விநாயகர் என்றாலே நமக்கு அவரின் யானை முகம் தான் நினைவுக்கு வரும். யானை முகத்துடன் கூடிய வினாயகரைத் தான் நாம் முழுமுதற் கடவுளாக வழிபடுகிறோம். எந்தவொரு செயலையும் செய்யத் தொடங்குவதற்கு முன் அவரின் அருள் வேண்டி அவர் பாதம் தொழுது பணிவது நம் வழக்கம். ஆனால் நமது தமிழ் நாட்டில் உள்ள கோவிலில் மனித வடிவில் காட்சி அளிக்கும் விநாயகர் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இவரை அனைவரும் ஆதி விநாயகர் என்று அழைப்பார்கள்.
அங்கும் இங்குமாகி அநாதியாய்ப் பலவாயானைத்
துங்கமா முகமும்தூய துதிக்கரம் தானுமின்றி
பங்கயப் பழனவேலித் திலதையாம் பதியின் மேவும்
புங்கவன் ஆதிநாதன் புதுமலர்த் தாள்கள் போற்றி
சாதாரண முகத்துடன் காணப்படும் இவரை நரமுக விநாயகர் என்றும் கூறுவார்கள். இவருக்கான கோவில் தமிழ்நாட்டில் கூத்தனூர் அருகே உள்ள திலதர்ப்பணபுரியில் அமைந்துள்ளது. இது மகிமை வாய்ந்த கோயில்களில் ஒன்றாகும். திலதர்ப்பணபுரி அல்லது ஆதி விநாயகர் கோயில் இந்தியாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற கோயிலாகும். இங்கு விநாயகர் யானைத் தலையுடன் இல்லாமல் மனித வடிவில் காட்சியளிக்கும் அரிய காட்சியைக் காணலாம்.
இந்த கோவிலின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, இங்கு விநாயகப் பெருமான் தனது அசல் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். தும்பிக்கை இல்லமால் மனித தலையுடன் வலது காலை தொங்க விட்டு இடது காலை மடக்கி இடது கையை இடது கால் மீது வைத்து சற்று சாய்ந்து அபய கரத்துடன் காட்சி அளிக்கிறார். ஒரு தடவை அன்னை பார்வதி விநாயகரை தனக்கு காவலாக இருக்கும்படி கூறி விட்டு நீராடச் சென்றார். மேலும் யாரையும் அனுமதிக்கக் கூடாது என்றும் கூறி விட்டுச் சென்றார். விநாயகப் பெருமான் அன்னையிடம் தலை வணங்கித் தன் கடமையைச் சிரத்தையுடன் செய்யத் தொடங்கினார். அதற்குள் சிவபெருமான் உள்ளே வந்து அந்த இடத்திற்குள் நுழைய முயன்றார். ஆனால், விநாயகப் பெருமான் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, ஆத்திரத்தில் சிவபெருமான் விநாயகரின் தலையை வெட்டினார். பின்னர், சிவன் தனது மகனின் தலையை வெட்டியதை அறிந்ததும், அவர் மனம் உடைந்தார், மேலும் பார்வதியும் சிவபெருமானின் செயலால் கோபமடைந்தார். பின்னர், அனைத்து தெய்வங்களும் பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றனர். பிறகு, வடக்கு திசையை நோக்கி உறங்கும் ஒருவரின் தலையைக் கண்டுபிடிக்க பிரம்மா சிவனையும் அவரது படையையும் வழிநடத்தினார். இறுதியாக, சிவனின் படை யானையின் தலையைக் கண்டுபிடித்து, விநாயகப் பெருமானின் தலையில் வைத்தது, அவரது உயிரை மீட்டெடுக்கிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, எல்லா தெய்வங்களும் விநாயகப் பெருமானுக்கு எண்ணற்ற வல்லமைகளை அளித்து, எந்தக் கடவுளுக்கும் முன்பாக அவர் எப்போதும் முதலில் வணங்கப்படுவார் என்று ஆசீர்வதித்தார்கள். சிவபெருமான் இவரைத் தன் படைக்குத் தளபதியாகவும் ஆக்கினார்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி, கயா, அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் ஆகிய 7 தலங்கள் சிறந்த தலங்களாக கருதப்படுகிறது. இதில் இத்தலம் ஐந்தாவது தலமாகும்.
இந்த ஆலயத்தின் சிறப்பம்சம் என்னவெனில் இறந்த ஆன்மாவிற்கு இங்கு பூஜை அல்லது யாகம் நடத்துவது, அவர்கள் எளிதாக முக்தி அடைய உதவும். இந்த கோவில் மனிதர்களுக்கு மன அமைதியையும், தருவதாக அறியப்படுகிறது. பக்தர்கள் இக்கோயிலில் பூஜை செய்வதன் மூலம் கர்ம தோஷங்களில் இருந்து விடுபடலாம்.
திருமாலின் அவதாரமான இராமன் தனது தம்பி லட்சுமனனுடன் இந்த தலத்திற்கு வந்து தங்களுடைய தந்தை தசரதர் மற்றும் ஜடாயு ஆகியோருக்கு எள் வைத்து பிதுர் தர்ப்பணம் செய்தனர். அதன் காரணமாக இங்குள்ள சிவலிங்கம் ‘முக்தீஸ்வரர்’ என்றும் இத்தலம் ‘திலதர்ப்பணபுரி’ என்றும் கூறப்படுகிறது.
தர்ப்பணம் செய்தபோது மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரையும் வணங்கி நான்கு பிண்டங்கள் பிடித்து வைத்து பூஜித்தார். இந்த பிண்டங்கள் லிங்கங்களாக மாறின. கருவறைக்குப் பின்புறத்தில் இந்த லிங்கங்களையும், ராமர், லட்சுமணர் இவ்வாறு தர்ப்பணம் செய்யும் நிலையுலுள்ள சிற்பத்தையும் நாம் காணலாம்
குடும்பத்தில் பெற்றோர்கள், பிள்ளைகள், புதல்விகள், பேரன், பேத்திகள் இடையே சுமூகமான, சாந்தமான உறவு நிலை ஏற்பட்டிட வழிபட வேண்டிய மிகவும் சக்தி வாய்ந்த விநாயக மூர்த்தி. குழந்தைகளுக்கு , பள்ளி பருவத்தினருக்கு நல்ல ஞாபக சக்தியை அளிக்க வல்ல மூர்த்தி.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025