Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
வெற்றி தரும் அருகம்புல் வழிபாடு | Vetri tharum arugampul
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

வெற்றி தரும் அருகம்புல் வழிபாடு

Posted DateJune 6, 2024

இந்த கடவுளுக்கு பூஜை செய்யாமல் வேறெந்த கடவுளுக்கும் பூஜை நாம் செய்வதில்லை என்று கூறும் போதே அந்தக் கடவுள் யார் என்று நமக்கு தெரிந்திருக்கும். அதாவது அவர் இன்றி எந்த பூஜையும் இல்லை; அவர் தான் விநாயகர். வணங்குதற்கு எளியவர்.இவருக்கு உகந்த பூசைப் பொருள் அருகம்புல். இதற்கு துர்வா வில்வம் என்றொரு பெயரும் உண்டு.

இவருக்கு அருகம்புல் சாற்றி வழிபடுவதன் மூலம் மகத்தான பலன்கள் கிட்டும். நினைத்த காரியத்தை நடத்தித் தரக் கூடிய சக்தி இந்த வழிபாட்டிற்கு உண்டு. இந்த ஒரு பரிகாரம் நம் வாழ்வின் அனைத்தையும் நேர்மறையாக மாற்றும்.

விநாயகரும் அருகம்புல்லும்:

முதன் முதலாக விநாயகருக்கு அருகம்புல் புராண காலத்திலேயே சாற்றப்பட்டது என்பதை புராண கதை மூலம் அறியலாம்.  அனலாசுரன் என்ற ஒரு அசுரன் இருந்தான், அவன் கடுமையாக தவம் இருந்தான். இவன் தவத்திற்கு மெச்சிய பிரம்மா உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள் என்றார். அதற்கு அந்த அசுரன் நான் ஸ்பர்சிக்கும் (தொடும்) எதுவும் தீயாக மாற வேண்டும் என்று வரம் கேட்டான். பிரம்மாவும் வரத்தை அளித்தார். வரம் பெற்ற ஆணவம் அனலாசுரனுக்கு தலைக்கேறியது. அவன் பிரம்மாவை நோக்கி, நீங்கள் அளித்த வரம் செயல்படுகிறதா என்பதை உங்களை வைத்ததே சோதிக்கப் போகிறேன் என்று கூறி பிரம்மாவை தழுவப் போனான். கோபம் கொண்ட பிரம்மன் உனக்கு விநாயகரால் அழிவு உண்டாகும் என்று சாபம் கொடுத்து மறைந்து விட்டார். என்ற போதிலும் அவன் ஆணவம் அடங்கவில்லை. கண்ணில் கண்ட பொருட்கள், தேவர்கள், அசுரர்கள் என அனைத்தையும் அனல் மயமாக்கினான். இதனைக் கண்ட அனைவரும் ஈசனிடம் முறையிட ஈசன் அவனை அழிக்க விநாயகரை அனுப்பினார். விநாயகர் அனலாசுரனை அழிக்கக் கிளம்பினார். அவரைக் கண்ட அந்த அசுரன் விநாயகரைத் தழுவ முயன்றான். விநாயகர் தும்பிக்கையால் அவனைத் தூக்கி விழுங்கி விட்டார். அதன் காரணமாக வெப்பம் தாங்க முடியாமல் அவர் வயிறு மிகவும் எரிந்தது. இதனைக் கண்ட வருண பகவான் மழையைப் பொழிவித்தார். என்றாலும் எரிச்சல் அடங்கவில்லை. தேவர்கள் அவர் மீது அமிர்தம் பொழிந்தனர். அப்பொழுதும் அனலின் தாக்கம் அடங்கவில்லை. பிறகு துர்வா வில்வம் எனப்படும் அருகம்புல்லை கொண்டு வந்து அவர் மேனி முழுவதும் சாற்றி விட்டனர். அதன் பிறகு அனலின் தாக்கம் அடங்கியது. அப்பொழுது முதல் அவருக்கு அருகம்புல் சாற்றி வணங்கும் வழக்கம் வந்ததாக புராணங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

விநாயகருக்கு அருகம்புல் சாற்றுவதன் மகிமை:

பிருகர்தண்டி என்றொரு முனிவர் இருந்தார். அவர் சதா சர்வ காலமும் விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபட்டு வந்தார். அவரது துணைவியார் அவரிடம் இப்படி விநாயகருக்கு அருகம்புல் பூஜை மட்டுமே செய்து வந்தால் எப்படி நாம் ஜீவனம் செய்வது? நம் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என்றெல்லாம் கூறி முறையிட்டுக் கொண்டி இருந்தார். உடனே அந்த முனிவர் அந்த அம்மையாரிடம் கண்ணை மூடிக் கொள் என்று விநாயகருக்கு சார்த்திய ஒரு கைப்பிடி அருகம்புல்லை அளித்து உனக்கு என்ன வேண்டுமோ கேட்டுக் கொள் என்றார். அந்த அம்மையார் கண் திறந்து பார்த்தால் இந்திர லோகத்தில் இருந்தார். அங்கு அவரை வரவேற்ற இந்திரன், என்ன வேண்டுமோ கேளுங்கள் என்றார். அந்த அம்மையார் அந்த அருகம்புல்லை கொடுத்து இதற்கு ஈடாக என்ன தர முடியுமோ தாருங்கள் என்றார். உடனே இந்திரன் அதனை தராசு தட்டில் வைத்து தனது மோதிரத்தை வைத்தார். தட்டு ஏறவேயில்லை. மற்ற அணிகலன்களை வைத்தும். தட்டு கீழேயே தான் இருந்தது. முதலில் அவருக்கு காரணம் புரியவில்லை. பின்னர் இது விநாகருக்கு பூஜை செய்த அருகம்புல் அல்லவா? நாம் அவரை வணங்கவேயில்லையே என்று அறிந்து விநாயகரை மனதார வணங்க தராசு  தட்டு சமநிலைக்கு வந்தது.  அந்த பொருட்களை அந்த அம்மையார் சந்தோஷமாக பெற்றுத் திரும்பினார். எனவே அருகம்புல் வழிபாட்டின் மகிமை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

வாழ்க்கையில் நேர்மறையான மாற்றம் மற்றும் முன்னேற்றம் வேண்டும் ஆன்மீக அன்பர்கள் வினாயகரை அருகம்புல்  சாற்றி வணங்கி வர,  தடைகள் அகன்று முன்னேற்றம் பெறலாம். ஒரு பரிகாரம் உங்கள் வாழ்க்கையின் அனைத்தையும் மாற்றும் என்றால் அது விநாயகர் வழிபாடு தான். அதனைப் பற்றி நாம் இந்தப் பதிவில் காண்போம்.

விநாயகர் பூஜை

விநாயகர் படம் அல்லது விக்கிரகம் இருந்தால் அதற்கு தினமும்விளக்கேற்றி  மஞ்சள் குங்குமம் சாற்றி, பூக்கள் சாற்றி பூஜை செய்து, தூப தீபம் காட்டுங்கள். அருகம்புல் சாற்ற மறந்து விடாதீர்கள். பாலை நன்றாக காய்ச்சி அதில் கொஞ்சம் ஏலக்காய் நாட்டு சர்க்கரை போட்டு கலந்து பிள்ளையாருக்கு நெய்வேத்தியமாக வைக்கவும். பிறகு அதனை குடும்பத்தில் உள்ள அனைவரும் பருகுங்கள்.

விநாயகர் மந்திரம்

ஓம் சுபயோக ஐம் கிலீம் க்ரீம் கம் கணபதயே பாச சுமூக வசியும் பட் ஸ்வாஹா!

இந்த மந்திரத்தை  27 முறை குறைந்த பட்சம் சொல்ல வேண்டும். நேரம் இருந்தால் 108 முறை சொல்லலாம்

இதனை தொடர்ந்து நம்பிக்கையுடன் செய்து வர உங்கள் வாழ்வின் முன்னேற்றத்தில் உள்ள தடைகள் யாவும் நீங்கி நீங்கள் நலமாக வாழலாம். நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும் என்பது ஐதீகம். உங்கள் கல்வி, வேலை, உத்தியோகம், தொழில், திருமணம், குழந்தைப்பேறு  என அனைத்திலும் இருக்கும் தடைகள் நீங்கும்.