திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இந்த தலத்தில் சனீஸ்வரர் இறைவனை வணங்கி பேறு பெற்றார். இத்தலத்தில் சனி பகவானை வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட சனி பிரச்சினைகள் தீரும்.
முதலில் திருநள்ளாறு நளதீர்த்தம் சென்று அந்த தீர்த்தக்குளத்தை மனதார வணங்கி குளத்தின் நடுவில் இருக்கும் நளச்சக்கரவர்த்தி-தமயந்தி மற்றும் குழந்தைகளின் உருவச்சிலைகளை வணங்கி வழிபடுதல் வேண்டும்.
காலை 5 மணிக்கு முன்பாகவே அங்குள்ள நள தீர்த்தத்தில் நீராடி, கரையில் இருக்கும் நள விநாயகரையும் பைரவரையும் வழிபட வேண்டும்.
பிறகு நல்லெண்ணெயை தலையில் தேய்த்துக்கொண்டு வடக்கு முகமாகவோ அல்லது கிழக்கு முகமாகவோ ஒன்பது முறை குளித்து தலைமுழுக்காட வேண்டும்.
பின்னர் பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் ஆகிய திருக்குளங்களுக்கும் சென்று தண்ணீர் தெளித்துக்கொள்ள வேண்டும்.
கோயிலில் உள்ள கங்காதீர்த்த கிணறை தரிசிப்பது மிக முக்கியம்.
பின்பு கோபுர வாசலுக்கு வநது ராஜ கோபுரத்தைத் தரிசிக்க வேண்டும்.
அடுத்ததாக, முதல் படிக்கட்டை வணங்கிக் கொண்டே, முதல் பிரகாரத்திற்குள் நுழைய வேண்டும். அங்கு சுவர்களில் நள சரித்திரங்கள் முழுதும் வரையப்பட்டிருக்கும். அது கண்கவர் காட்சியாக இருக்கும். அதை பார்த்துக் கொண்டே நீங்கள் காளத்திநாதரை வழிபடலாம்.

சுவாமி சன்னதிக்குள் நுழைந்ததும் மூலவரான தர்ப்பாரண்யேஸ்வரரை மனமுருக வணங்குங்கள்.
இவர் சுயம்புமூர்த்தியாக உள்ளார். தர்ப்பையில் முளைத்தவர் என்பதால் தர்ப்பாரண்யேசுவரர் எனப்படுகிறார். தர்ப்பையில் முளைத்த தழும்புடன் உள்ளார். இவரை திருமால், பிரம்மன், இந்திரன், திசைப்பாலர்கள், அகத்தியர், புலத்தியர், அர்ச்சுனன், நளன் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
பின்பு தியானவிடங்ககரர் சன்னதிக்கு சென்று அங்குள்ள மரகத லிங்கத்தை மறக்காமல் வழிபடுங்கள்.
அடுத்ததாக அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு சென்று வழிபட்ட பின் கட்டை கோபுர வாசல் என்று ஒரு வாயில் உண்டு. அதன்வழியே வர வேண்டும்.
அங்கு வந்தபின் அம்பாள் பிராணேஸ்வரி ஆலயம் இருக்கும். அங்கு சென்று வணங்கிக் கொள்ள வேண்டும். இங்குள்ள அம்பாள் சன்னதிக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. லலிதா சகஸ்ரநாமத்தில் பிராணேஸ்வரி, பிராணதாத்ரீ, பஞ்சாஸத்பீடரூபிணி என்று கூறியபடி அருள் பொழியும் அம்பாளுக்கு பிராணேஸ்வரி, பிராணநாயகி, பிரணாம்பிகை என்ற பெயர்கள் உண்டு. அம்பாளை தரிசிப்பவர்களுக்கு லட்சுமி கடாட்சம் ஏற்படும். கல்வி ஞானங்களில் சிறந்து விளங்குவார்கள்.
பக்தர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப அர்ச்சனை பூஜை, அபிஷேகம் மற்றும் ஹோமம் போன்றவற்றை செய்யலாம்.
இங்கு நடக்கும் நவக்கிரக ஹோமத்திலும் நீங்கள் பங்கு கொள்ளலாம்.
பரிகாரம் செய்ய வேண்டி வருபவர்கள் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு ஒரு நாள் தங்கி இருந்து சுவாமியை வழிபடுவது நல்லது.
January 27, 2026
January 19, 2026
January 13, 2026
January 12, 2026