Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
செல்வ வளம் அதிகரிக்க ஆடி அமாவாசை வழிபாடு
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

செல்வ வளம் அதிகரிக்க ஆடி அமாவாசை வழிபாடு

Posted DateJuly 4, 2024

ஒவ்வொரு அமாவாசையும் முன்னோர்களை வழிபடுவதற்கு உரிய நாள் என்றாலும் வருடத்தில் வரக்கூடிய மூன்று அமாவாசைகள் மிகவும் முக்கியமான அமாவாசையாக கருதப்படுகிறது. அவை தான் தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை ஆகும். இந்தப் பதிவில் நாம் காண  இருப்பது சிறப்பு மிகுந்த ஆடி அமாவாசை  ஆகும்.  செல்வ வளம் அதகரிக்க இந்த நாளில் நாம் என்ன செய்ய வேண்டும் எதனை தானம் அளிக்க வேண்டும் என்பதைப் பற்றிக் காண்போம்.

ஆடி அமாவாசை அதி விசேஷமான நாள் ஆகும். கடல் சார்ந்த ஆறுகள் சார்ந்த  திருக் குளங்கள்  சார்ந்த பகுதியிலில் விமரிசையாக கொண்டாடப்படும் நாள் ஆடி அமாவாசை நாள். நம்முடைய முன்னோர்களை நினைத்து நாம் செய்யக்கூடிய எளிமையான வழிபாடு தான் அமாவாசை வழிபாடு. நாம் ஏன் அமாவாசை வழிபாடு செய்ய வேண்டும். நாம் வாழ்வில் சந்திக்கும் பல தடைகள், தாமதங்கள், வியாபாரத்தில் தோல்வி அல்லது நஷ்டம், வேலையின்மை தொடர் நோய்கள், தீராத நோய்கள் இப்படி பல  பிரச்சினைகளுக்கு பித்ரு தோஷம் எனப்படும் முன்னோர்களின் சாபம் காரணமாக அமைகிறது என்பது ஐதீகம்.  தொட்ட காரியம் துலங்கவும். எடுத்த காரியத்தில் ஜெயிக்கவும், சிக்கல்கள் மற்றும் சிரமம் இன்றி வாழ்க்கை நடத்தவும் நமக்கு முன்னோர்களின் தயவு அவசியம். அவர்களின் ஆசி இருந்து விட்டால் நாம் வாழ்க்கையில் எந்த தடையும் இன்றி பணம் சம்பாதித்து செல்வச் செழிப்புடன் வாழ முடியும்.

தெய்வங்களின் அனுக்கிரகத்தைப் பெற்றுத் தருவது நமது பித்ருக்கள் எனப்படும் நமது முன்னோர்கள். அதாவது வாழ்ந்து இறந்து போன நமது வீட்டு பெரியவர்கள். அமாவாசை நாளில் அதான் நமது முன்னோரக்ளின் பரிபூரண ஆசிகள் நமக்கு கிட்டுகிறது. எனவே தான் ஒவ்வொரு அமாவாசையும் நாம் தவறாமல் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு அமாவாசையும் செய்ய முடியாதவர்களுக்கு இந்த ஆடி அமாவாசை கை கொடுக்கும். எனவே ஆடி அமாவாசையை மறக்காமல் தவறாமல் செய்ய வேண்டும். இறந்தவர்களுக்காக நீங்கள் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஆண்கள் தங்களுடைய தாய், தந்தை, மனைவி போன்றோர் இறந்த பிறகு அவர்களை நினைத்து அமாவாசை தினத்தன்று விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். பெண்களாக இருக்கும் பட்சத்தில் கணவனை இழந்தவர்கள் மட்டுமே இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். வேறு யாரும் இந்த விரதத்தை இருக்கக் கூடாது.

ஆடி அமாவாசை சடங்கை பல கோவில் குளங்கள் மற்றும் ஆற்றங்கரையில் நடத்துவார்கள். நீங்கள் அங்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்யலாம். அமாவாசை அன்று வீட்டில் இறந்து போனவர்களுக்காக எள்ளும் தண்ணீரும் விட வேண்டும். முன்னோர்கள் நமக்கு தெய்வமாக இருந்து நம்மை காகக் வேண்டும் என்று மாலை  அல்லது இரவில் கோவிலில் சென்று நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி விட்டு வரலாம்.

விரதம் இருக்கும் முறை :

காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து விட்டு விரதம் இருப்பவர்கள் (ஆண்கள்) காலையில் எதுவும் சாப்பிடாமல் மத்தியானம் விரத சமையலை காக்கைக்கு வைத்து முன்னோர்களின் படத்திற்கு முன்பாக படையல் போல போட்டு வழிபாடு செய்துவிட்டு பிறகு அந்த படையலை விரதம் இருப்பவர்கள் எடுத்து வைத்து சாப்பிட வேண்டும். இதுதான் விரதம் இருக்கும் முறை. சுமங்கலி பெண்கள் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு தான் அமாவாசை விரதத்திற்குரிய சமையலையே செய்ய வேண்டும். இரவில் கண்டிப்பாக ஓரு கவலமாவது உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். அமாவாசை தினத்தன்று வீட்டு வாசலில் கோலம் போடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் அன்றைய தினம் ஆடி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால் கோதுமையால் செய்யப்பட்ட சப்பாத்தியுடன் வெல்லம் கலந்து பசு மாட்டிற்கு தானமாக தருவதன் மூலம் செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது மிகவும் அவசியம். குறைந்தபட்சம் ஒரு நாலு பேருக்காவது உங்களால் முடிந்த அளவில் அன்ன தானம் செய்ய வேண்டும்.

பெண்கள் அமாவாசை சடங்கு செய்வது எப்படி

ஒரு சில வீட்டில் ஆண் குழந்தைகள் இருக்க மாட்டார்கள். பெற்றோர் இறந்த பிறகு அவர்களுக்கு சடங்கு செய்ய ஆண் வாரிசு இல்லாமல் பெண் பிள்ளைகளே இருப்பார்கள். அப்படிப்பட்ட பெண் பிள்ளைகள் தங்கள் பெறோர் இறந்த பிறகு வழிபாடு செய்ய முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் அன்றைய தினம் அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு வாங்கி தர வேண்டும். மேலும் பச்சரிசி வாழைப்பழம் வெல்லம் போன்றவற்றையும் பசு மாட்டிற்கு வாங்கித் தருவதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருளால் பணவரவும் செல்வ செழிப்பும் அதிகரிக்கும். இதனால் கடன் பிரச்சினை தீரும். மேலும் நம்முடைய முன்னோர்களை நினைத்து இந்த முறையில் வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய கர்ம வினைகளும் நீங்குவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும். மிகவும் எளிமையான இந்த ஆடி அமாவாசை வழிபாட்டு முறையை அனைவருமே மேற்கொண்டு தங்களுடைய முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பரிபூரணமாக பெற்று சிறப்புடன் வாழலாம்.