தீபாவளி பண்டிகை என்றாலே சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஒரே கொண்டாட்டம் தான். புத்தாடை, பட்டாசு, இனிப்பு பண்டங்கள், தின்பண்டங்கள் என களை கட்டி நிற்கும். இந்த தீபாவளிப் பண்டிகையை முறையாக கொண்டாட வேண்டும் என்று நமது முன்னோர்கள் சில நியமங்களை கூறிச் சென்றுள்ளார்கள். அதன் வழியில் தான் நாம் தீபாவளி கொண்ட வேண்டும். என்றாலும் இன்றைய நவீன உலகில் அவரவர் தனித் தனி குடும்பமாக இருப்பதால் பண்டிகை விதிமுறை மற்றும் நியமங்கள் பல பேருக்கு தெரிவதில்லை என்றே கூற வேண்டும்.
தீபாவளி என்ற சொல்லை தீபம் + ஆவளி என்று பிரித்துக் கூறுவார்கள். தீபம் என்றால் விளக்கு ; ஆவளி என்றால் வரிசை. இதனை தீபங்களின் வரிசை அல்லது விளக்குகளின் வரிசை என்று கூறலாம். தீபாவளி அன்று நாம் விளக்குகளை ஏற்றினாலும் அதில் முக்கியமானதாக எம் தீபம் ஏற்றப்பட வேண்டும். அதனைப் பற்றி நாம் இந்தப் பதிவில் காணலாம்.
தீபாவளி அன்று விடியற்காலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இதனை கங்கா ஸ்நானம் என்று கூறுவார்கள். தீபாவளி அன்று மட்டும் வெந்நீரில் கங்கை இருப்பதாக ஐதீகம். அன்று காலையும் மாலையும் வீட்டில் விளக்குகளை ஏற்றி இறைவனை வழிபடுவது வழக்கம். குறிப்பாக அன்று லக்ஷ்மி குபேர பூஜை செய்வது முக்கியம்.
இதில் மிக முக்கியமானது தீவாளிக்கு முன் நாள் ஏற்ற வேண்டிய எம தீபம். நம் முன்னோர்கள் புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசையில் பூலோகத்துக்கு வருகின்றனர். அவர்களை நாம் வழிபட்டு அந்நாளில் திதி கொடுக்கிறோம். எமலோகத்தில் இருந்து வந்த முன்னோர்கள் மீண்டும் தீபாவளி முதல் நாளில் திரும்பி செல்வதாக ஐதீகம். அவர்கள் திரும்பி செல்ல வழியும் வெளிச்சமும் காட்டுவது இந்த எம தீபம் என்கிறது சாஸ்திரம்.
இந்த தீபத்தை எங்கு ஏற்ற வேண்டும் எப்படி ஏற்ற வேண்டும் என்றஐயம் உங்களுக்கு எழலாம்.இந்த தீபத்தை தீபாவளிக்கு முன்தினம் மாலை தான் ஏற்ற வேண்டும். ஆனால் இந்த தீபம் ஏற்றப்படும் நேரத்தில் தேய்பிறை திரியோதசி திதி இருக்க வேண்டும். இந்த வருடம் திதியானது வெள்ளிக்கிழமை (10.11.23) பிரதோஷத்தன்று மாலை தான் இருக்கிறது. அடுத்த நாள் சனிக்கிழமை மதியத்துடன் இந்த திதி முடிந்து விடுகிறது. ஆகையால் சனிக்கிழமை மாலை ஏற்றாமல் வெள்ளிக்கிழமை மாலை இந்த தீபத்தை ஏற்றி விட வேண்டும். இந்த தீபம் குறைந்தது ஒரு மணி நேரம் எரியும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இந்த தீபத்தை நாம் வீட்டில் நிலை வாசலுக்கு வெளியில் வைத்து தான் ஏற்ற வேண்டும். வீட்டிற்குள் ஏற்றக் கூடாது. அதே போல் தெரு வாசலிலும் ஏற்றக் கூடாது. இந்த தீபத்தை அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி ஊற்றி ஏற்ற வேண்டும். இந்த தீபமானது சற்று மேல் நோக்கி வைத்து ஏற்ற வேண்டும். அதற்கு உயரமாக செங்கல் மனை போன்ற ஏதாவது உயரமாக வைத்து ஏற்ற வேண்டும். இந்த தீபம் தெற்கு நோக்கி எறிய வேண்டும். நாமும் தெற்கு நோக்கி நின்று தான் தீபத்தை ஏற்ற வேண்டும். அதாவது தீபத்திற்கு பின்னால் நின்று ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை மட்டும் நாம் தீபத்திற்கு முன் நின்று ஏற்றக் கூடாது. அதே போல் இந்த தீபம் ஏற்ற நீங்கள் பயன்படுத்தும் அகலை மறுபடியும் வீட்டிற்குள் கொண்டு வந்து பூஜை அறையிலோ மற்ற பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது. இந்த தீபத்திற்கு பயன்படுத்தும் அனைத்தையும் தீபம் ஏற்றியவுடன் வெளியே போட்டு விட வேண்டும்.
விபத்து மற்றும் எதிர்பாராத விதமாக துர்மரணம் அடைந்தவர்களை நினைத்து எம தீபம் ஏற்றினால் அவர்கள் ஆன்மா சாந்தி அடையும் என்றும் அவர்களின் ஆசி குடும்பத்துக்குக் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள்.
எம தீபம் ஏற்றி வழிபடுவதால் பல நன்மைகள் உண்டாகின்றன. குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் நீங்கிக் குடும்பம் விருத்தியாகும். சொத்துப் பிரச்னைகள் தீரும். நோய்கள் நீங்க ஆரோக்கியம் பெருகும். திருமணத்தடை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளும் நீங்கி நல்வழி கிடைக்கும்.
September 12, 2025
September 12, 2025
September 11, 2025