ஆடிக் கிருத்திகை முருகனுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் மக்கள் அனைவரும் முருகப் பெருமானை கொண்டாடுவார்கள். மாதம் தோறும் கிருத்திகை நட்சத்திரம் வரும் என்றாலும் ஆடிக் கிருத்திகை மிக விசேஷ நாளாகும். இந்த நாளில் முருகன் கோவிலில் மிகப் பிரம்மாண்டமாக திருவிழா நடைபெறும். இன்றைய தினத்தில் முருகனுக்கு அபிஷேகமும் ஆராதனைகளும் வழிபாடுகளும் நடக்கும். ஆடி மாதம் தட்சிணாயன துவக்க காலம் ஆகும். இது வழிபாட்டிற்கு உரிய மாதம் ஆகும். ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை நாளை உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் முருகப் பெருமானுக்கு செலுத்தும் முக்கிய நாளாக கொண்டாடுகிறார்கள்.
ஆடி கிருத்திகை ஜூலை 29 திங்கள் அன்று மதியம் 02:41 மணிக்கு தொடங்கி ஜூலை 30 செவ்வாய் அன்று மதியம் 01:40 மணிக்கு முடிவடைகிறது.
அன்றைய தினம் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெறும். குறிப்பாக அறுபடை வீடுகளில் இவ்விழா திருவிழாகவே கொண்டாடப்படும். பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, திருவீதி உலா என விமரிசையாக பல விழாக்கள், உற்சவங்கள் நடைப்பெறும். அறுபடை வீடுகளுள் திருத்தணி முருகன் கோவில் மிகவும் விசேஷம் ஆகும். ஆடிக் கிருத்திகை அன்று இங்கு காவடி எடுப்பது, அலகு குத்துதல், முடிகாணிக்கை தருதல் என நேர்த்திக் கடன் செலுத்த உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள். தமிழ் நாட்டில் மட்டும் இன்றி மலேசியா இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் இந்த நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
பொதுவாகவே பல தமிழ்ப் பெண்கள் ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை அன்று விரதம் மேற்கொள்வார்கள். அவ்வாறு மேற்கொள்ள இயலாதவர்கள் முருகனுக்கு மிகவும் உகந்த நாட்களாக கருதப்படும் ஆடி கிருத்திகை, கார்த்திகை கிருத்திகை, மற்றும் தை கிருத்திகை நாட்களில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தவும் செய்வார்கள். இவ்வாறு செய்தால் வருடம் முழுவதும் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.’
அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டை தூய்மைப்படுத்தி பூஜை அறையையும் சுத்தமாக வைத்துக் கொண்டு விளக்கு ஏற்ற வேண்டும். முருகன் படத்திற்கு செவ்வரளி மாலை சாற்றி குங்குமம் சந்தனம் சாற்ற வேண்டும். உப்பு இன்றி சமைத்து முருகனுக்குப் படைத்து ஒரு வேளை மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும். காலையோ அல்லது மாலையோ முருகன் கோவிலுக்கு சென்று அரச்சனை செய்து வர வேண்டும். இரவு பால் பழத்தோடு விரதத்தை முடிக்க வேண்டும்.அன்றைய தினம் கந்தர் சஷ்டி, கந்தர் அலங்காரம், திருப்புகழ் ஆகியவற்றை இறைசிந்தனையோடு பாராயணம் செய்து, மறுநாள் ரோகிணியன்று விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
ஆடிக்கிருத்திகை நாளில் விருதமிருந்து வழிபடுவோருக்கு முன் ஜென்ம வினைகள் யாவும் தீரும். செவ்வாய் தோஷம் அகலும்; திருமணத் தடைகள் நீங்கும். சொந்த வீடு, வாகன வசதி, தொழில் அபிவிருத்தி போன்றவை ஸித்திக்கும்
September 19, 2025
September 17, 2025
September 15, 2025