நமது அன்றாட வாழ்வில் நாம் பல காரியங்களை மேற்கொள்கிறோம். அவை அனைத்திலும் காரிய வெற்றி கிடைக்கிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். சில காரியங்கள் நாம் நினைத்தபடி நடக்கும். சிலது நடக்காமல் போகலாம். அதனால் தான் நமது முன்னோர்கள், எந்தவொரு காரியத்தை ஆரம்பிக்கும் போதும் நல்ல நேரம் பார்த்து செய்வார்கள். எந்த ஒரு நல்ல காரியங்களையும் நாள் நட்சத்திரம் பார்த்து தொடங்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆள் செய்யாததை நாள் செய்யும் என்று கூறுவார்கள்.
அது மட்டும் இன்றி ஒரு காரியத்திற்கு கிளம்பும் பொழுது அல்லது ஒரு காரியத்தை தொடங்கும் போது சகுனம் மற்றும் நிமித்தம் பார்ப்பது நமது முன்னோர்களின் வழக்கமாக இருந்தது. இந்தக் காலம் போல அவசரப்பட்டு எதையும் நினைத்த மாத்திரத்தில் செய்யமாட்டார்கள். நல்ல சகுனம், நல்ல நிமித்தம், நல்ல நேரம் போன்றவை இருந்தால் தான் காரியத்தை செய்யத் தொடங்குவார்கள். பஞ்ச அங்கங்கள் மட்டும் இன்றி அவர்கள் திசைகளுக்கும் முக்கியத்துவம் அளித்தார்கள். எந்தெந்த திசை எந்தெந்த காரியத்திற்கு வெற்றியை அளிக்கும் என்று அறிந்து அதன்படி செயல்பட்டார்கள். அதனால் தான் அவர்களால் எளிதில் வெற்றி காண முடிந்தது.ஆனால் இன்றைய அவசர யுகத்தில் நமக்கு அதற்கெல்லாம் நேரமும் இருப்பதில்லை.
ஒரு காரியத்தை நாம் செய்ய ஆரம்பிக்கும் பொழுது எந்த அளவுக்கு சரியாக ஆரம்பிக்கிறோமோ அந்த அளவிற்கு அந்த காரியத்தில் நமக்கு வெற்றி கிடைக்கும். அதற்கெல்லாம் நேரம் இல்லை என்பவர்கள் மங்களகரமான பொருளான மஞ்சளை நெற்றியில் தினமும் வைத்துக் கொள்வதன் மூலம் குரு பகவானின் அருள் கிடைப்பதோடு எந்தவித காரியத் தடையும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட மஞ்சளை நெற்றியில் வைத்துக்கொண்டாலும் அல்லது விரலி மஞ்சளாக எடுத்து நம்முடனே வைத்துக் கொண்டாலும் நமக்கு காரிய வெற்றி ஏற்படும். காரிய வெற்றிக்கு விரலி மஞ்சள் ஒன்று போதும்.
இந்த மஞ்சளை எடுத்து வைத்துக் கொண்டு “சிவய வசி” என்ற மந்திரத்தைக் கூறி காரியத்தை ஆரம்பித்தால் தடையின்றி அந்தக்காரியம் நடக்கும். ஒரு நாளைக்கு அல்லது ஒரு காரியத்திற்கு ஒரு மஞ்சளைத் தான் பயன்படுத்த வேண்டும். மறு நாள் அதனைக் கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். அடுத்த காரியத்திற்கு மீண்டும் ஒரு மஞ்சளை எடுத்துக் கொள்ள வேண்டும். மங்களகரமான இந்த மஞ்சள் உங்களுடன் இருக்கும் போது உங்கள் வாழ்வில் வரும் தடைகள் நீங்குகிறது. நேர்மறை ஆற்றல் பெருகுகிறது எனலாம்.
இத்துடன் நீங்கள் “வசம்பு“ எடுத்துக் கொள்ளலாம். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதற்கு பெயர் சொல்லாக் கிழங்கு என்று கூட கூறுவார்கள். அந்த வசம்பை தீயில் சுட்டு அத்துடன் நெய் சேர்த்து மை போல ஆக்கிக் கொள்ள வேண்டும். ஒரு காரியத்தைத் தொடங்கும் முன் இந்த மையை உங்கள் நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். இதற்கு வசீகரிக்கும் ஆற்றல் உண்டு. எனவே நீங்கள் நினைத்த காரியத்தை முடிக்க இதனை நெற்றியில் இட்டுக் கொண்டு “சிவய வசி” என்ற மந்திரத்தை கூறி வர வேண்டும்.
நம்பிக்கை இருந்தால் மேலே சொன்னதை முயற்சி செய்து பாருங்கள். உங்கள் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025