாபங்கள், சூனியங்கள், போட்டி, பொறாமைகளிலிருந்து காப்பாற்றுகிறார். நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் வழங்குகிறார். தர்மத்தின் நியாயத்தை கருப்பசாமியிடம் நிச்சயமாகப் பெறலாம்.

அழகர் கோவிலும் கருப்பண்ண சாமியும்.

மதுரை மாவட்டம் அழகர்மலை பிரசித்தி பெற்ற ஆன்மீக ஸ்தலமாகும். அடிவாரத்தில் அழகர்கோயில். மலையின் நடுவே முருகனின் அறுபடை வீடான பழமுதிர்ச்சோலை. உச்சியில் ராக்காயிகோயில் என உள்ளது. இங்கு காவல் தெய்வமாக நிற்பவர் கருப்பசாமி. இவரை பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி என்று கூறுவார்கள். இவர் அங்கு அழகரையும் மலையையும் காத்து வருகிறார். இவருக்கு உருவம் இல்லை. மூடப்பட்ட கதவு பூசப்பட்ட சந்தனம், கதவை அலங்கரிக்கும் அழகிய நிலை மாலை என கம்பீரமாக காட்சி தருகிறார் கருப்பண்ணசாமி. மிகப்பெரிய அரிவாள் உள்ளது. பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதி கதவுகள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்பட்டு 18 சித்தர்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

கருப்பசாமி, அழகர்கோவில் காவல் தெய்வமான கதை :

கேரளாவை ஆட்சி செய்து வந்த அரசன் ஒருவன் பாண்டிய நாட்டுக்கு வந்தான். திவ்விய தேசமான திருமாலிருஞ்சோலைக்கு வந்திருந்த போது அங்கே எழுந்தருளியிருக்கும் கள்ளழகரின் அழகைக் கண்டு மயங்கினான். அழகரை கடத்திக்கொண்டு போய் தனது நாட்டில் வைத்துக்கொள்ள திட்டமிட்ட அந்த அரசன் நாடு திரும்பிய உடன் மந்திர,தந்திரங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற 18 மந்திரவாதிகளை தேர்வு செய்து பாண்டிய நாட்டுக்கு அனுப்பினான். அழகரை தூக்கி வரும்படி கட்டளையிட்டான். பதினெட்டு பேரும் மன்னனின் கட்டளையை நிறைவேற்ற அழகர்மலை வருவதற்கு ஆயத்தமானார்கள். மலையாள தேசத்தின் காவல் தெய்வமான கருப்பும் வெள்ளை குதிரை மீதேறி பதினெட்டு பேருக்கு முன்னே சென்றது. காவல் தெய்வத்தின் பின்னே மந்திரவாதிகள் அழகர்மலைக்கு வந்தனர்.

அழகர் மலையை அடைந்த காவல் தெய்வம், கருப்பண்ணசாமி அப்படியே அழகரின் அழகில் மயங்கி மெய் மறந்து நின்றது. 18 மந்திரவாதிகளும் தன்னுடன் வந்த காவல் தெய்வத்தை மறந்து, தங்க ஆபரணங்களையும் அழகரையும் தூக்கி செல்லும் எண்ணத்தில் கருவறை நோக்கி சென்றனர். இவர்களின் கெட்ட நோக்கத்தை கண்ட பக்தர் ஒருவர், ஊரில் உள்ள மக்களிடம் சொல்ல, மக்கள் அனைவரும் திரண்டு வந்தனர். மந்திரவாதிகள் 18 பேரையும் கொன்று, பெரிய கோபுரத்தின் முன்பாக பதினெட்டு படிகள் செய்து, படிக்கு ஒருவராக புதைத்தனர். மந்திரவாதிகளுக்கு காவலாக வந்து மயங்கி நின்ற கருப்பசாமிக்கு காட்சி தந்த கள்ளழகர் அழகர் மலையையும், தன்னையும் காவல் காக்குமாறு உத்தரவிட்டார். இதனையேற்று கருப்பசாமி அழகர் மலையிலேயே தங்கி இன்று வரை காவல் காத்து வருகிறார் என்பது நம்பிக்கை. 18 பேருடன் வந்த அவர் பதினெட்டு படிகளின் மீது நின்று காவல் தெய்வமாய் காட்சி தருகிறார்.அன்ற முதல் காவல் தெய்வமான கருப்பசாமி இம்மலையில் தங்கி இருந்து அழகர் மலையை இன்று வரை காத்து வருவதாக நம்பிக்கை உள்ளது. 18 பேருடன் வந்த தெய்வமாதலால் ,பதினெட்டு படிகளின் மீது நின்று காவல் தெய்வமாய் காட்சி தருகிறார்.

ஐயப்பனின் காவல் தெய்வமாக கருப்பு சுவாமி இருப்பதால் பத்தினெட்டாம்பாடி கருப்பு சுவாமியை அய்யப்ப பக்தர்கள் காவல் தெய்வமாக வழிபடுகின்றனர். அய்யப்பன் பக்தர்கள் கருப்பு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். இது தமிழர்களிடையே மிகவும் பிரபலமானது. இது கருப்பு சுவாமி பூஜை (மண்டல பூஜை) என்று அழைக்கப்படுகிறது. கருப்பு ஸ்வாமி (கரிமலை சங்கிலி கருப்பு சுவாமி) கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலில் உள்ள கரிமலை கோபுரத்தில் இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள்.

ஒருநாள் கோவில் பட்டர் கனவில் தோன்றிய கருப்பசாமி ,திருமால் பள்ளிகொண்ட திருவாயிலையும் மலையையும் காப்பேன் ,திருமாலின் அர்த்த ஜாம பூஜை பிரசாதங்களை தனக்கு படைக்குமாறு வேண்ட அன்று முதல் அழகருக்கு படைக்கப்படும் அர்த்த ஜாம பூஜை பிரசாதங்கள் பதினெட்டாம் படி கருப்பசாமிக்கு படைக்கப்படுகிறது .

கணக்கு கேட்கும் கருப்பு :

ஒவ்வொரு நாளும் அழகர்மலை கோவில் பூட்டபட்டதும் ,கதவின் சாவி பதினெட்டாம் படி கருப்பசாமியின் முன்பு வைத்துவிட்டு செல்வர். மறுநாள் காலை கோவில் திறக்கும் முன் ,பட்டர் கருப்பசாமியிடம் பெற்று கதவை திறக்கும் சம்பிரதாயம் இன்று வரை நடைபெற்று வருகிறது .

சித்திரை திருவிழாவிற்கு அழகர் ,மதுரைக்கு புறப்படும்போதும் ,மதுரையிலிருந்து கோவிலுக்கு திரும்பும்போதும் அழகர் அணிந்த நகைகள் எண்ணப்பட்டு ,அந்த பட்டியல் பதினெட்டாம் படி கருப்பசாமி முன்பு படித்து காட்டப்படும் .கோவில் நகைகளை காவல் தெய்வம் கருப்பசாமியே பாதுகாத்து வருகிறார் என்பது பல காலமாக தொடர்ந்து வரும் நம்பிக்கை.

இன்று வரை இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது . கள்ளழகருக்கு காவல் புரியும் கருப்பணசாமியை மக்கள் தங்கள் குல தெய்வமாக கொண்டு வழிபட்டு வருகின்றனர் .இன்றும் பதினெட்டாம் படி கருப்பசாமி முன் பல வழக்குகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. கருப்பசாமியிடம் முறையிட்டால் நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்பது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை.