வாழ்வில் ஏற்றம் தரும் சக்திவாய்ந்த முருகன் கோயில். இங்கு சென்றால் பதவி உயர்வு கிடைக்குமாம்.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது பிரசித்தமான சொலவடை. பொதுவாக முருகன் கோவில் அனைத்தும் குன்றின் மீது அமர்ந்திருக்கும். அதில் இருந்து மாறுபட்ட ஒரு கோவில் நமது நாட்டில் உள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கப்பட்ட என்ற கிராமத்தில் ஒரு முருகன் கோவில் உள்ளது. இது பாதாள செம்பு முருகன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. பாதாள செம்பு முருகன் கோவில் திண்டுக்கல்லில், ராமாவரம் பகுதியில் உள்ள போகர் நகரில் அமைந்துள்ளது.
நவபாஷாண சிலையை உருவாக்கியவர் போகர் எனப்படும் தமிழ் சித்தர் என்பது நமக்கு தெரியும். இவரின் அடுத்த பிறவியாக சொல்லப்படுபவர் திருக்கடையூர் சித்தர். இவர் பஞ்சலோகங்களில் முருகன் சிலையை செய்து பாதாளத்தில் வைத்து வழிபட்டு வந்தார்.
இப்படி இந்த திருக்கடையூர் சித்தரின் வம்சா வழியாக வந்த சித்தர்களின் வாரிசுகள் தான் இந்த கோவிலை மேம்படுத்தி இன்று இந்த பாதாள செம்பு முருகன் கோவில் இந்த அளவு வளர்ந்து இருக்கிறது. அன்று திருக்கடையூர் சித்தர் செய்த பஞ்சலோக 650 வருட பழைய முருகன் சிலையை நீங்கள் இந்த கோவிலில் பார்க்க முடியும்.
இந்த பிரசித்தி பெற்ற பாதாள செம்பு முருகன் கோயிலில் பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் இந்த கோயில் கருவறை அமைந்துள்ளது. அதில் 17-க்கு 21 அடி என்ற கணக்கில் முருகன் சன்னதி அமைந்துள்ளது. அதில் 8-க்கு 8 என்ற அளவிலான கருவறையில் முருகன் வீற்றிருக்கிறார். பூமிக்கு அடியில் அதாவது பாதாளத்தில் செம்பினாலான முருகன் சிலை உள்ளது. இதனால் இது பாதாள செம்பு முருகன் என்ற பெயர் உருவானது.தரைதளத்தில் ஒன்றும், பாதாளத்துக்குள் (பூமிக்கு அடியில்) ஒன்றும் என 2 கருவறைகளை கொண்டதாக இக்கோவில் உள்ளது. பாதாளத்தில் உள்ள கருவறைக்குச் சென்று முருகப்பெருமானை வழிபடுவதற்கு பக்தர்கள் 18 படிகளை ஏறி இறங்கிச் செல்கின்றனர்.
இந்த கோயிலுக்குள் நுழையும் 12 அடி உயர சங்கிலி கருப்பு சிலை இருப்பதை நம்மால் பார்க்க முடியும். உலகிலேயே முருகன் கோயிலில் சங்கிலி கருப்பு சிலை இருப்பது இங்கு மட்டும் தான். மேலும் கோயிலின் முன்பு ஜலகண்டேஸ்வரர் சிலையும் உள்ளது. அதை தொடர்ந்து கால பைரவர் சிலையும் இருக்கும். அதனை தாண்டி செல்லும் போது 16 அடி ஆழத்தில் முருகனை 18 படி கொண்ட குகையில் இறங்கி சென்றால் பாதாள செம்பு முருகனை தரிசிக்கலாம்.
பொதுவாக முருகன் கோயில்களுக்கு செல்லும் போது ஏற்றமாகவும், திரும்பி வரும் போது இறக்கமான பாதையாகவும் இருக்கும். ஆனால் இந்த பாதாள செம்பு முருகன் கோயிலில் இறங்கி சென்று முருகனை தரிசித்துவிட்டு, ஏற்றமான பாதையில் வருவது சிறப்பு. இது நம் வாழ்விலும் ஏற்றத்தை கொடுக்கும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது. இந்த கோயிலுக்கு 9 வாரங்கள் தொடர்ந்து சென்றால் நினைத்த காரியம் கைக்கூடும் என்பது நம்பிக்கை.
இந்தக் கோவிலில் மூலிகைகள் கொண்டு திருநீறு தயாரிக்கப்படுகிறது.. 18 வகையான மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்படும் இந்த திருநீறு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த திருநீறு அமாவாசை, கிருத்திகை, சஷ்டி, செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் மட்டுமே கொடுக்கப்படுகிறது. திருநீறு தயாரிப்பதற்கு யானை சாணம், காரா பசுமாட்டு சாணம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலர்த்தி பொடியாக்கப்பட்ட சாணம், மூலிகைகள், பூக்கள் ஆகியவற்றை அளவீடு செய்ய, வெண்கலத்தால் ஆன கிண்ணங்கள் பயன்படுத்தப்படுகிறது. அதன்பிறகு அவை அனைத்தும் சாம்பல் ஆக்கப்பட்டு, மருத்துவம் மற்றும் நறுமணம் மிகுந்த திருநீறாக தயாராகிறது. ஒருமுறை திருநீறு தயாரிக்க 7 மாதங்கள் வரை ஆகிறது. எனவே நேரடியாக இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும். ஏனெனில் இறைவனை வழிபடும் பக்தர், தன்னுடைய நெற்றியில் பூசிக்கொள்ளும் வகையில் ஒரு சிட்டிகை அளவுக்குதான் விபூதி வழங்கப்படும். அதனால் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வாய்ப்பில்லை.
பல முன்னணி நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள் முக்கிய அதிகாரிகள் இந்த கோயிலுக்கு செல்வதாக கூறப்படுகிறது. பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால் அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த கோயிலில் முருகனின் பாதத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட கருங்காலி மாலை பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கருங்காலி மாலைகளை அணிவதன் மூலம் திருமண தடை நீங்கும் எனவும், குழந்தை பேறு கிடைக்கும் என்றும் செல்வம் பெருகும் என்றும் நம்பப்படுகிறது. மேலும் பஞ்ச பூதங்களின் துணை கிடைப்பதுடன் வீடு நிலம் சொத்துக்கள் சேரும் எனவும் ராகு, கேது செவ்வாய் தோஷம் நீங்கும் என்றும் கூறப்படுகிறது. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம் சொத்துகள் சேரும். கல்வி ஞானம் அதிகரிக்கும். குல தெய்வத்தின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதுமட்டுமின்றி உடலுக்கு குளிர்ச்சி ஏற்பட்டு மன இறுக்கம் விலகி உள்ளுணர்வு மேம்பாடு அடையும்.
மன அழுத்தம் குறைவதுடன் ரத்த அழுத்தம் சீராகும் என்றும் நம்பப்படுகிறது.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025