பெருமாள் என்பது பெரும், அல் என்ற இரு சொற்களால் உருவானதாகவும் கருதப்படுகிறது. பெரும் என்றால் பெரியவர் என்றும் அல் என்றால் கடவுள் என்றும் பொருள். எனவே, பெருமாள் என்பது மக்கள் மீது தனது தெய்வீக அருளைப் பொழியும் “பெரும் கடவுள்”. இவருக்கு திருமால், விஷ்ணு மற்றும் பல பெயர்கள் உள்ளன. இவர் இந்து சமயத்தின் முக்கியமான கடவுள்களில் ஒருவரும் வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளும் ஆவார். மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு மூவுலகையும் காப்பவராக இருக்கிறார். இவர் பிறப்பும், இறப்பும் இல்லா பரம்பொருளாக இருப்பதால் பரப்பிரம்மன், பரமாத்மா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
பொதுவாக ஒவ்வொருவருக்கும் அவரவர் குடும்ப தெய்வம் அல்லது குல தெய்வம் இருக்கும். சிலருக்கு இஷ்ட தெய்வங்கள் இருக்கும். பொருளில்லாமல் இவ்வுலகில்லை, அருள் இல்லாமல் அவ்வுலகில்லை என்பார்கள். எனவே இந்த உலகில் வாழத் தேவையான லௌகீக அல்லது பௌதீக பொருட்கள் மற்றும் இன்பங்கள் நம்மை ஈர்க்கின்றன. அவற்றை அடைவதற்கு தான் நாம் முயற்சிகளை கையாள்கிறோம். முயற்சி ஒரு புறம் இருந்தாலும் இறைவனின் அருளும் வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. எனவே நாம் வேண்டியதை அடைய இறைவனை சரணாகதி அடைகிறோம். நமது தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டி இறைவனிடம் கையேந்துகிறோம். அந்த வகையில் நம்மைக் காக்கும் கடவுளான பெருமாளை எப்படி வேண்டினால் நமக்கு வேண்டியது கிட்டும் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
பொதுவாக இறைவனை வழிபட பக்தி அவசியம். இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்பதை விட நமக்கு எது உகந்ததோ அதை அருள வேண்டும் என இறைவனிடம் வேண்டுவது நல்லது. ஆனால் அதற்கு அதிக மனப் பக்குவம் வேண்டும். அனால் நாம் சாதாரண மனிதர்கள் தானே எனவே இறைவனிடம் எனக்கு இது நிறைவேற வேண்டும். கல்வி வேண்டும். வேலை வேண்டும். செல்வம் வேண்டும். பெயர் புகழ் வேண்டும் என இன்னும் பல நமது ஆசைகளைக் கூறி இறைவனிடம் நிறைவேற்றித் தருமாறு கேட்கிறோம். உண்மையான பக்தியும் நேர்மையான முயற்சியும் இருந்தால் நம்மால் அவற்றை அடைய இயலும்.
மும்மூர்த்திகளில் ஒருவரான பெருமாள் தான் நம்மை காத்து ரட்சித்து, நாம் நலமோடு வாழ்வதற்கு தேவையான பொன்னையும், பொருளையும் தரக்கூடிய தெய்வமாக திகழ்பவர். அப்படிப்பட்ட பெருமாளிடம் நம்முடைய வேண்டுதலை நாம் வைக்கும் பொழுது நியாயமான வேண்டுதலாக இருக்கும் பட்சத்தில் அது விரைவிலேயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது. பெருமாளிடம் வேண்டுதல் வேண்டி வழிபாடு மேற்கொள்ளும் தினம் பெருமாளை நினைத்து உபவாசம் இருக்க வேண்டும். விரதம் இருக்க முடியாதவர்கள் ஒரு வேளை சைவ உணவு உண்ணலாம். (பூண்டு, வெங்காயம் சேர்க்கக் கூடாது) இலையில் போட்டு சாப்பிட வேண்டும். இரவு பால் பழம் எடுத்துக் கொள்ளலாம். முடியாதவர்கள் ஏதாவது பலகாரத்தை சாப்பிடலாம். பெருமாளுக்கான இந்த விரதத்தை அவருக்கு உகந்த நாட்களான புதன் கிழமை அல்லது சனிக்கிழமை மேற்கொள்ளலாம். இந்த முறையில் தான் விரதம் இருக்க வேண்டும். தொடர்ச்சியாக ஒன்பது வாரங்கள் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். புதன்கிழமை செய்வதாக இருந்தால் 9 புதன்கிழமையும், சனிக்கிழமை செய்வதாக இருந்தால் 9 சனிக்கிழமையும் செய்ய வேண்டும்.
காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய பெருமாள் படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்துவிட்டு வாசனை மலர்களை சாற்ற வேண்டும்.. கண்டிப்பாக துளசி சாற்ற வேண்டும். துளசி மாலை பெருமாளுக்கு மிகவும் உகந்த விசேஷமான ஒன்றாகும். எனவே அதை தவறாமல் வைக்க வேண்டும். மாலை கிடைக்கவில்லை என்றால் ஒரு தளம் துளசியாவது வைக்க வேண்டும்.
பிறகு பெருமாள் படத்தின் முன்பு இரண்டு நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யுங்கள். அன்றைய தினம் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அப்படி செல்லும் பொழுது பெருமாளுக்கு வாசனை மிகுந்த மலர்கள், தாமரைப்பூ, துளசி போன்றவற்றை வாங்கி தர வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் அவருக்கு நாம் தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபமானது மாவிளக்கு தீபமாக இருக்க வேண்டும். வீட்டிலேயே பச்சரிசி மாவை தயார் செய்து அதனுடன் சிறிது வெல்லத்தை கலந்து மாவிளக்கு தயார் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பெருமாளுக்கு முன்னால் ஒரு இடத்தை சுத்தம் செய்து அதில் மஞ்சள் தடவி அதற்கு மேல் பச்சரிசி மாவால் கோலம் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு அதற்கு மேல் ஒரு வாழை இலையை வைத்து இரண்டு மாவிளக்குகளையும் அதன் மேல் வைத்துக் கொள்ள வேண்டும்.
மாவிளக்குகளுக்கு குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அதில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு அந்த மாவிளக்கிற்கு முன்பாக வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் என்று வைத்து கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். கற்பூரத்தை ஏற்றிய பிறகு நம்முடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை கூற வேண்டும். இந்த முறையில் தொடர்ச்சியாக ஒன்பது வாரங்கள் செய்ய வேண்டும். ஒன்பதாவது வாரம் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபாட்டை பூர்த்தி செய்து விட வேண்டும். இந்த பெருமாள் வழிபாட்டை பெருமாளின் மீது முழு நம்பிக்கை வைத்து செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் அவர்கள் வேண்டிய வேண்டுதல் நிறைவேறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025