சொல்லின் செல்வன் என்றும் சிறிய திருவடி என்றும் போற்றப்படுவர் ஆஞ்சநேயர். அனுமன் வலிமைக்கு பெயர் போனவர். எனவே அனுமன் வழிபாடு எப்போதுமே வலிமையை தரக்கூடியது. அவரை வழிபடுவதன் மூலம் நம் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளையும் எதிர்ப்புகளையும் கூட பலமிழக்கச் செய்துவிடுவார் ஆஞ்சநேயப் பெருமான். அவரை தினமும் வழிபடலாம் எனினும் புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில், அனுமன் வழிபாடு செய்வது சிறப்புக்கு உரியது.
அஞ்சனை மைந்தன், அனுமான், ராம பக்தர். அனுமனுக்கு தனது நாமத்தைக் கூறுவதை விட ராமனின் நாமம் கூறுவது தான் பிடிக்கும் மற்றும் மகிழ்ச்சியை அளிக்கும். எவராலும் செய்ய முடியாத அசாத்தியமான செயல்களை கூட அநாயாசமாக செய்து முடிக்க கூடிய வலிமை பெற்றவர் அனுமான். தனது ராம பக்தி மூலம் எப்படி பக்தி செலுத்த வேண்டும் என்று கற்று கொடுத்தவர்.
ராம நாமம் ஒலிக்கும் இடத்தில் எல்லாம் நான் இருப்பேன் என்று அனுமனே கூறியுள்ளார்.
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூரண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்
‘எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்து கொண்டிருப்பவர் எவரோ, அவரே அனுமன் என்று தெரிந்துகொள் ‘ இதுதான் இந்த ஸ்லோகத்தின் பொருள். பக்திபூர்வமாக ராமநாமம் ஜபிக்கும் அனைவரும் ஆஞ்சநேயரின் அருளைப் பெற்று சிறக்க வாழலாம்.
மார்கழி மாதத்தில் வரும் அமாவாசை மற்றும் மூல நட்சத்திரம் வரும் நாளில் அனுமன் அவதரித்ததாக இந்து புராணங்கள் கூறுகின்றன. அதன்படி ஜனவரி 10-ம் தேதி மாலை மூல நட்சத்திரம் வருகிறது. ஜனவரி 11-ம் தேதி அமாவாசை தினமாகும். எனவே தமிழ்நாட்டில் நாளை ஜனவரி 11 அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த அனுமன் ஜெயந்தியில் வெற்றிலையும், வெண்ணையும் சாற்றி வழிபட்டால் கடன்கள் தீர்ந்து வாழ்வில் வளமும் வெற்றியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு மலர், இலை சாற்றி வழிபடுவது சிறப்பானது என்பார்கள். பெருமாளுக்கு துளசி, சிவனுக்கு வில்வம், மகாலட்சுமிக்கு தாமரை, முருகனுக்கு செவ்வரளி, விநாயகருக்கு அருகம்புல் என ஒவ்வொரு தெய்வத்தின் அருளை பெறுவதற்கும் ஒவ்வொரு இலை அல்லது பூவை சமர்பித்து வணங்குகிறோம். இதே போல் ஆஞ்சநேயருக்கு வெற்றிமலை மாலை சாற்றும் வழக்கம் உள்ளது. மற்றும் வெண்ணெய் காப்பு சாற்றும் வழக்கம் உள்ளது. இதன் பின்னணியில் காரணங்களும் இருக்கிறது அதனைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
சீதை ராவணனை சிறை வைத்த பொழுது அவளை தேடிக் கண்டுபிடித்தவர் அனுமான். மேலும் ராவணனோடு ராமன் நடத்திய போர் நிறைவுற்றது என்ற தகவலை அசோகவனத்தில் ராமரின் வருகைக்காக காத்திருக்கும் சீதா தேவியிடம் அனுமன் சென்று தெரிவித்தார் அனுமன். அனுமன் கூறிய இந்த செய்தியால் மனமகிழ்ச்சி அடைந்த சீதா தேவி, ஆஞ்சநேயருக்கு ஏதாவது பரிசு தர விரும்பினாள். உடனடியாக தனக்கு அருகில் படர்ந்து கிடந்த வெற்றிலைக் கொடியை எடுத்து, மாலையாக்கி அனுமனின் கழுத்தில் அணிவித்தாள் சீதை. சீதா தேவியின் கைகளால் அணிவிக்கப்பட்ட மாலையால் மனம் மகிழ்ந்தார் அனுமன்.எனவே தான் அனுமனுக்கு வெற்றிலை மாலை மிகவும் பிடித்தமானதாக அமைந்தது. நாமும் அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிப்பதன் மூலம் அவர் அகமகிழ்ந்து நமக்கு அருளை வழங்குவார் என்பது ஐதீகம்.
சீதையை சிறை மீட்க ராமன், ராவணனுடன் வானர சேனைகளுடன் சென்று போரிட்டார். அந்த போரில் அனுமாரின் பங்கு அளப்பரியதாக இருந்தது. அவர் வலிமையையும் உறுதியும் மிக்கவர் என்றாலும், போரில் பல காயங்களை அடைந்தார். போரும் முடிவுற்றது. அனுமாரின் திருமேனியில் இருந்த காயங்களைக் கண்ட அன்னை சீதை அவருடைய காயங்களில் வெண்ணெய் பூசி குணமடையச் செய்தார். எனவே அனுமனுக்கு வெண்ணெய் காப்பு மிகவும் பிடிக்கும்.
தனக்கு வெற்றிலை மாலை சாற்றுபவர்களுக்கும், வெண்ணெய் சாற்றுபவர்களுக்கும் ஆஞ்சநேயர் தனது அருளை தந்து அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார் என்பது ஐதீகம்.
நாளை அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. எனவே நாளை அனுமனுக்கு வெற்றிலை மாலையும் வெண்ணெயும் சாற்றி வழிபடுவது பல நன்மைகளை அளிக்கும். உங்களின் வேண்டுதல்கள் நிறைவேறும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025